கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Showing posts with label இரட்டுறமொழிதல் இன்பம். Show all posts
Showing posts with label இரட்டுறமொழிதல் இன்பம். Show all posts

Tuesday, March 02, 2021

காளமேகப்புலவரின் வசையும் புகழும் ஒரே பாடலில் ... KALAMEGA PULAVAR SILEDAI SONG

ஒரு முறை நாகைப் பட்டினத்தில் உள்ள காத்தான் வருணகுலாதித்தன் என்பவரது சத்திரத்திற்குக் காளமேகப் புலவர் உணவு உண்பதற்குச் சென்றிருந்தார். அப்போது நீண்ட நேரமாகியும் உணவு பரிமாறப்படவில்லை. ஆகவே கோபமடைந்த காளமேகப்புலவர் இப் பாடலைப் பாடினார்.

பாடல் :

கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போது அரிசிவரும்; குத்தி
உலையில்இட ஊர்அடங்கும் ; ஓர்அகப்பை அன்னம்
இலையில்இட வெள்ளி எழும்.

விளக்கம் :

அதிக அலையோசை உடைய கடலால் சூழப்பட்ட நாகைப் பட்டினத்தில் உள்ள காத்தானின் சத்திரத்தில் சூரியன் மறையும் (மாலை நேரத்தில்) பொழுது அரிசி வரும். 
ஊரில் உள்ள அனைவரும் தூங்கிய பின்னரே அதை உலையிலிட்டு உணவாக்குவர். 
அதை உண்பவர்க்குப் பரிமாறும் பொழுது நடுஇரவு ஆகிவிடும் என்று வசையாகப் பாடியுள்ளார்.

பாடலைக் கேட்டவுடனே வந்திருப்பது காளமேகப்புலவர் என்று அறிந்துகொண்ட காத்தான், தன் சத்திரத்தின் பெயர் கெட்டுவிடக்கூடாது என்று எண்ணி வசைமீட்சிப் பாடல் பாடுமாறு கேட்டுக்கொண்டான். மறுபடியும் இதே பாடலைப் பாடிய புலவர் வேறு விளக்கம் கொடுத்தார்.

விளக்கம் :

அதிக அலையோசை உடைய கடலால் சூழப்பட்ட நாகைப் பட்டினத்தில் உள்ள காத்தானின் சத்திரத்தில் நாட்டில் பஞ்சம் பட்டினி உள்ள (அத்தமிக்கும்)  பொழுது அரிசி மூட்டைகள் கணக்கிலடங்காது வந்து இறங்கும். 
அதை சமைத்து (உலையில் இட்டு) ஊர்மக்களுக்குக் கொடுக்க அனைவரின் பசியும் அடங்கும். 
அவ்வாறு சமைக்கப்பட்ட அன்னத்தை(சோறு) இலையில் போடும் பொழுது அது நட்சத்திரத்தைப் போல் பிரகாசிக்கும் என்று வசையாகப் பாடியப் பாடலைப் புகழ்ச்சிப் பாடலாகப் பாடியுள்ளார் புலவர்.

Monday, June 29, 2020

எட்டுவரையா - தமிழ்ச் சொல்லின் எட்டு விதமான பொருள்களும் விளக்கமும் தமிழ் மொழியின் சிறப்பு ONE TAMIL WORD EIGHT MEANING TAMILIN SIRAPPU

1) எட்டு +வரையா 
எட்டு மலைகளா
எட்டு கின்ற மலைகளா
எட்டு வரையிலுமா
எட்டு கோடுகளா
2) எள்+துவரை+ஆ
எள்ளும் துவரையும் பசுவும்
3) எட்டு +வரை+ஆ
எட்டு மலைப் பசுக்கள்
4) எள்+துவரையா
எள்ளும் துவரையுமா
5) எள்+துவரையா 
இகழப்படும் துவரையா
6) எட்டுவர்+ஐயா
அடைவர் ஐயா
7) எள்+துவரை+யா
எள்ளும் துவரையும் யா மரமும்
8)எள்+துவர்+ஐயா 
எள்ளானது துவர்ப்பாக உள்ளது ஐயா

தமிழ் மொழிக்கே உரிய சிறப்பு

Friday, June 19, 2020

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர் ... இரட்டுறமொழிதல் SILEDAI KAAKKAI KARI SAMAITHU KARUVADU...

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர் 

காக்கா கறி சமைச்சி,
கருவாடு  உண்பவர்களா சைவர்கள்.?

இங்குதான்தமிழ் விளையாடுகிறது!!!

இதன் அர்த்தத்தைக் கேளுங்கள் வியந்து போவீர்கள்.

காக்கை = கால் கை அளவு
கறி சமைத்து = காய்கறி சமைத்து
கரு வாடுமென்று= கரு என்பதான உயிர் வாடும் என்று
உண்பர் சைவர் = உண்பவர்கள் சைவ சமயத்தை சார்ந்தவர்கள்!

