தமிழரின் பண்பாடான விருந்தினரை ஏழடி நடந்து சென்று வரவேற்றலும் வழியனுப்புதலும் குறித்து காலில் ஏழடிப் பின்சென்று (பொரு.166) என்னும் பாடல் வரியால் அறியமுடிகிறது.
காலி னேழடிப் பின்சென்று கோலின்
தாறுகளைந் தேறென் றேற்றி வீறுபெறு
பேரியாழ் முறையுழிக் கழிப்பி நீர்வாய்த்
தண்பணை தழீஇய தளரா விருக்கை
பாடினியின் கேசாதி பாத வருணனை பொருநருடன் இருக்கும் பாடினி அழகு மிக்கோளாக இருந்தாள் என்று புகழ்ந்து அவளது தலை முதல் கால் வரை 19 உறுப்புகள் இதில் வருணிக்கப்பட்டுள்ளன. (பொருந:25-47).
அவையாவன: கூந்தல், திருநுதல், புருவங்கள், கண்கள், வாய், பற்கள், காதுகள், கழுத்து, தோள்கள், முன்கைகள், மெல்விரல், நகங்கள், மார்பகங்கள், கொப்பூழ், நுண்ணிடை, அல்குல், தொடைகள், கணைக்கால், பாதங்கள் என்பன.
பொருநனுடன் செல்லும் பாடினியின் அழகை வருணிக்கிறார் நூலாசிரியர்.
பாடினியின் கழுத்தோ நாணத்தால் நாணிக்கோணும்.
மென்முடி இருக்கும் நீண்ட முன்கையோ தோளில் அசைந்தாடும்.
மலை உச்சியில் பூத்த காந்தள் மலர் போலிருக்கும் அவளுடைய மெல்லிய விரல்கள், கிளியின் வாயி போலும் கூர்மையானவை அவளுடைய விரல் நகங்கள்.
பல மணிவடங்கள் கோத்த மேகலை அணிந்த இடையும் உடையவள் அவள்.
பெரிய பெண் யானையின் பெருமை உடைய துதிக்கை போல நெருங்கித் திரண்ட இரு தொடைகளையும் உடையவள்.
தொடையோடு பொருந்திய மயிரொழுங்குடன் கூடிய அழகிய கணைக் காலுக்கு இணையான அழகுடையது, “நாய் நாவின் பெருந்தகு சீறடி” என்ற வரியின் மூலம் ஓடி இளைத்த நாயினுடைய நாக்கைப் போன்றது அவளுடைய பாதங்கள் என்று முடத்தாமக்கண்ணியார் வருணிக்கிறார்.
பொருநன் கடும் பசியில் உள்ளான்.
அதனைப் போக்குவதற்கு கரிகால்பெருவளத்தான் உள்ளான் என்பதை அடையா வாயில் அடைக நீயும் என்கிறார்.
“ஆடுபசி உழந்த நின் இரும்பேர் ஒக்கலொடு
நீடு பசி ஒராஅல் வேண்டின் நீடு இன்று
எழுமதி வாழி ஏழின் கிழவா!” (பொருநராற்றுப்படை 61-63)
என்ற வரிகளின் மூலம் பொருநனின் பசித்துயரம் என்பது கொல்லுகின்ற பசித்துயரால் வருந்தும் பொருநன் உன் சுற்றத்தருடன் நீண்ட நாள் பசியைப் போக்க இன்றே புறப்படு ஏழிசை யாழ் நரம்புக்கும் உரிமை உடையவனே உடனே செல்க. ஏனெனில் உன் பசி போக வேண்டுமானால் கரிகால் பெருவளாத்தானைப் பார்.
பசித்துன்பத்தைப் பற்றிக் கூறும் ஆசிரியர், பழுத்த பழமரங்களை விரும்பித்தேடிச் செல்லும் பறவை போல கரிகால் பெருவளத்தானுடைய கோட்டை அடையா வாயிலாக காத்து திறந்திருக்கும்.
பொருநன் கூறுகிறான், அடையா நெடுங்கதவுடைய ஆசார வாசலை அடைந்தேன்.
வாயிற்காவலனைக் கேட்காமலே உள்ளே நுழைந்தேன்.
வயிற்றுப் பசிதீர என்னுடைய வறுமை நீங்க உண்டேன்.
இளைத்த என்னுடல் பருத்தது.
இரையுண்ட பாம்பின் உடல் போலானது.
களைப்பு நீங்கிய நான், என் கையில் இருந்த கண்ணகன்ற உடுக்கையைத் தட்டி இரட்டை சீர் உடைய தடாரிப் பண்ணை தாளத்திற்கு ஏற்ப இசைத்தேன்.
வெள்ளி முளைக்கும் வைகறைப் பொழுதில் நான் பாடத் தொடங்கு முன்பே நட்பு கொண்ட உறவினரைப் போல் கரிகால் பெருவளத்தான் என்னை வரவேற்று உபசரித்தான்.
கரிகாற்பெருவளாத்தானைக் கண்டு பரிசில் பெற சென்ற இடத்து பொருநனுக்குக் கிடைத்த உபசரிப்பு பற்றிக் கூறும் போது எங்கள் பற்கள் ஏர் உழுவது போல் சோறு உழுதன என்று ஞா. மாணிக்கவாசகன் குறிப்பிடுகிறார்.
இரும்புக் கோலில் கோர்த்து வேக வைத்த சூடான இறைச்சியை வாயின் இடதுபுறமும் வலது புறமும் மாற்றி வைத்து உண்ண ஓயாது உபசரித்தான்.
இதை மேலும் உண்ணுவதை வெறுத்து வேண்டாம் என்ற போது, முல்லை மொக்கு போன்ற தவிடு நீங்கிய முனை முறியாத விரல் நுனி போன்ற அரிசி சோற்றை போட்டு பொறிக்கறியோடு உண்ணவைத்தான்.
இதைத்தான் முரவை போகிய முரியா அரிசி என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
கூர்மைப் படுத்தப்பட்ட அரிசி சோறு போட்டதை பெருமைப் பட பொருநன் குறிப்பிடுகிறான்.