வினைகளைப் போக்குபவர் விநாயகர். எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும் அது எவ்வித தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் தொடங்குவது நமது வழக்கம். எந்த செயல்களைச் செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டுதான் ஆரம்பிக்கிறோம். கணபதியை வணங்கினால் காரியத்தடைகள் யாவும் நீங்கும். விக்ன விநாயகனை வணங்க வினை எதுவும் நெருங்காது.
🔱முழுமுதற் கடவுளான விநாயகரின் முக்கியமான திருவிழா விநாயகர் சதுர்த்தி ஆகும். ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தி என்று அழைக்கின்றோம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி நாளை சனிக்கிழமை ஆவணி 22ஆம் தேதி (07.09.2024) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் நாம் விரதமிருந்து முறையாக விநாயகரை வழிபட்டு அருகம்புல் மாலையிட்டு அவரைக் கொண்டாடினால், நமக்கு எல்லாவிதமான நன்மைகளும் உண்டாகும்.
விநாயகர் சதுர்த்தி நாளில் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகள் செய்யப்படுகின்றது. இங்கே நிறுவப்படும் விநாயகர் சிலைகள் முக்கால் அடியில் இருந்து 70 அடி வரை விதவிதமாக செய்யப்படுகின்றது. பின்னர் விநாயகர் சிலையை 3வது நாள் அல்லது 5வது நாள் ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் 10 நாட்கள் வரை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
🏡வீடுகள் மற்றும் கடைகளில் சிறிய அளவு மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பூஜையறையில் வைத்து, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்யப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம்
⏰ காலை : 07.45 AM - 08.45 AM
⏰ காலை : 10.40 AM - 01.10 PM
⏰ மாலை : 05.10 PM - 07.40 PM
வழிபாடு செய்யும் முறை
🏠வீட்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வாசலில் மாவிலையைத் தோரணமாகக் கட்ட வேண்டும். பூஜையறையை நன்றாக சுத்தம் செய்து விளக்கு, பூஜை பொருட்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
🌺பூஜையறையில் சிறியதொரு மனையை அமைத்து அதில் கோலமிட்டு வாழையிலையை வைத்து கொள்ளவும். வாழையிலையின் நுனியை வடக்குப் பார்த்தபடி வைப்பது சிறப்பு. பின் இலையின் மேல் பச்சரிசியை பரப்பி அதன் நடுவே விநாயகர் சிலையை வைக்க வேண்டும். விநாயகர் சிலையை உங்களுக்கு தகுந்தாற்போல் அழகுப்படுத்தி கொள்ளலாம்.
🌸பிறகு விநாயகருக்கு பல வகையான மலர்கள் சூட்டி வழிபடலாம். பல வகையான பழங்களையும் விநாயகருக்கு படைக்கலாம். விநாயகருக்கு பிடித்த அருகம்புல் அல்லது எருக்கம்பூ மாலை செய்து அணிவிக்கலாம்.
விநாயகருக்கு மிகவும் பிடித்த மோதகம், கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரை பொங்கல் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி நாளன்று விநாயகர் துதி, விநாயகரின் திருநாமங்கள், விநாயகர் அகவல் படித்து வணங்கலாம். விரதம் இருப்பவர்கள் உணவு எடுத்துக்கொள்ளாமல், பூஜைகளை முடித்து, விநாயகரை வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.
நன்மைகள்
விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப்பேறும், துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். காரிய அனுகூலமும் உண்டாகும். இடையூறு விலகும்.
பெரும் புகழுடன் சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களுடன் வாழ்வார்கள். விநாயகர் விரதத்தை ஸ்ரீகற்பக விநாயகர் வீற்றிருக்கும் பிள்ளையார்பட்டியிலும் செய்யலாம்.