கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, August 22, 2020

சர்வபள்ளி இராதாகிருட்டிணன் கட்டுரை SARVAPALLI RADHAKRISHNAN TAMIL ESSAY

 

சர்வபள்ளி இராதாகிருட்டிணன்

குறிப்புச்சட்டகம்

முன்னுரை


இளமைப்பருவம்

கல்வி

பணி

மேதைகளும் இராதாகிருட்டிணனும்

கல்வி பற்றிய கருத்துகள்

சமயங்கள் குறித்த பார்வை

ஆசிரியர் பற்றிய கருத்து

மாணவர்களின் பார்வையில்...

எழுதிய நூல்கள்

முடிவுரை

முன்னுரை

      நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

      போற்றாது புத்தேள் உலகு.

என்பது வள்ளுவனின் வாக்கு. இவ்வுலக புகழ் அனைத்தையும் ஒருங்கே பெற்று தேவர்கள் போற்றும் அளவிற்கு உயர்ந்தவர் மாண்புமிகு சர்வபள்ளி இராதாகிருட்டிணன் அவர்கள். இந்தியாவின் முதல் துணைக்குடியரசுத் தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவருமான அவரைப்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இளமைப்பருவம்

      1888 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் திருத்தணியில் சர்வபள்ளி என்ற கிராமத்தில் வீராசாமி, சீதம்மா இணையருக்கு மகனாகப் பிறந்தார்.

      இவர்தம் பதினாறாம் அகவையில் சிவகாமு என்பவரை மணந்தார். இவருக்கு 5 பெண் குழந்தைகளும் கோபாலன் என்ற மகனும் பிறந்தனர்.

கல்வி

இவர் திருப்பதி லுத்தரன் மிசன் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பையும், சென்னை கிறித்துவக்கல்லூரியில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். தத்துவப்பாடத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

பணிகள்

1918

மைசூர் பல்கலைக்கழகத்தில் தத்துவப்பேராசிரியர்.

1921

கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தத்துவப்பேராசிரியர்.

சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் உதவி பேராசிரியர்.

1931

ஆந்திர  பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர்.

1939

பெனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர்.

1946

யுனெஸ்கோவிற்குத் தூதுவர்.

1948

பல்கலைக்கழக கல்வி ஆணையத்தலைவர்

    

மேதைகளும் இராதாகிருட்டிணனும்

      ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இராபர்ட் ஜோன்ஸ் இராதாகிருட்டிணனின் சொற்பொழிவில் இன்னிசை தேனாக இனிக்கிறது, முகத்தில் ஒளி வீசுகிறது எனப் புகழ்ந்துரைத்தார்.

      ஒருமுறை வெளிநாட்டு விருந்தில் அனைவரும் கரண்டியில் உணவு அருந்திய போது இராதாகிருட்டிணன் அவர்கள் கையால் உணவு அருந்தினார். இதைக் கண்ட சர்ச்சில் கரண்டியால் உணவு அருந்துவதே ஆரோக்கியமான செயல் என்றார். அதற்கு இராதாகிருட்டிணன் அவர்கள் நம் கரண்டியைக் கொண்டு பிறர் சாப்பிட்டு எச்சில்படுத்தலாம். ஆனால் நம் கையைக் கொண்டு பிறர் சாப்பிட முடியாது எனக்கூறினார். அவரின் திறமையான பதில் கேட்ட சர்ச்சில் வியந்தார்.

கல்வி பற்றிய கருத்துகள்

      மனிதனின் உடல், மனம், ஆளுமை ஆகியவற்றின் தேவையை நிறைவேற்றுவதுதான் உண்மையான கல்வி என்றார். கல்வி இயற்கையோடு இயைந்த கல்வியாக இருக்க வேண்டும் என்றார்.

      மனநோய்கள், தவறான நடத்தைகள் போன்ற அனைத்தும் தவறான கல்வியின் விளைவுகள் என்றார். மனிதனுக்குக் கல்வி பெறும் திறன் இருப்பதுதான் அவனை விலங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்றார்.

சமயங்கள் குறித்த பார்வை

      சர்வபள்ளி இராதாகிருட்டிணன் அவர்களுக்குப் பிடித்த நூல் பகவத்கீதை ஆகும். பகவத்கீதை என்பது உபநிடதங்கள் எனும் பசுவிலிருந்து கிருஷ்ணன் எனும் தெய்வீக ஆயர் அர்ச்சுனனுக்காகக் கறந்த பால் என்று கூறினார்.

      சாதி உணர்வு கூடாது, தீண்டாமை இந்து சமயத்திற்குத் தேவையில்லாதது என உறுதிபடக் கூறினார். பிற மதங்களையும், சமயக் கொள்கைகளையும் மதித்தார்.

 

ஆசிரியர் பற்றிய கருத்து

      ஒவ்வொரு ஆசிரியரும் போர் வீரராக இருக்க வேண்டும். வெற்றி தோல்விகள் பற்றி கவலைப்படாமல் மாணவர்களின் முன்னேற்றம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறினார்.

மாணவர்களின் பார்வையில்...

      தெளிவான தீர்க்க தரிசன எண்ண ஓட்டம், தானாக வரும் தரமான சொற்கள், அழகான மொழிநடை கொண்டவர் என்று மாணவர்கள் இராதாகிருட்டிணன் அவர்கள் குறித்து புகழ்ந்துரைத்தனர்.

      மாணவர்களிடம் நட்புடன் பழகினார். வீட்டிற்குச் சந்தேகம் கேட்க வரும் மாணவர்களைப் பாராட்டி, தேநீர் தந்து இன்முகத்துடன் ஐயம் போக்கினார்.

எழுதிய நூல்கள்

      இவருடைய தலைசிறந்த நூலான இந்திய தத்துவம் 1923 ஆம் ஆண்டு வெளிவந்தது. மகாத்மா காந்தி, பகவத்கீதை விளக்க உரை, முதன்மை உபநிடதங்கள், இந்திய சமயங்களின் சிந்தனைகள், இரவீந்திரநாத்தின் தத்துவம், தம்மபதம், உண்மையான கல்வி போன்றவை இவர் எழுதிய நூல்களில் சில.

முடிவுரை

      1954 ஆம் ஆண்டு பாரதரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது. 1962 ஆம் ஆண்டு இந்தியாவின் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுத் தம் பணியைத் திறம்படச்செய்தார். ஏப்ரல் 17, 1975 ஆம் ஆண்டு தன் 86- ஆவது அகவையில் இயற்கை எய்தினார். இவரின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அவரைப் போற்றி, அவர் காட்டிய பாதையில் பயணிப்போம்.

 கட்டுரையாளர்ஞா.லாவண்யா, தமிழாசிரியர், ஆமத்தூர், விருதுநகர் மாவட்டம்.

தமிழ்த்துகள்

Blog Archive