ஒருமுறை ஒளவையார் ஓர் ஊரிலிருந்து வேறோர் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார்.
அவ்வாறு சென்ற வழியில் ஒரு காடு இருந்தது.
அந்தக் காட்டில் வெயில் அதிகமாகக் காய்ந்து கொண்டிருந்தது.
வெயிலில் நடந்து வந்த ஒளவையாருக்கு மிகவும் களைப்பாக இருந்தது.
அருகில் நின்ற நாவல் மர நிழலில் அவர் அமர்ந்தார்.
அந்த நாவல் மரத்தின் மேல் ஆடு, மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் இருந்தான்.
நாவல் மர நிழலில் களைப்புடன் இருந்த ஒளவையாரை அவன் பார்த்தான்.
‘பாட்டி....! நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள்... நாவல் பழம் சாப்பிடுகிறீர்களா?’ என்று ஒளவையாரைப் பார்த்துக் கேட்டான்.
ஆடு, மாடு மேய்க்கும் அந்தச் சிறுவனை ஒளவையார் மிகவும் சாதாரணமாகக் கருதினார்.
எனவே, ‘சரி... அப்பா.... நாவல் பழங்களைப் பறித்துப் போடு!’ என்றார்.
ஒளவையாரின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட அந்தச் சிறுவன் ‘பாட்டி.... உங்களுக்குச் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என்று கேட்டான்.
ஒளவையாருக்கு ஒன்றும் புரியவில்லை.
‘நாவல் பழத்தில் சுட்ட பழம், சுடாத பழம் என்று எதுவும் கிடையாதே!’ என்று எண்ணினார்.
என்றாலும் இந்தச் சிறுவனிடம், சுட்ட பழத்திற்கும் சுடாத பழத்திற்கும் விளக்கம் கேட்பது தமது புலமைக்கு இழிவு என்று அவர் கருதினார்.
‘சுட்ட பழமாகவே நீ பறித்துப் போடப்பா.....’ என்று ஒளவையார் கூறினார்.
மரத்தில் இருந்த சிறுவன் நன்கு பழுத்த நாவல் பழங்களைப் பறித்து மண்ணில் வேகமாகப் போட்டான்.
மண்ணில் கிடந்த நாவல் பழங்களை ஒளவையார் ஒவ்வொன்றாகக் கையில் எடுத்தார்.
அவற்றில் நிறைய மண் ஒட்டி இருந்தது.
அந்த மண்ணைத் துடைப்பதற்காக ஒளவையார் ‘ஃபூ..... ஃபூ’ என்று ஊதினார்.
ஒளவையார் பழத்தை ஊதுவதை மரத்தின் மேலிருந்த சிறுவன் கண்டான்.
‘பாட்டி....! பழம் சுடுகிறதா? நன்றாக ஊதிச் சாப்பிடுங்கள்!’ என்று கூறினான்.
அப்போதுதான் ஒளவையாருக்குச் ‘சுட்ட பழம் எது? சுடாத பழம் எது?’ என்பது புரிந்தது.
ஆடு மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன், தன்னை வென்று விட்டானே என்று வெட்கப்பட்டார்.
தனது வெட்கத்தை நினைத்து வருந்திய ஒளவையார் பின்வரும் பாடலைப் பாடினார்.
கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித் தண்டுக்கும் நாணும் - பெருங்கானில்
கார்எருமை மேய்க்கின்ற காளைக்குநான் தோற்றது
ஈரிரவு துஞ்சாது என்கண்
(கருங்காலிக் கட்டை = ஈட்டி மரக்கட்டை,
நாணா = கலங்காத,
கோடாலி = கோடரி,
கதலித்தண்டு = வாழைத்தண்டு,
ஈரிரவு = இரண்டு இரவு,
துஞ்சாது = தூங்காது)
கருங்காலிக் கட்டை மிகவும் உறுதியானது.
அதை எளிதில் பிளக்கக் கூடிய கோடரி, வாழைத்தண்டை வெட்டும்போது சறுக்கும்.
அதுபோல நானும் எருமை மாடு மேய்க்கின்ற சிறுவனிடம் தோற்றுவிட்டேன்.
எனவே இரண்டு இரவுகள் எனக்குத் தூக்கம் வராது என்று வருந்தினார்.