கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, July 06, 2020

பட்டினப் பாலை - PATTINAPPAALAI

பட்டினப்பாலை என்பது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான   பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல் . 
பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவரே இதனையும் இயற்றியுள்ளார்.
பண்டைய சோழ நாட்டின் சிறப்பு, சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு,அதன் செல்வ வளம், கரிகாலனுடைய வீரச்செயல்கள், மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை எடுத்து இயம்பும் இப் பாடல் 301 அடிகளால் அமைந்துள்ளது. 
இப் பாடலில் சோழ மன்னன் கரிகால் பெரு வளத்தானின்  பெருமைகளை எடுத்துக்கூறுகிறார் புலவர். 
கரிகால் சோழன் திரைக்கடலில் நாவாய்கள் பல செலுத்தி, சுங்க முறையை ஏற்படுத்தி, வெளிநாடுகளுடன் வாணிபத்தொடர்பு ஏற்படுத்தி தமிழகத்திற்கு உலகப்புகழை ஏற்படுத்தியவன். 
அவன் ஆண்ட சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது காவிரிப்பூம்பட்டினம். 
கரிகால் சோழனுடைய காவிரிப் பூம்பட்டினத்தின் பெருஞ் சிறப்பைச்  சொல்வதே பட்டினப்பாலை ஆகும்.
சங்க நூலாகிய பத்துப்பாட்டு வரிசையில் ஒன்பதாவது பாட்டு பட்டினப்பாலையாகும். 
துறைமுகத்தை ஒட்டியுள்ள பெரு நகரங்கள் பட்டினம் என அழைக்கப்பட்டன. 
காவிரிப்பூம்பட்டினம் சோழ நாட்டின் பழம்பெரும் நகரமாகும். தலைநகரமாக விளங்கிய துறைமுகப்பட்டினம். இது 
தமிழகத்தில்தஞ்சாவூர் மாவட்டத்தில் கீழ்க்கோடியிலே  காவிரி நதி கடலோடு கலக்கும் இடத்தில் உள்ளது. 
இப்போது இது ஒரு சிறிய ஊராகும். 
ஏறக்குறைய ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த நகரம் கடலிலே மூழ்கி விட்டதாகச் சொல்லப்படுகிறது. 
ஐம்பெருங்காப்பியங்களிலே ஒன்றான   மணிமேகலையில்  காவிரிப்பூம்பட்டினம் கடலில் மூழ்கிய  செய்தி காணப்படுகிறது.
பாலை என்பது பாலைத்திணை ஆகும். 
பிரிவைப் பற்றிக் கூறுவது பாலைத்திணையாகும். 
கணவன் தன் மனைவியை விட்டுப் பிரிந்து போவது - அல்லது பிரிந்து போக நினைப்பது - அல்லது பிரிந்து போக வேண்டுமே என நினைத்து வருந்துவது இவை பாலைத்திணையின்கண் அடங்கும். 
கணவன் தான் பொருள் தேடப் பிரிந்து செல்வதைத் தன் மனைவிக்கு அறிவிப்பதும், அதை அவள் தடுப்பதும் பாலைத் திணையில் அடங்கும்.
பட்டினப்பாலை என்பது பட்டினம்- பாலை என்ற இரு சொற்களைக் கொண்ட தொடர். 
"பட்டினத்தின் சிறப்பைக் கூறிப் பிரிவின் துன்பத்தை உணர்த்துவது" என்பது இதன் பொருளாகும்.

காவிரியாற்றின் சிறப்பு; சோழநாட்டின் நிலவளம்; காவிரிப்பூம்பட்டினத்தின் சுற்றுப்புறங்களின் செழிப்பு; காவிரித்துறையின் காட்சி; செம்படவர்களின் வாழ்க்கை; பொழுதுபோக்கு இவைகளை இந்நூல் விரிவாகக் கூறுகிறது. காவிரிப்பூம்பட்டினத்திலே அக்காலத்தில் நடைபெற்ற வாணிகம்; அந்நகரத்திலே குவிந்திருந்த செல்வங்கள்; அங்கு நடைபெற்ற ஏற்றுமதி இறக்குமதி வாணிகம்; வாணிகர்களின் நடுவுநிலைமை; பண்டங்களைப் பாதுகாக்கும் முறை இவைகளையெல்லாம் இந்நூலிலே காணலாம்.

இந்த நகரத்தின் தலைவனான கரிகாற்சோழனின் பெருமை, வீரம், கொடை முதலியவற்றையும் இந்நூல் எடுத்துரைக்கிறது. இந்நூல் பாலைத்திணை என்னும் அகப்பொருளைப் பற்றியதாயினும் புறப்பொருள் செய்திகளே இதில் மிகுதியாகக் காணப்படுகின்றன.

பட்டினப்பாலையில் குறிப்பிட்டிருக்கும் கரிகாற்சோழன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்தவன். 
காவிரிப் பூம்பட்டினமே இவனுடைய தலைநகரமாக இருந்தது. இவன் இளைஞனாய் இருந்தபோது பகைவரால் சிறை பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
எப்படியோ சிறைலிருந்து தப்பி தனக்குரிய அரசாட்சியையும் கைப்பற்றினான். 
பிறகு தன் பகைவர்களின் மேல் படை திரட்டிச் சென்று அவர்களையெல்லாம் வீழ்த்தி வெற்றிபெற்றான். 
இச்செய்தி பட்டினப்பாலையின் இறுதியில் கூறப்பட்டுள்ளது. 
கரிகால் சோழன் சிறுவனாய் இருந்த போது அவனைக் கொல்ல பகைவர்கள் சூழ்ச்சி செய்து அவரிருந்த இல்லத்திற்குத் தீ வைக்க அஞ்சாமல் தீயினின்றும் வெளிவந்து தப்பித்துக்கொண்டான். அவன் தீயிலிருந்து வெளிவரும் போது அவனுடைய கால் தீப்பட்டுக் கரிந்து போனதால் கரிகால்சோழன் என்று பெயர் வந்தது.

இவன் வெண்ணி என்னும் ஊரின் பக்கத்திலிருந்த போர்க்களத்தில் சேரமான் பெருஞ்சேரலாதன் என்பவனோடு போர் செய்து வென்றான். 

அப்பாேது அதே போர்க்களத்தில் சேரலாதனுக்குத் துணையாக வந்த பாண்டியனையும் எதிர்த்துப் போர் செய்து வென்றான். ஆகவே பாண்டியன், சேரன் இருவரையும் வென்றவன் இவன். இவன் இமயம் வரை படையெடுத்துச் சென்றான். 

இடையிட்ட மன்னர்களை எல்லாம் வென்று இமயத்தில் புலிக்கொடியையும் நாட்டினான். 

இவன் இளையோனாய் இருந்த போது நரை முடித்து நீதி கூறிய கதையும் வழங்குகிறது.

கரிகால் சோழன் தமிழன்பன். 

தமிழ்ப்புலவர்களை ஆதரித்தவன். 

இரும்பிடர்த்தலையார் என்னும் புலவர் இவனது தாய்மாமன். 

பட்டினப்பாலையைப் பாடிய உருத்திரன்கண்ணனாருக்கு பதினாறு நூறாயிரம் கழஞ்சு (பொன்) பரிசளித்தான் என்ற செய்தி இவனுடைய தமிழ்ப்பற்றை விளக்குவதாகும்.

தமிழ்த்துகள்

Blog Archive