இன்னும் விளக்கிக் கூறவேண்டுமானால்..

"சிவனை மட்டும் வழிபாடு செய்யும் 
சைவ சமயத்தைச் சேர்ந்த பக்தர்கள், 
ஒரு கை அளவிலான காய் கறிகளை எடுத்து  அதில் நான்கில் ஒரு பாகத்தை  மட்டுமே சமைத்து,
இந்த உடலில்உயிர் தங்கவேண்டும் என்பதற்காக வெறும்
கால் வயிறு மட்டுமே உண்டு காலத்தை ஓட்டுவார்கள்"
என்றுதெளிவு படுத்தலாம்.

இத்தகைய விரத வாழ்வினால், சிவனடியார்கள்...
எப்போதும் ஒல்லியான தேகத்துடன் இருப்பார்கள்.

இந்த நிலைதான் முக்திக்கு வழிகாட்டியான...
தவம், யோகம் போன்றவைகளை சிறப்பாகப் பயில முடியும் என்பது அவர்கள் பயின்றது!

கி.வா.ஜகந்நாதன் அவர்களின் இரட்டுறமொழிதல் கி.வா.ஜ. நகைச்சுவை SILEDAI KI.VA.JA.

கி.வா.ஜ அவர்களின் நகைச் சுவை

கி.வா.ஜகந்நாதன் ஒரு ஊருக்கு
பேச்சாளராகச் சென்றார்.  
அவருக்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்பவர், "தங்களுக்குப் பூரி பிடிக்குமா? என்று கேட்டார்.
அதற்கு இவர், 'ஜகந்நாதனுக்குப்
பூரி பிடிக்காமல் இருக்குமா?' என்று சொல்ல, அருகிலிருந்த அனைவரும் அவரது சமயோசித பதிலைக் கேட்டுச் சிரித்தனர்.

கி வா ஜ உதிர்த்த முத்து

ஒரு கல்யாண வீட்டில் சாப்பிட்டு விட்டுக் கை கழுவ வந்தார், கி வா ஜ. 
ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து அவர் கை கழுவத் தந்தார், ஒரு அன்பர்.

சாதாரணமாக நீரில்தான் குவளை இருக்கும் !!
இங்கே குவளையில் நீர் !!

கி. வா. ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். 
அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் பழுதாகி விட்டது. 

அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். 
அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை. 

கி.வா.ஜ உடனே  *“இம்மைக்கும் சரியில்லை,  அம்மைக்கும் சரியில்லை"* என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல, அனைவரும் ரசித்தனர். 

ஒரு குழந்தைக்கு, அதன் அம்மா உப்புமா ஊட்டிக் கொண்டிருந்தார். 
எதனாலோ அந்தப் பழைய உப்புமா குழந்தைக்குப் பிடிக்கவில்லை. 
அருகில் இருந்தார் கி.வா.ஜ.

'உப்புமாவைத் தின்ன' முடியலையோ! உப்புமா ஏன் தொண்டையைக் குத்துகிறதா'' எனக் குழந்தையைக் கோபித்துக் கொண்டார், அந்தப் பெண்மணி.

கி.வா.ஜ. அந்தப் பழைய உப்புமாவை வாங்கி வாயில் போட்டுக் கொண்டு பார்த்தார். 

பிறகு, ''ஆமாம். இந்த உப்புமா தொண்டையைக் குத்தத்தான் செய்யும்'' என்றார்.

ஏன் என்று அந்த அம்மா கேட்டார்,
*'ஊசி இருக்கிறது'* என்று கூறிச் சிரித்தார் கி.வா.ஜ.!


கி வா ஜ ஒருமுறை தொடர்ச்சியாக விழாக்களில் கலந்து கொண்டதால் இருமல் மற்றும் தொண்டை புண்ணால் அவதிப் பட்டார். 
அதற்காக விழாக்குழுவினர் அவருக்கு cough syrup ஒன்றை கொடுத்து சாப்பிடச் சொன்னார்கள்.
கி வா ஜ அவர்கள் இதைத்தானா கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் "சிறப்பு" என்கிறார்கள் என்று கேட்டார்.


பல்லாண்டுகளுக்கு முன் சென்னை வீனஸ் காலனியில் நடந்த வாரியாரின் புராணச் சொற்பொழிவின் இடையே ஒரு நாள் வாரியார் எழுதிய நூல் ஒன்றை வானதி பதிப்பகத்தினர் வெளியிட்டனர். 

பாராட்டுரை சொல்ல வந்த 
கி. வா. ஜ, பதிப்பாளர் வாரியார் சுவாமிகளுக்குப் பொன்னாடையைப் போர்த்தியதும் சிலேடையாக, *'நூல் தந்த வாரியாருக்கு பதிப்பாளர் ஆடை தருகிறார்'* என்றார். அரங்கத்தில் கைதட்டல் எழுந்தது.

