இந்து மதத்தினுள் உள்வாங்கப்பட்ட சமயமான காணாபத்தியம் எனும் பிரிவு விநாயகரை மையப்படுத்திய சமயம்.
இந்துக்களின் புராணங்களில் விநாயகர் மற்றைய இந்துக்கடவுள்களான சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாகவும் முருகன் எனும் கடவுளின் அண்ணனாகவும் கூறப்படுகிறார். இக்கடவுளின் வாகனம் மூஞ்சூறு .
’கணேச புராணம்’, கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களிலும் நான்கு அவதாரங்களாக அவதரிப்பதாகக் கூறுகின்றது.
கிருத யுகம்
காஸ்யப முனிவருக்கும் அதீதீ தேவிக்கும் பிள்ளையாக அவதரித்து அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். கிருத யுக அவதாரத்தில் பிள்ளையாரின் திருநாமம் மகாகடர்.
திரேதா யுகம்
அம்பிகை பார்வதியின் பிள்ளையாக அவதரித்து, அழகான மிகப்பெரிய மயிலை தம் குழந்தைப் பருவத்தில் பிடித்து விளையாடியதால் மயூரேசர் என்ற திருநாமம்
துவாபர யுகம்
கஜானனன் என்ற திருநாமத்துடன் அவதரித்து, பராசர மகரிஷி மற்றும் பராசர மகரிஷியின் தேவி வத்ஸலாவால் சிறப்பாக வளர்க்கப்பட்டார்.
கலி யுகம்
சிவபெருமானுக்கும் அம்பிகை பார்வதி தேவிக்கும் குழந்தையாக அவதரித்து அதர்மம் செய்வோரின் செயல்களில் தடங்கல்களையும் தர்மநெறியில் இருப்போரின் இன்னல்களைப் போக்கியும் வருவதாகக் கணேச புராணம் குறிப்பிடுகின்றது
விநாயகர் பிறப்பு பற்றி பல்வேறு கதைகள் இருந்தாலும் சிவமகா புராணத்தில் உள்ள கதை பரவலாக அறியப்படுகிறது. அதன்படி முற்காலத்தில் யானை முகம் கொண்ட கஜாசுரன் என்ற அசுரன், சிவபெருமானை நோக்கி பல வருடங்களாக கடுந்தவம் புரிந்தான். அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்து வேண்டிய வரம் கேட்குமாறு கூறுகிறார். அதற்கு கஜாசுரன், தன் வயிற்றில் சிவபெருமான் லிங்க வடிவில் தங்கியிருக்க வேண்டும் என்று வரம் கேட்டுப் பெற்றார். இதை அறிந்து கலக்கமடைந்த பார்வதி தேவி, தன் அண்ணன் விஷ்ணுவிடம் உதவி கோரினார்.
பிறகு விஷ்ணு மற்றும் நந்தி ஆகிய இருவரும் தெருக்கூத்து நடத்துபவர்கள் போன்ற உருவம் கொண்டு கஜாசுரனின் அரண்மனைக்கு வந்தனர். நந்தியின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த கஜாசுரன், அவர் வேண்டுவதை அளிப்பதாக வாக்களிக்கிறான். அதற்கு நந்தி அவனிடம் சிவபெருமானை விடுவிக்குமாறு கேட்கிறார். கஜாசுரனும் தான் கொடுத்த வாக்கின்படி சிவபெருமானை விடுவித்தான். அவன் சிவபெருமானை நோக்கி பிரபஞ்சத்தில் தன் நினைவு என்றும் அழியாமல் நிலைக்க வேண்டும் என்று வேண்டுகிறான். அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், கஜாசுரனின் யானைத் தலையைக் கொய்து அவரைப் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுவிக்கிறார். மேலும் அவனது யானைத் தோலை உடுத்திக் கொண்டு கஜசம்ஹார மூர்த்தியாக காட்சியளித்தார். பிறகு சிவபெருமான் தன் வாகனமான நந்தியில் அமர்ந்து கொண்டு கயிலாயம் வருகிறார.
