கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, July 06, 2020

குறிஞ்சிப் பாட்டு - KURINJIPPAATTU

பத்துப்பாட்டு எனும் சங்கத் தமிழ் நூல் தொகுப்பில் அடங்கியது  குறிஞ்சிப் பாட்டு
கபிலர் என்னும் புலவர் பாடியது இப்பாடல். 
261 அடிகளாலான இப் பாடல் அகப்பொருளில் குறிஞ்சித் திணைப் பண்பாட்டை விளக்கும் பாடலாகும். 
இதன் இறுதியில் இரண்டு வெண்பாக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இவை இந்தப் பாடலின் தொகுப்புச் செய்திகளைக் கூறுகின்றன. தலைவன் தலைவி தன்னிச்சையாக உறவு கொள்ளத் தோழி ஒப்புதல் தந்துள்ளாள். 
ஆரிய அரசன் பிரகத்தன் என்பாருக்குத் தமிழின் பெருமை உணர்த்த வேண்டி ஆசிரியப்பாவினால் இந்நூல் பாடப்பெற்றது.
இதற்குப் பெருங்குறிஞ்சி என்றொரு பெயரும் உண்டு.
அவ்வரசன் தமிழர்தம் காதல் ஒழுக்கத்தை அறிந்துகொள்ள, குறிஞ்சித் திணை ஒழுக்கமாகிய புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறித்து இந்நூல் விளக்கியுரைக்கிறது
ஆரிய அரசன் பிரகத்தன் தமிழரின் களவுநெறியைத் தீது என்றான். 
இது கற்புநெறியில் முடியும்; மிகவும் நல்லது; என்னும் உண்மைகளைத் தெளிவுபடுத்த எழுதப்பட்டது.
காதல் நோயால் தலைவியின் உடலில் மாறுபாடு. 
செயலில் தடுமாற்றம். 
இதனை அவளது தாயர் முருகன் அணங்கியதாக எண்ணி முருகாற்றுப்படுத்த முனைகின்றனர்.  
உண்மையைச் சொல்லிவிடு என்று தலைவி தோழியைத் தூண்ட, தோழி நிகழ்ந்ததைக் கூறுவதாகப் பாடல் அமைந்துள்ளது.

தாயர் தினைப்புனம் காத்துவருமாறு அனுப்பினர். 

தலைவி தன் தோழிமாருடன் சென்றாள். 

புனத்தில் அமைக்கப்பட்டிருந்த இதணம் என்னும் பந்தல்மேல் ஏறி, குளிர் தட்டை முதலான இசைக் கருவிகளைப் புடைத்துக் கிளிகளை ஓட்டினர்.

பறவைகள் வரமுடியாத அளவுக்கு வானம் பெருமழை பொழிந்தது. 
தலைவி தோழிமாருடன் சென்று அருவியிலும், சுனையிலும் நீராடினாள். 
பின்னர் பல வகையான பூக்களைப் பறித்துவந்து பாறைமீது குவித்தனர். 
அவற்றால் தழையாடை புனைந்து உடுத்திக்கொண்டனர்.
அப்போது அங்கு காளை ஒருவன் தோன்றினான். 
அவன் தன் முடிக்கு அகில் புகை ஊட்டியிருந்தான். 
மலையிலும், நிலத்திலும், மரக்கிளையிலும், சுனையிலும் பூத்த நால்வகை மலர்களால் தொடுத்த கண்ணியைத் தலையில் அணிந்திருந்தான். 
பிண்டி என்னும் அசோகின் பூந்தளிரை ஒரு காதில் செருகியிருந்தான். 
மார்பில் சந்தனம், இடையில் வாள், கையில் வில்லம்பு, காலில் ஈகையை உணர்த்தும் கழல் ஆகியவற்றுடன் தோன்றினான்.
இளைஞர் சூழ வந்தான். 
அவனது வேட்டை நாய் குரைத்துக்கொண்டு அவனைச் சூழ்ந்து வந்து கொண்டிருந்தது. 
இவற்றைக் கண்டு தலைவியும் தோழிமாரும் அஞ்சி ஒதுங்கினர். அவன் பசுவைப் பார்க்கும் காளைபோல் பண்போடு பார்த்தான்.  அவர்கள் ஐந்து வகையாக முடித்திருந்த ‘ஐம்பால்’ கூந்தல் அழகைப் பாராட்டினான். 
அவர்களின் நடுக்கத்தைக் கண்டு ‘பெருந்தீங்கு செய்துவிட்டேன் போலும்’  என்றான். 
அவர்கள் ஏதும் பேசவில்லை. 
அவன் கலக்கத்துடன் ‘எம்முடன் சொல்லலும் பழியோ’ என யாழில் எழும் சைவளப் பண் போலத் தழுதழுத்தான். 
அப்போது ஆண்யானை ஒன்று அங்கு வந்தது. 
அதனைக் கண்டு நடுங்கிய தலைவி தன் நாணத்தை மறந்து அவனைத் தழுவிக்கொண்டாள். 
யானைமீது தலைவன் அம்பு எய்தான். 
யானை போய்விட்டது. 
அவள் விலகினாள். 
“உன் அழகை நுகர அசையாமல் நில்” என்றான்.  
அவளது நெற்றியைத் தடவிக்கொடுத்தான். 
தலைவி நின்றாள். 
தலைவன் தோழியைப் பார்த்தான். 
தோழி நாணி விலகினாள்.
பாறையில் பட்டுத் தெறித்த மிளகு ஊறிக்கொண்டிருக்கும் சுனையில் மாம்பழம் விழுந்தது. 
சுனையில் பலாச்சுளையும் தேனும் இனித்தன 
விழா எடுத்து ஊருக்கு விருந்து படைத்து திருமணம் செய்து கொள்வேன் என அவன் அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு கடவுள்மேல் சத்தியம் செய்தான். 
மாலை வந்தது. 
இல்லம் திரும்பினர். 
அன்று முதல் அவன் இரவில் அவளிடம் வந்து போனான். 
இரவில் காவலர் வருதல், நாய் குரைத்தல், முதலான இடையூறு நேரும்போது கலங்குவாள்.

அவன் வரும் வழியில் உழுவை, ஆளி, உளியம் போன்ற விலங்குகளும், பாம்பும் உண்டு. 

அவன் கடக்கும் ஆற்றில் முதலை, இடங்கர், கராம் முதலான இரைதேர் விலங்குகளும் உண்டு. 

இவற்றையும் எண்ணி இவள் கலங்குகிறாள். 

இவையே இவள் மாறுபாட்டுக்குக் காரணம். என்று தோழி தாயரிடம் கூறி முடிக்கிறாள்.

தமிழ்த்துகள்

Blog Archive