அடுத்து இறை வணக்கம் பாடிய சிறுமிக்கு கி. வா.ஜ. ஒரு பேனா பரிசளித்தார். இதைக் கண்ட வாரியார் உடனே தன் பங்குக்கு, 
*"நாவால் பாடிய சிறுமியை கி.வா.ஜ. பே_னாவால் கௌரவிக்கிறார்"* என்றதும் மறுபடியும் கைதட்டல் வானைப் பிளந்தது.


ஒரு கடை முதலாளியின் வீட்டில் விருந்து. 
கி.வா.ஜ-வும் அதில் கலந்துகொண்டார். 
அனைவரும் உணவு உண்ண அமர்ந்திருக்க, கடையில் வேலை செய்யும் ஒரு பையன் மட்டும் இல்லாதது கண்டு, கி.வா.ஜ. அது பற்றி விசாரித்தார். 

“அவன் கடையைப் பூட்டிவிட்டு வந்து அடுத்த பந்தியில் கலந்துகொள்வான்” என்றார் முதலாளி.

*ஓகோ! கடை சிப்-பந்திக்குக் கடைசிப் பந்தியா?!”* என்று கேட்டார் கி.வா.ஜ.

ஒரு நண்பர் வீட்டுக்கு கி.வா.ஜ. போயிருந்தபோது, நண்பரின் மனைவி விளாம்பழத்தில் வெல்லம் போட்டுப் பிசைந்து, அன்போடு கொண்டு வந்து உபசரித்தார். 
அதை வாங்கி உண்ட கி.வா.ஜ. “மாதுளங்கனி அருமை!” என்று பாராட்டினார்.

“மாதுளங்கனியா! நான் தந்தது விளாம்பழம் அல்லவோ!” என்று அந்த அம்மையார் குழப்பத்துடன் கேட்க,

*“மாது உளம் கனிந்து கொடுத்த கனி என்று சொன்னேன்!”* என்றார் கி.வா.ஜ.

ஒரு பெண் அவரை தங்கள் கூட்டத்தில் பேச அழைத்தாள். 

கிவாஜ - 
*இன்னிக்கு வேணாமே!* 
*தொண்டை கம்மியிருக்கு...* என்றார்.. 

அந்தப் பெண் சொன்னாள் - *பரவால்லை, கம்மல் பிரகாசிக்கவே செய்யும்.*

ஒரு தடவை அவருக்குப் போர்த்திய பொன்னாடை கிழிந்து இருந்தது...

அதற்கு அவரின் கமெண்ட்
*"இந்த பொன்னாடையில் பூ இருக்கிறது...பழம் இருக்கிறது... பிஞ்சும் (கிழிந்தும்)  இருக்கிறது...*

நூறு ரூபாய், இருநூறு ரூபாய், முந்நூறு ரூபாய், நானூறு ரூபாய் - புத்திசாலிப் புலவரின் இரட்டுறமொழிதல் SILEDAI ‎

ஒரு புலவர் மன்னைப் புகழ்ந்து பாடினார். 
மன்னர் அவருக்கு நூறு ரூபாய் பரிசளிப்பதாகக் கூறி, கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, இருநூறு தருகிறேன் என்றீர்களே?. 
மன்னர் 200 ரூபாய் கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, முன்னூறு தருகிறேன் என்றீர்களே?. 
மன்னர் 300 ரூபாய் கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, நானூறு தருகிறேன் என்றீர்களே?. 
மன்னர் 400 ரூபாய் கொண்டு வந்தார். 
புலவரை ஏன் இப்படி மாற்றினீர்கள் என்று கேட்டார். 
புலவர் : நீங்கள் இரு, நூறு ரூபாய் கொண்டு வருகிறேன் என்றீர்கள். 
அமரவே இடம் இல்லை, அதைச் சொன்னேன். 
உடனே, 200 ரூபாய் கொண்டு வந்தீர்கள். 
முன்னால் 100தானே தருவேன் என்றீர்கள். 
முன், நூறு ரூபாய் என்று அதைச் சொன்னேன். 
300 ரூபாய் வந்தது. 
'நான் 100 ரூபாய் தருவேன்' என்றீர்களே என்றேன். 
உடனே 400 ரூபாய் எடுத்து வந்தீர்கள். 
இதுதான் நடந்தது. 
மன்னர் மகிழ்ந்து, மொத்தத் தொகையான 1000 ரூபாய் கொடுத்தார்.

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன... இரட்டுறமொழிதல் பாடலும் விளக்கமும் SILEDAI VENKAAYAM SUKKAANAAL...

வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத, சீரகத்தை தந்தீரேல்
வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே

இந்தப் பாடலை நேரடியாகப் பொருள் கொண்டால்: ஒரு பலசரக்குக் கடைக்காரரான வேரகம் எனப்படும் செட்டியாரைப் பார்த்துச் சொல்வதுபோல் இருக்கிறது.

