கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, July 12, 2020

பதிற்றுப்பத்து PATHITRUPATHU

பதிற்றுப்பத்து  எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். 
இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு. 
இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. 
ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. 
இந்த எண்பது பாடல்கள் இரண்டு சேரர் மரபைச் சேர்ந்த எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன. 
உதியஞ்சேரல் வழித்தோன்றல்களான ஐந்து சேர மன்னர்களும் அந்துவஞ்சேரல் இரும்பொறை வழித்தோன்றல்கள் மூவரும் அந்த 8 பேர்.
இந்நூற்பாக்கள் அகவாழ்வோடு இணைந்த புறவாழ்க்கையோடு தொடர்புடைய புறப்பொருள் பற்றிவை ஆகின்றன. 
சேர மன்னர்களின் காதற்சிறப்பு, கல்வித் திறம், மனத் திண்மை, புகழ் நோக்கு, ஈகைத் திறம், கலைஞர் காக்கும் பெற்றி ஆகிய பண்புகளையும் படை வன்மை, போர்த்திறம், குடியோம்பல் முறை, பகையரசர் பால் பரிவு, கவிஞரை காக்கும் பண்பு பெண்களை மதிக்கும் மாண்பு ஆகிய ஆட்சி மற்றும் பல்வகை திறன்களையும் சித்தரிக்கின்றன.

பதிற்றுப்பத்தின் பதிகங்கள் காலத்தால் பிற்பட்டன. 

இவை ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் நூலின் காலத்துக்குப் பிற்பட்டனவாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றன. இந்நூலின் 10 பதிகங்களில் எட்டு பதிகங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. 

இப்பதிகங்களுக்கு கட்டமைப்புச் சிறப்பு உண்டு. 

பதிகத்தின் முதற்பகுதி கவிதையாகவும் இரண்டாம் பகுதி உரைநடையாகவும் உள்ளன. 

கவிதைப் பகுதி நூலின் பாக்களைப் போன்று ஆசிரிய நடையில் உள்ளது. 

இந்த பதிகங்களின் முதற்பகுதி சீர்மை மிக்க கவிதைகளாக உள்ளதால் இவற்றை எழுதி நூலைப் பதிப்பித்தவர் கவிஞராக இருந்திருக்கிறார் என்பது புலனாகிறது.

இப்பதிகங்கள் சோழமன்னர்களின் கல்வெட்டுகளிலும் செப்புப்பட்டையங்களிலும் முதலில் காணப்படும் மெய்கீர்த்திகளை ஒத்துள்ளன.

பதிற்றுப்பத்துப் பதிகங்களை கூர்ந்து நோக்கினால் சேர நாட்டை கடைச்சங்க காலத்தில் உதியஞ்சேரலாதன், அந்துவன் சேரலிரும்பொறை ஆகிய இரு சேர மரபினர் இரு இடங்களில் இருந்து ஆட்சி செய்தனர் என்பது தெளிவாகிறது. 

இரண்டாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியன் சேரலின் மகன் நெடுஞ்சேரலாதன் என்பதும், மூன்றாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியஞ்சேரலின் இரண்டாவது மகன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்பதும், நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது பத்துக்களின் பாட்டுடைத்தலைவர்களான களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் ஆகிய மூவரும் உதியஞ்சேரலின் பெயரர்கள் என்பதுவும் தெளிவாகின்றன. காணாமல் போன முதல் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியஞ் சேரலாக இருக்கலாம் என்று ஊகிக்கவும் முடிகிறது. 

ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் அந்துவன் சேரலிரும்பொறையின் மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன், எட்டாம் பத்தின் தலைவன் செல்வக்கடுங்கோவின் மகன் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை, 

ஒன்பதாம் பத்தின் தலைவன் பெருஞ்சேரலிரும்பொறையின் மகனான இளஞ்சேரல் இரும்பொறை என்பன புலனாகின்றன. காணாமல் போன பத்தாம் பத்தின் தலைவன் யானைகட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை மீது பாடப்பட்டிருக்கலாம் என்றும் சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.

பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் பதிகம் என்னும் பெயரால் தொகுப்புச் செய்திகளைத் தருகிறார். 

10 பாடல்களில் சொல்லப்பட்டுள்ளனவும், அவர் அறிந்தனவும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. 

10, 10 பாடல்களாகத் தொகுக்கப்பட்ட முறைமை இந்த நூலிலும், ஐங்குறுநூறு நூலிலும் காணப்படுகிறது. 

கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள்,  முதுமொழிக்காஞ்சி,  ஐந்திணை ஐம்பது போன்றவற்றிலும் காணப்படுகின்றன. 

அவை தொகுப்பில் வேறுபடும் பாங்கினை அந்தந்த நூல்களில் காணலாம். 

பதிற்றுப்பத்து நூலில் ஒவ்வொரு பாடலுக்கும் தலைப்பு, ஐங்குறுநூறு நூலிலும், திருக்குறள் நூலிலும் 10 பாடல்களுக்கு ஒரு தலைப்பு என்று அமைக்கப்பட்டுள்ளது.

நான்காம் பத்தின் பாடல்கள் அந்தாதிப்பாடல்களாய் அமைந்துள்ளன.

ஒரு பாட்டின் கடைசி வரி அடுத்த பாட்டின் முதல் வரியாக வருவதே அந்தாதியாகும். 

எடுத்துக்காட்டாக நான்காம் பத்தின் முதற்பாடல் கடைசி வரி போர்மிகு குருசில்நீ மாண்டனை பலவே. 

இப்பத்தின் அடுத்த பாடல் அதாவது 32 வது பாடல் முதல் வரி மாண்டனை பலவே போர்மிகு குருசில் நீ. 

மேற்கண்டவாறு விளக்கப்பட்டுள்ள அந்தாதித்தொடை இப்பத்தில் மட்டுமே காணப்படுகிறது.

தமிழ்த்துகள்

Blog Archive