கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, July 06, 2020

மதுரைக் காஞ்சி - MADURAIKKAANCHI

சங்கத் தமிழ்ப் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக் காஞ்சி
இத் தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது இதுவே. 
மாங்குடி மருதனார் என்னும் புலவர் இந் நூலை இயற்றியுள்ளார். 
இப்பாடலில் 782 அடிகள் உள்ளன. 
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு உலகியல் உணர்த்துவதாய் இப்பாடல் பாடப்பட்டுள்ளது. 
பாண்டி நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும், வளத்தையும் கூறுகின்ற இந்நூல், அந்நாட்டின் ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது. 
இப் பாட்டின் தொடக்கத்தில் தி‌ரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப் பாடும் புலவர் பிறகு தேன் கூடுகள் நிறைந்திருக்கும் மலையுச்சிகளைப் பற்றியும் கூறுகிறார். 
இந்த உவமைகள் இயற்கை வளம் குறித்துப் பாடும் பொருட்டு அமைந்தவை அல்ல.
வாழ்க்கை அலை போன்று நிலையில்லாதது. 
எனவே நல்லறங்கள் செய்து மலை போல் என்றும் அழியாப் புகழைத் ‌தேடிக்கொள் என்று மன்னனுக்கு மறைமுகமாய்க் கூறுகிறார்.

பெரும்பாலான புலவர்கள் மன்னனின் போர்த்திறத்தையும் போரில் பகைவரைக் கொன்றழித்ததையும் கொன்றழித்த நாட்டுக் கோட்டை‌யை அழித்து அங்கே எள் மற்றும் திவசங்கள் விதைத்ததையும் பாடுவர். 

மருதனாரோ போரின் கொடுமையையும் போரினால் நாடு பாழாவதையும் பாடுகிறார்.

நாடெனும்பேர் காடுஆக

ஆசேந்தவழி மாசேப்ப

ஊர் இருந்தவழி பாழ்ஆக

போரினால் நாடாக இருந்த இடம் காடாகும். 

பசுக்கள் திரிந்த வழியில் புலிகள் உலவும். 

ஊர் முழுதும் பாழாகும் என்று சொல்கிறார்.

சங்க காலத்திலும் மதுரை தூங்கா நகராய் விளங்கியதை மருதனார் மூலம் அறிய முடிகிறது. 

பகல் நேரக் கடைகளாகிய நாளங்காடி பற்றியும் இரவு நேரத்தில் திறக்கப்படும் அல்லங்காடி (அல் - இரவு; அல்லும் பகலும்) பற்றியும் விளக்குகிறார். 

கடல் நீர் ஆவியாகி மேகமாவதால் கடல் வற்றிவிடுவதில்லை. 

ஆறுகள் பல கடலில் வந்து கலப்பதால் கடல் பொங்கி வழிவதுமில்லை. 

அது போல் மக்கள் திரளாக வந்து பொருட்களை வாங்குவதால் பொருட்கள் தீர்ந்து விடுவதும் இல்லை; பல இடத்திலிருந்தும் வணிகர்கள் விற்பனைக்குப் பொருட்களைக் கொண்டு வருவதால் பொருட்கள் மிகுந்து விடுவதும் இல்லை என்கிறார்.

மழைகொளக் குறையாது, புனல்புக மிகாது

கரைபொருது இரங்கும் முந்நீர் போல,

கொளக்கொளக் குறையாது. தரத்தர மிகாது.

 ஓர் இரவு முழுதும் மதுரை நகரில் நடக்கும் செயல்கள் யா‌வற்றையும் மருதனார் கூறுகிறார். 
குலமகளிர் பண்புகள், விலைமகளிர் வேலைகள், கள்வர் திறம், காவலர் மறம் ஆகியவற்றைக் கூறி நிறைவாக மன்னன் இரவில் துயில் கொள்ளல், காலையில் பள்ளியெழுச்சி, அவனது கொடை, அறம் ஆகியவற்றை விளக்கி அவனை வாழ்த்திப் பாடலை நிறைவு செய்கிறார்.

தமிழ்த்துகள்

Blog Archive