வேரகச் செட்டியாரே!

சமிபாடின்மையைப் போக்க வெங்காயம், வெந்தயம், பெருங்காயம் முதலியவைகளை இட்டு குழம்பு தயாரிப்பார்கள். 

இதில் வாங்கி வந்த வெங்காயமானது சுக்கைபோன்று உலர்ந்துபோய் விடுமாயின், வெந்தயம் இருந்தும் எந்தப் பலனும் இல்லை. 

எனவே அந்த சரக்குப் பொருட்கள் இருப்பதில் எந்தப் பயனும் இல்லை. 

இவைகளால் கிடைக்கப்பெறும் பயனை சீரகத்தில் செய்யப்படும் இரசம் மூலம் பெறலாம். 

மேலும் சீரகமும் கெட்டுப்போகாத பொருளாகவே இருக்கிறது. 

எனவே சீரகத்தை எனக்குத் தந்தால், பெருங்காயம் எனக்குத் தேவையில்லை.

ஆனால், இந்தப் பாடலினுள் சிலேடையாக ஆழமான பொருளைப் புகுத்தியுள்ளனர். 

அந்தப் பொருளை இப்போது பார்ப்போம். 

இது திருவேரகம் என்று அழைக்கப்படும் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் குடிகொண்டிருக்கும் இறைவனை நோக்கிச் சொல்வதாக வரும்.

வேரகத்துச் செட்டியாரே என்பது திருவேரகத்தில் வீற்றிருக்கும் பெருமானே!

  • வெங்காயம் என்பதில், காயம் என்பது உடம்பு, எனவே, வெங்காயம் என்பது வெறுமையான காயம், அதாவது, வெறுமையான இந்த உடம்பு,
  • சுக்கானால், அதாவது சுக்கைப்போல வாடி வதங்கிப் போனால்,
  • வெந்தயத்தால் ஆவதென்ன? வெந்த அயம் என்பது உயிர் தரிப்பதற்காக உண்ணப்படும் அயச் செந்தூரம் என்ற பொருளில் வரலாம் எனக் கூறப்படுகின்றது. எனவே உடம்பு கெட்டுப் போனால் உயிரைத் தக்க வைத்துக் கொள்ளும் இந்த அயச் செந்தூரத்தால் என்ன பயன்?
  • இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை, அதாவது, அதன் பிறகு யார் இந்த உடலைச் சுமந்து கொண்டு இருக்க விரும்புவார்கள்?
  • சீரகத்தைத் தந்தீரேல் என்பதில் சீர் + அகம், அதாவது சிறந்த மனத்தை அல்லது சிறந்த வீட்டை, அல்லது வீடுபேற்றைத் தருவீரேயானால்,
  • வேண்டேன் பெருங்காயம், பெருங்காயம் என்பது பெரிய + காயம், அல்லது பெரிய உடம்பு, அதாவது, மீண்டும் மீண்டும் பிறந்து வினையினால் அவதிப்படும் இந்த பெரிய உடம்பைக் கேட்க மாட்டேன்..

என்று பொருள்படுகின்றது.

Monday, June 15, 2020

பறவாத தும்பி ... யானையையும், ஆனைமுகக் கடவுளையும் வேறுபடுத்தும் பாடல்

காளமேகப்புலவர் KAALAMEGA PULAVAR
பாடல்
பறவாத தும்பி கருகாத வெங்கரி பண்புரண்டே
இருகாத தந்தி யுருகாத மாதங்கம் இந்துநுதல்
நிறவாத சிந்துரம் பூசாக் களப நெடுஞ்சுனையிற்
பிறவாத வாம்பல் வலஞ்சுழிக் கேவரப் பெற்றனனே
விளக்கம்
பறவாத தும்பி கருகாத வெங்கரி பண் புரண்டே இருகாத தந்தி உருகாத மாதங்கம் இந்து நுதல் நிறவாத சிந்துரம் பூசாக் களபம் நெடும் சுனையில் பிறவாத ஆம்பல் வலஞ்சுழிக்கே வரப் பெற்றனனே.

தும்பி, கரி, தந்தி, மாதங்கம், இந்து, சிந்துரம், களபம், ஆம்பல், வலஞ்சுழி ஆகிய சொற்கள் யானையையும், ஆனைமுகக் கடவுளையும் குறிக்கும். இதனைப் புலவர் இப்படித் தெளிவுபடுத்துகிறார்.

