ஆசிரியர் நாள் வாழ்த்துக் கவிதை செப்டம்பர் 5
Teacher's day greeting poem September 5
எழுத்தறிவித்த இறைவன்
ஐம்புலனையும் புடம் போட்டு
ஆறாம் அறிவை வளர்த்தவர்கள்
மாதா பிதா குரு தெய்வம் என
கடவுளுக்கு முந்தியவர்கள்
கல்லுக்கு வலிக்காமல்
உள்ளிருந்து சிலையை எடுத்தவர்கள்
கசக்கும் கணக்கைக் கற்கண்டாய்
மாற்றும் வித்தை தெரிந்தவர்கள்
மனக்கணக்குப் போட அறிந்தவர்கள்
எங்கள் மனக்கணக்கைப்
போடவும் முடிந்தவர்கள்
விதைகளை விருட்சமாக்கும்
விவரம் தெரிந்தவர்கள்
பூக்களும் கனிகளும் காய்களும்
என நாங்கள் இன்று நிற்க
வேர்களாய் மண்ணில் புதைந்தே
கிடக்கிறார்கள்
ஏணிகளை எட்டி உதைத்த
கொடூரமும் இங்கே நடந்திருக்கிறது
பாராட்டும் பரிசும் நாங்கள் பெறும்
போது
ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும்
தாய்மையாய் மகிழ்பவர்கள்
இரு கரம் கூப்பி
ஒரு தரம் சொல்லும் வணக்கத்தில்
ஓராயிரம் நன்றிகள் புதைந்திருக்கும்
இன்று நாங்கள் உண்ணும் உணவில்
ஒவ்வொரு பருக்கையிலும்
உங்கள் பெயர் எழுதப்பட்டிருக்கும்
எங்கள் கிறுக்கல்களுக்கும்
கவிதை என்று பெயர் வைத்து
அழகு பார்த்தவர்கள்
எங்கள் சிறு வெற்றியையும்
கொண்டாடிய வாஞ்சையாளர்கள்
உழவனுக்கே தெரியாத
மண்ணின் மகத்துவத்தை
விதைகளாம் எங்களுக்குக்
காதோரம் சொன்னவர்கள்
தன்னிலை மறந்துவிட்ட மரங்கள்
மண்ணை மறந்து விண்ணைத் தொழுவது போல்
எழுந்து நிற்கின்றன எங்களைப் போலவே
பட்டறையில் இரும்பு வாங்கிய அடிகளாய்
மரங்கள் வாங்கிய ஆப்புகளின் செருகலாய்
சிற்பங்கள் நினைவில் வைத்திருக்கின்ற
உளியின் வலிகளாய்
உங்கள் கண்டிப்பு எங்களுள் புதைந்தே
கிடக்கிறது
அதனால் தான் நாங்கள் கட்டிய
வாழ்க்கைக் கோபுரம் உயர்ந்து நிற்கிறது
சட்டைப் பொத்தான்களைச் சரியாக மாட்டி
சளி ஒழுகும் மூக்கைச்சீறி
எண்ணெய் இல்லா முடியை ஒழுங்குபடுத்தி
எங்களுக்குள் குடத்தில் இட்ட
விளக்காய்ப்
புதைந்து கிடந்த அறிவுச்சுடரை
குன்றி லிட்ட விளக்காய் மாற்றிய சமுதாயச்
சிற்பிகளே
உங்கள் கைகளில் சிலைகளாக
உங்கள் நினைவுகளில் நன்றியின்
விழுதுகளாக
என்றும் இருப்போம்