சிவபெருமான் கயிலாயம் வந்து கொண்டிருப்பதை அறிந்து மகிழ்ந்த பார்வதி, அவரை வரவேற்கும் முன்பு தயாராக நினைத்தார். ஆனால் அப்போது நந்தி இல்லாததால் அங்கு வாயிற்காவலர் யாரும் இருக்கவில்லை. எனவே பார்வதி தாம் குளிக்கும் முன்பு மஞ்சள் விழுதால் ஒரு சிறுவனைச் செய்து அதற்கு உயிர் கொடுத்தார். அவனுக்கு விக்னங்களைத் தீர்ப்பவன் என்ற பொருளில் விநாயகர் என்ற பெயர் சூட்டினார். மேலும் தான் தயாராகி வரும் வரை ஒருவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று விநாயகரிடம் அறிவுறுத்துகிறார். விநாயகரும் அவ்வாறே செய்வதாக வாக்களிக்கிறான். பிறகு கயிலாயம் வந்தடைந்த சிவபெருமானை விநாயகர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவபெருமான் தன் திரிசூலத்தால் விநாயகரின் தலையைக் கொய்தார். பிறகு நடந்நதை அறிந்து கோபம் கொண்ட பார்வதி, பிரபஞ்சத்தையே அழிக்க முடிவெடுத்தார். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று பிரம்மதேவர் வேண்டிக் கொண்டார். அதற்கு பார்வதி, விநாயகரை உயிர்த்தெழச் செய்ய வேண்டும் மற்றும் விநாயகரையே அனைவரும் முழுமுதற் கடவுளாக வணங்க வேண்டும் என்று இரு நிபந்தனைகள் விதித்தார். அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், வடக்கில் தலை வைத்து இறந்த நிலையில் படுத்திருக்குமாறு முதலில் தென்படும் உயிரினத்தின் தலையைக் கொய்து எடுத்து வருமாறு சிவகணங்களை அனுப்பினார். அதன்படி சிவகணங்கள் கஜாசுரனின் தலையுடன் திரும்பி வந்தனர். அதை விநாயகரின் உடலோடு பொருத்தினார் பிரம்மதேவர். பிறகு விநாயகருக்கு உயிரளித்த சிவபெருமான், அவனுக்கு முழுமுதற் கடவுள் என்ற பட்டமும் கணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி என்றும் பெயரையும் வழங்கினார்.
விநாயகர் உருவ விளக்கம்
திருவடி
ஆன்மாவைப் பொருந்தி நின்று மலகன்ம மாயைகளை தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன.
பெருவயிறு
ஆகாசம் எல்லாப் பொருள்களும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந்தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது.
ஐந்துகரங்கள்
பிள்ளையாரின் ஒரு கை பாசத்தை ஏந்தியுள்ளது. அது படைத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே பிரம்மாவாகிறார். தந்தம் ஏந்திய கை காத்தலை குறிக்கிறது. எனவே இவரே மகாவிஷ்ணுவாகிறார் துதிக்கை அனுக்ரகம் செய்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது.எனவே, இவா் ருத்ரா் ஆகிறார் மோதகம் ஏந்திய கை அருளைக் குறிக்கிறது. எனவே,இவரே சா்வ சக்தி படைத்த பரமேஸ்வரனாகவும் இருக்கிறார்
கொம்புகள்
மகாபாரதத்தை எழுதுவதற்காக தமது கொம்பையே ஒடித்தது வெளித்தோற்றத்தை விட அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டியதை உணர்த்துவதாகக் கூறப்படுகின்றது.[8]
தாழ்செவி
விநாயகரின் முறம் போன்ற பெரிய காதுகள் செவியில் விழும் செய்திகளை சலித்து நல்லவற்றை மட்டும் தேர்ந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றன.
முப்பத்தியிரண்டு விநாயக மூர்த்தங்கள்
- உச்சிட்ட கணபதி
- உத்தண்ட கணபதி
- ஊர்த்துவ கணபதி
- ஏகதந்த கணபதி
- ஏகாட்சர கணபதி
- ஏரம்ப கணபதி
- சக்தி கணபதி
- சங்கடஹர கணபதி
- சிங்க கணபதி
- சித்தி கணபதி
- சிருஷ்டி கணபதி
- தருண கணபதி
- திரயாக்ஷர கணபதி
- துண்டி கணபதி
- துர்க்கா கணபதி
- துவிமுக கணபதி
- துவிஜ கணபதி
- நிருத்த கணபதி
- பக்தி கணபதி
- பால கணபதி
- மஹா கணபதி
- மும்முக கணபதி
- யோக கணபதி
- ரணமோசன கணபதி
- லட்சுமி கணபதி
- வர கணபதி
- விக்ன கணபதி
- விஜய கணபதி
- வீர கணபதி
- ஹரித்திரா கணபதி
- க்ஷிப்ர கணபதி
- க்ஷிப்ரபிரசாத கணபதி
விநாயகர் சதுர்த்தி
தமிழகத்தில் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு தற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கே நிறுவப்படும் விநாயகர் சிலைகள் முக்கால் அடியில் இருந்து 70அடி வரை விதவிதமாக செய்யப்படுகின்றன. பின்னர் விநாயகர் சிலையை 3வது நாள், 5வது நாள் ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. வீடுகள் மற்றும் கடைகளில் சிறிய அளவு மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பூஜை அறையில் வைத்து, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்யப்படுகிறது.
தமிழ் நாட்டின் சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோவில்கள் இருப்பதேயாகும். கோயில் என்று பெயர் வைத்து கூரையும் விமானமும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பது கூட இல்லாமல் அரசமரத்தடி, குளக்கரை முச்சந்தி நாற்சந்தி தெருமுனை என வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஒரே சுவாமி பிள்ளையார்தான்.
இந்தோனேசியா நாட்டின் ருபியா நோட்டில் விநாயகப் பெருமானின் திருவுருவம் உள்ளது