தும்பி பறக்கும். இந்தத் தும்பி பறக்காது | பறவாத தும்பி
கரி என்பது சான்று. இந்தக் கரி கருதாத ஒன்று | (வெம் = கொடிய) கருகாத வெங்கரி
தந்தி என்பது யாழ் நரம்பு. இதில் பண் புரண்டு இருகும். யானையாகிய தந்தியில் பண் புரண்டு இருகாது | பண் புரண்டே இருகாத தந்தி
பெரிய தங்கம் உருகும். இந்த மாதங்கம் உருகாது | உருகாத மாதங்கம்
இந்து என்பது நிலா. இது நிலா அன்று | இந்து
சிந்துரமாகிய குங்குமம் நெற்றியில் நிற்கும். யானையாகிய சிந்துரம் நெற்றியில் நிற்காது | நுதல் நிறவாத சிந்துரம்
களபம் என்பது சந்தனம். இது பூசாத களபம் | பூசாக் களபம்
ஆம்பல் சுனையில் பூக்கும். ஆம்பலாகிய யானை சுனையில் பிறக்காது | நெடும் சுனையில் பிறவாத ஆம்பல்
வலஞ்சுழி என்பது சிவபெருமானை வலம்வந்த யானை | வலஞ்சுழிக்கே வரப் பெற்றனனே

ஆலங்குடியான் என்னும் சொல்லைப் பிரிமொழிச் சிலேடையாக அமைத்துப் பாடிய வெண்பா.

காளமேகப்புலவர் KAALAMEGA PULAVAR
பாடல்

ஆலங்குடி யானை யாலால முண்டானை
ஆலங்குடியா னென்றார் சொன்னார் – ஆலங்
குடியானே யாயிற் குவலையத்தா ரெல்லாம்
மடியாரோ மண்மீ திலே 
விளக்கம்


ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை ஆலங்குடியான் என்று ஆர் சொன்னார் ஆலம் குடியானே ஆயின் குவலையத்தார் எல்லாம் மடியாரோ மண் மீதிலே .
 திருவாலங்குடியில் கோயில் கொண்டுள்ள சிவன் ஆலாலம் (ஆலகால விடம்) உண்டான். 
அவனை ஆலம் (விடம்) குடிக்காதவன் என்று ஆர் சொல்லிவைத்தார்கள்? அவன் நஞ்சினைக் குடிக்காவிட்டால் மண்ணுலகில் உள்ள மக்களெல்லாம் அந்த நச்சுக் காற்றை உட்கொண்டு மடிந்துபோவார்கள் அல்லவா?

சங்கரர்க்கு மாறுதலை சண்முகர்க்கு மாறுதலை .... பாடலும் விளக்கமும்

காளமேகப்புலவர் KAALAMEGA PULAVAR
பாடல்
சங்கரற்கு மாறுதலை சண்முகற்கு மாறுதலை
ஐங்கரற்கு மாறுதலை யானதோ-சங்கைப்
பிடித்தோர்க்கு மாறுதலை பித்தா நின்பாதம்
படித்தோர்க்கு மாறுதலை பார்.
விளக்கம்
சங்கரற்கும் ஆறுதலை - சிவபெருமானுக்குத் தலையிலே கங்கையென்னும் ஆறு உரியதாகும், 
சண்முகற்கும் ஆறுதலை - முருகப்பெருமானுக்கும் ஆறு தலைகள் உள்ளன, 
ஐங்கரற்கு மாறுதலை - ஐங்கரனாகிய பிள்ளையாருக்கு உடலோடு மாறுகொண்ட யானைத் தலையாய விளங்கும், 
சங்கைப் பிடித்தோர்க்கும் ஆறுதலை - சங்கை ஏந்தியவரான திருமாலுக்கும் பிரளய வெள்ளம் உறைவிடமாயிருக்கும், 
பித்தா - பித்தனாகிய பரமனே! நின் பாதம் படித்தோர்க்கும் ஆறுதலை பார் - நின் திருவடிகளைப் போற்றியவரான என்போலும் சிவனடியார்க்கும் ஆறுதல் உண்டாகியிருக்கின்றது. இதனைக் காண்பாயாக!

தாதீது தோதீது தத்தை தூதோதாது..த-வரிசை எழுத்துகளை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட பொருள் பொதிந்த பாடலும் விளக்கமும்

காளமேகப்புலவர் KAALAMEGA PULAVAR
பாடல்

தாதீது தோதீது தத்தை தூதோதாது
தூதிதூ தொத்தி தத் தூததே – தாதொத்த
துத்திதத் தாதேது தித்தித்தேத் தொத்தீது
தித்தித் ததோதித் திதி 
விளக்கம்

தாதீ துதோ தீது | தத்தை தூதோ தாது | தூது இது | ஊது ஒத்து இதத் தூது | அதே தாது ஒத்தது | இத்து இதத்து | ஆது ஏது தித்தித்து | ஏத்து ஒத்து | ஈது தித்தித்தது | ஓதித் திதி
த-வரிசை எழுத்துகளை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட பொருள் பொதிந்த வெண்பா.
தாதீ! (தோழியே) என் தலைவனிடம் சொல்லும் உன் தூதோ தீது.
தத்தை (கிளி) தூதோ தாது (மூலப்பொருள் போன்றது).
தூது என்பது கிளித் தூதுதான்.
இதமான தூதாகிய இதனை ஊது (ஓது).
அதே தாதுப் பொருள் போல் எனக்கு ஒத்தது.
இது என் தலைவன் உள்ளத்தை இத்துப் போகச் செய்து இதமாக்க வல்லது.
அதைவிட (ஆது) ஏது தித்தித்தது (தித்தித்து)?
ஒத்துக்கொண்டு இதனை ஏத்து (போற்று).
ஈது (இதுதான்) தித்தித்தது.
இதனை ஓதித் திதி (திதி = நினைவுநாள் | அவரை நினைக்கும்-நாள் கடமையைச் செய்)

