தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம்அவனியாபுரம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும்,திருச்சி பெரிய சூரியூர்,நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி ,கூலமேடு , தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம்,புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை,வேலூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன.
பெயர்க்காரணம்
சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' ஆனது என்றும் கூறப்படுகிறது.
வகைகள்
சல்லிக்கட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது.
- வேலி ஜல்லிக்கட்டு
வேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது.
- வாடிவாசல் ஜல்லிக்கட்டு
மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.
- வடம் ஜல்லிக்கட்டு
வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.
வரலாறு
பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆயர்கள்/யாதவர்கள் இந்தியா முழுவதும் பரவி வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சங்க இலக்கியங்களில் ஏறுதழுவுதல்
சங்க இலக்கியமான கலித்தொகை
என்றுரைக்கிறது. அதற்கு நச்சினார்க்கினியர் எழுதும் உரை: "கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்." என்பதாகும். பாடலின் இறுதியில் அடக்கப்பட்ட மற்றும் அடக்கப்படாத காளைகள் தொழுவத்தைக் கடந்து வயல்வெளிகளுக்கு ஓடிவிட்ட பின்னர் காளைகளும் ஆயர்குல மகளிரும் ஆட்டம் ஆடும்போது திருமாலையும் அரசனையும் வாழ்த்துகின்றனர்.
பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் நடைபெற்று வந்தது. ஆயர் குல இளைஞர்கள் ஊரார் முன்னிலையில் காளையை அடக்குவர். வெற்றி பெற்ற இளைஞர்களில் மனம் கவர்ந்தவனுக்கு மாலை சூட்டுவாள் ஆயர் குலப் பெண்.
ஆயச்சியர் குரவைக் கூத்தும் ஏறு தழுவுதலும்
ஏறு தழுவலுக்கும் குரவைக் கூத்திற்கும் தொடர்பிருந்தது . குரவைக் கூத்து ஏறு தழுவலுக்குரிய நாளுக்கு முதல் நாள் மாலையிலாவது, ஏறு தழுவும் நாளின் மாலையிலாவது ஊர் பொதுமன்றே நிகழும். முதல் நாளாயின் தம் காதலரை ஏறு தழுவுவதற்குத் தூண்டும் பாட்டுகளையும், ஏறுதழுவிய நாளாயின் தம் காதலர் வெற்றியைக் கொண்டாடும் பாட்டுகளையும் ஆயர் குல மகளிர் பாடுவர். ஏறுதழுவுதல் மண வினையுடன் தொடர்புடையதாய் அமைந்திருந்தது. காளையை அடக்கிய மணமாகா இளைஞர் பெண்ணினைப் பரிசாகப் பெறுவதுண்டு. இன்று ஏறு தழுவுதல் என்ற பெயர் வழக்கில் இல்லை. இருப்பினும் ஏறுதழுவலின் எச்சமாக இன்றைய சல்லிக்கட்டு விளங்குகிறது.
ஏறுதழுவுதலும் ஜல்லிக்கட்டும்
ஏறு தழுவுவதற்கும் சல்லிக்கட்டுக்கும் சில வேறுபாடுகளே உள்ளன. முல்லை நிலத்து மக்களாகிய ஆயரிடம் மட்டுமே ஏறுதழுவுதல் இடம்பெற்றது. தற்போது சல்லிக்கட்டில் ஆயர் மட்டுமின்றிப் பல திறத்தவரும் பங்கேற்கிறார்கள். இருப்பினும் சல்லிக்கட்டில் வென்றவர் பணமுடிப்பினைப் பரிசாகப் பெறுதல் ஆயரிடம் பெரும்பான்மையாக உள்ளது. சல்லிக்கட்டு தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாளன்று விழா போல் கொண்டாடப்படுகிறது. ஏறு தழுவுதல் விழா தெய்வ நம்பிக்கையுடன் தொடர்புடையதாக இருக்கவில்லை. ஆனால் சல்லிக்கட்டு கிராமிய தேவதைகளின் வழிபாட்டு நம்பிக்கையுடன் தொடர்புடையதாகத் திகழ்கிறது. அம்மை, வைசூரி போன்ற கொடிய நோய்கள் பரவிய காலத்திலும், மழையில்லா வறட்சிக் காலங்களிலும், பிள்ளை வரம் கேட்கும் நிலையிலும் வேண்டுதல் நடைபெறும். இக்குறைகள் நீக்கப்பட்டால் பொங்கல் நாளன்று சல்லிக்கட்டுகிறோம் என்பதே வேண்டுகோளாய் அமைகிறது.
மற்ற நாடுகளில் காளைப்போர்
ஸ்பெயின், போர்ச்சுகல், மெக்சிகோ நாடுகளில் காளைப் போர் முக்கியமான தேசியப் பொழுதுபோக்கு விளையாட்டாக இன்றும் நடைபெறுகிறது. காளைகளை அரங்கத்திற்குள் விரட்டி, ஆத்திரமூட்டிச் சண்டையிட்டுக் கொல்வதே இக்காளைப் போரின் நோக்கம். இம்மேனாட்டுக் காளைப் போரும் சல்லிக்கட்டும் ஒன்று போலத் தோன்றினாலும், இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை ஆகும்.
தென்மாவட்டங்களின் பங்கேற்பு
மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பேரையூர் போன்ற இடங்களிலும், சிவகங்கை மாவட்டம் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை போன்ற இடங்களிலும், புதுக்கோட்டைமாவட்டம் நார்த்தாமலை போன்ற இடங்களிலும் சல்லிக்கட்டு நடைபெறுகிறது. மேலும், திருச்சி, தேனி போன்ற தென் மாவட்டங்களிலும் இவ்விளையாட்டு நிகழ்கிறது.
உலக அளவில் சிறப்பு வாய்ந்தது அலங்காநல்லூர் சல்லிக்கட்டு ஆகும். ஆண்டுதோறும் இவ்விழாவைக் காண வெளிநாட்டவர் உட்பட பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் அலங்காநல்லூரில் குவிவது வழக்கம்.