பூனைக்கி யாறுகால் ... பாடலும் விளக்கமும் POONAIKKI AARUKAAL...

காளமேகப்புலவர் KAALAMEGA PULAVAR
பாடல்
பூனைக்கி யாறுகால் புள்ளினத்துக் கொன்பதுகால்
ஆனைக்குக் கால்பதி னேழானதே –மானேகேள்
முண்டகத்தின் மீதுமுழு நீலம் பூத்ததுண்டு
கண்டதுண்டு கேட்டதில்லை காண்
விளக்கம்
பூனைக்கி(கு) ஆறு கால் புள்ளினத்துக்கு ஒன்பதுகால் ஆனைக்குக் கால் பதினேழ் ஆனதே மானே கேள் முண்டு அகத்தின் மீது முழு நீலம் பூத்ததுண்டு கண்டது உண்டு கேட்டது இல்லை காண். 
பூனைக்கு 6 கால், 
புள்-இனத்துக்கு 9 கால், 
யானைக்கு 17 கால் என்று இல்லாததைச் சொல்லி இருப்பதை உறுதிப்படுத்தியது.
பூ(ன்) நக்கி ஆறு கால் = பூ நக்கி உண்ணும் தேனீக்கு ஆறு கால்
புள்ளினத்துக்கு ஒன்பது கால் = புள்ளினத்துக்கு இரண்டேகால் (9 பெருக்கல் ¼ = 2¼)
ஆனைக்குக் கால் பதினேழ் ஆனதே = யானைக்கு நாலே கால் ஆனதே (17 பெருக்கல் ¼ = 4¼)
மானே கேள்
முண்டு அகத்தின் மீது முழு நீலம் பூத்தது உண்டு = ஒளி முன் அமர்ந்துகொண்டு கண்ணை மூடித் தவம் செய்தால் அகத்தில் (உள்ளே) நீலநிறம் பூக்கும். | முண்டகம் என்னும் செந்தாமரை மேல் நீலமலர் பூத்தது – சிவன் நிறம் சிவப்பு. பார்வதி நிறம் நீலம்.
கண்டது உண்டு கேட்டது இல்லை காண் = இவற்றை எண்ணிப் பார்த்துக் கண்டது உண்டு.
பூனைக்கு 6 கால் என்றும்,
பறவைகளுக்கு 9 கால் என்றும்,
யானைக்கு 17 கால் என்றும்,
முண்டகத் தாமரை மீது முழு நீலமலர் பூத்தது என்றும்
சொல்லக் கேட்டது இல்லை.

வானவில்லுக்கும் விஷ்ணுவுக்கும் வெற்றிலைக்கும் VAANAVILLUM VISHNUVUM VETRILAIYUM

காளமேகப்புலவர் KAALAMEGA PULAVAR
பாடல்
நீரிலுளவா னிறம் பச்சையாற் றிருவால்
பாரிற் பகைதீர்க்கும் பான்மையால் – சாருமனுப்
பல்வினையை மாற்றுதலாற் பாரீர் பெருவான
வில்விண்டு நேர்வெற் றிலை
விளக்கம்
வானவில் – 
நீரினால் உண்டாகும். 
நிறம் பச்சையாக இருக்கும். 
‘திருவில்’ எனப் போற்றப்படும். 
உலகில் பகைமையை ஒழித்து ஒற்றுமையுடன் வாழச் செய்யும். அதனைச் சார்ந்த மனு என்னும் அரசனின் வல்வினையைப் போக்கிற்று.

விஷ்ணு – 
பாற்கடல் நீரில் இருக்கிறான். 
பச்சைநிறம் கொண்டவன். 
பாரதப் போரில் பகைமையைத் தீர்த்து வைத்தான். 
மனு என்னும் அரசனின் வல்வினையை மாற்றினான்.

வெற்றிலை – 
நீரில் முளைத்து வளரும். 
பச்சைநிறம் கொண்டது. 
திரு என்னும் மங்கலச் சின்னமாக ஏற்றுக்கொள்ளப்படும். 
பகை நீங்கி உறவாடுவதன் அடையாளச் சின்னமாக வெற்றிலைப் பாக்கு வைக்கப்படும். 
வினை தீர்க்கும் மருந்தாக விளங்கும்

துப்பாக்கிக்கும் ஓலைச்சுருளுக்கும் இரட்டுறமொழிதல் SILEDAI THUPPAKKIYUM OLAISURULUM

காளமேகப்புலவர் KAALAMEGA PULAVAR
பாடல்
ஆணி வரையுறலா லானகுறிப் பேதரலால்
தோணக் கருமருந்தைத் தோய்ந்திடலால் – நீணிலத்தில்
செப்பார்க் குதவாத் திருமலைரா யன்வரையில்
துப்பாக்கி யோலைச் சுருள் 
விளக்கம்
துப்பாக்கி – 
துப்பாக்கி இடைப்பகுதியில் ஆணி இருக்கும். 
குறிப்பைத் தாக்கி இலக்கைத் தரும். 
கருமருந்து உள்ளே வைக்கப்பட்டிருக்கும்.

ஓலைச்சுருள் – 
ஓலைச்சுருள் எழுத்தாணியால் எழுதப்படும். 
எழுதியவன் கருத்துக் குறிப்பைத் தரும். 
எழுதிய பின்னர் எழுத்துத் தெரிவதற்காக அதில் கருமருந்து பூணப்படும்.

குதிரைக்கும் ஆட்டுக்கும் இரட்டுறமொழிதல் SILEDAI KUTHIRAIYUM AADUM HORSE & GOAT

காளமேகப்புலவர் KAALAMEGA PULAVAR
பாடல்
கொம்பிலையே தீனிதின்னுங் கொண்டகான்மேல் வெட்டுதலால்
அம்புவியி னன்னடைய தாதலால் – உம்பர்களும்
தேடுநற் சோலைத் திருமலைரா யன்வரையில்
ஆடுங் குதிரையுநே ராம் 
விளக்கம்
குதிரை – 
குதிரைக்குக் கொம்பு இல்லை. 
தீனி தின்னும். 
கொண்டிருக்கும் காலை மேலே தூக்கி வெட்டிக் காட்டி ‘வெட்டுங்குதிரை’ என்று விழாக்கால இறைவன் ஊர்திக் குதிரை பெயர் பெறும். நிலவுலகில் நல்ல நடை இதற்கு உண்டு.

ஆடு – 
கொம்பிலுள்ள இலைகளைத் தின்னும். 
தன் காலை மேலே தூக்கி வெட்டி உயரத்தில் இருக்கும் இலை-தழையைத் தின்னும். 
நன்னடத்தை உடையது.

ஆட்டுக்கும் கதவுக்கும் இரட்டுறமொழிதல் SILEDAI AADUM KATHAVUM GOAT & DOOR

காளமேகப்புலவர் KAALAMEGA PULAVAR
பாடல்
செய்யுட் கிடைமறிக்குஞ் சேர்பலகை யிட்டுமுட்டும்
ஐயமற மேற்றா ளடர்க்குமே – துய்யநிலை
தேடும் புகழ்சேர் திருமலைரா யன்வரையில்
ஆடுங் கதவுநிக ராம் 

விளக்கம்
கதவு – 
செய்யப்பட்டதாய் வீட்டின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் மறித்துக்கொண்டிருக்கும். 
பலகைகள் சேர்க்கப்பட்டு முட்டு ஆணி வைக்கப்பட்டிருக்கும். ஐயமில்லாமல் மேலே தாள் (தாழ்ப்பாள்} போடப்படும்.

ஆடு – 
செய்யுளில் (வயலில்) கிடை மறிக்கக்கப்படும். 
சேர்த்துப் பலகை இட்டுக் கிடையில் மூடப்படும். 
ஐயம் இன்றிப் போரடிக்கும் களத்தின்மேல் தன் தாளால் (கால்களால்) மிதித்துக் களத் தரையைக் கெட்டிப்படுத்தும்.

கீரைப்பாத்திக்கும் குதிரைக்கும் இரட்டுறமொழிதல் SILEDAI KEERAI PAATHIYUM KUTHIRAIYUM

காளமேகப்புலவர் KAALAMEGA PULAVAR
பாடல்
கட்டி யடிக்கையாங் கான்மாறிப் பாய்கையால்
வெட்டி மறிக்கின்ற மேன்மையால் – முட்டப்போய்
மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன்
ஏறப் பரியா குமே.

விளக்கம்
வளமான கீரைப் பாத்தி – 
கீரை விதை தெளிக்கும்போது பாத்தியிலுள்ள மண்ணாலான கட்டிகள் அடித்து உடைக்கப்படும். 
வாய்க்காலில் மடை மாறித் தண்ணீர் பாயும். 
பாயும் மடையின் கரை வெட்டி மறிக்கப்படும். 
மேன்மை அதற்கு உண்டு. 
பாத்தியின் எல்லையில் நீர் முட்டியபின் பாத்தி-மடை திருப்பிவிடப்படும்.

குதிரையானது வண்டியில் கட்டி அடிக்கப்படும். 
முன்னங்கால் பின்னங்கால் என்று கால் மாறிப் பாயும். 
காலைத் தரையில் வெட்டிக் காட்டித் தன் மேன்மையைக் குதிரை விளக்கும். 
தடை வரும்போது திரும்பி ஓடும்.

குதிரைக்கும் காவிரியாற்றுக்கும் இரட்டுறமொழிதல் SILEDAI KUTHIRAIYUM KAAVIRIYAARUM HORSE & KAVIRI RIVER

காளமேகப்புலவர் KAALAMEGA PULAVAR
பாடல்
ஓடுஞ் சுழிசுத்த முண்டாகுந் துன்னலரைச்
சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும் – நாடறியத்
தேடுபுகழான் திருமலைரா யன்வ ரையில்
ஆடுபரி காவிரி யாமே.

விளக்கம்
குதிரை – 
ஓடும். 
நல்ல குதிரைக்கு அடையாளமான ‘சுழி’ சுத்தம் உண்டாகியிருக்கும். பகைவரை விரட்டியடிக்கும். 
தன்னை வளர்ப்பவனிடம் அன்பால் தலை சாய்க்கும்.

காவிரி ஆறு - 
நீராய் ஓடும். 
நீர்ச்சுழி இருக்கும். 
நீர் சுத்தம் ஆகும். 
தன்னைத் துன்னும் அலரைச் சாடும் (தன்னை அடையும் மலரை அடித்துக்கொண்டு ஓடும்). 
மக்கள் குளிப்பதற்காக விருப்பமுடன் அதன்மீது தலைசாய்ப்பர்

கூத்தியாருக்கும் குரங்குக்கும் இரட்டுறமொழிதல் SILEDAI KOOTHIYARUM KURANKUM

காளமேகப்புலவர் KAALAMEGA PULAVAR
பாடல்
ஓட்டங் கடியதா லுள்ளவரை மேவுதலால்
சேட்டை யெவரிடத்துஞ் செய்தலால் நாட்டமுடன்
காத்திரத்திற் குட்டியுறக் கட்டுதலாற் றெட்டுதலால்
கூத்தியர்க்கு நேராங் குரங்கு

விளக்கம்
கூத்தியார் என்னும் வைப்பாட்டி – 
கடியதாய் (விரைவாக) ஓடிவிடுவாள். 
கைப்பொருள் உள்ளவரை விரும்புவாள். 
எல்லாரிடத்திலும் காதல் சேட்டை செய்வாள். 
ஆசையுடன் காப்பாற்றும்போதே குட்டிவிடுவாள். 
கட்டிப்பிடித்துக் கையிலுள்ள பொருளைத் தெட்டி (தெற்றி)ப் பறித்துக்கொள்வாள்.

குரங்கு – 
விரைவாக ஓடும். 
தான் உள்ள வரையை (மலையை) விரும்பும். 
எவராயிருந்தாலும் சேட்டை செய்யும். 
விருப்பத்துடன் காக்கும்பொருட்டுத் தன் குட்டியைப் பற்றிக் கட்டிக்கொள்ளும். 
பிறரிடமுள்ள பொருளைத் தெட்டிப் பறித்துக்கொள்ளும்.

கண்ணாடிக்கும் அரசனுக்கும் இரட்டுறமொழிதல் SILEDAI KANNAADIYUM ARASANUM MIRROR & KING

காளமேகப்புலவர் KAALAMEGA PULAVAR
பாடல்
யாவருக்கும் ரஞ்சனைசெய் தியாவருக்கு மவ்வவராய்ப்
பாவனையாய்த் தீதகலப் பார்த்தலால் – மேவும்
எதிரியைத் தன்னுள் ளாக்கியேற் றரசத்தால்
சதிருறலா லாடிய ரசாம்
விளக்கம்
கண்ணாடி – 
எவருக்கும் வஞ்சனை செய்யாது. 
எல்லாரையும் அவரவராய் அவரவரது பாவனையைக் காட்டும். 
தன் முகத்தில் உள்ள தீங்கைப் பார்த்து அகற்றிக்கொள்ள எல்லாரும் கண்ணாடி பார்ப்பர். 
எதிரில் உள்ளவரைத் தன் உள்ளுக்குள் காட்டும். 
பின்புறம் ‘ரசம்’ பூசப்பட்டிருக்கும். 
சதுரமாகவும் இருக்கும்.

அரசன் - 
ஓரவஞ்சனை செய்யாமல் எல்லாரையும் தன்னை ஒத்தவராய்ப் பாவித்து அவரது தீது அகலும்படி பார்த்துக்கொள்வான். 
எதிரியைத் தன் ஆட்சிக்குள் அடக்கி ஏற்றுக்கொண்டு சுவைப்பான். நால்வகையான சதுரப்படைகளை உடையவன்.

தமிழ்த்துகள்

Blog Archive