பல்லூடகப் பயன்பாடு
முன்னுரை
"காசி நகர்ப் புலவர் பேசும் உரை தான் காஞ்சியில்
கேட்பதற்கோர் கருவி செய்வோம்!"-என்றார் மகாகவி பாரதியார். ஆனால் இன்றோ
காசியில் மட்டுமல்ல உலகின் எந்த ஒரு மூலையில் ஒரு நிகழ்வு நடந்தாலும் உடனுக்குடன்
கேட்கவும் முடியும் பார்க்கவும் முடியும். நாம் அறிவியல் யுகத்தில் வாழ்ந்து
வருகிறோம். மனிதனின் ஆறாம் அறிவான பகுத்தறிவு நமக்கு மண்ணை மட்டுமல்ல விண்ணையும்
ஆளும் வல்லமையைத் தந்துள்ளது. கண்ணால்
காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய் என்பார்கள் நம்
முன்னோர்கள். இன்றைக்கு நம்முடைய தகவல் தொடர்பு சாதனங்கள் அறிவியலின் துணையோடு
இமாலய வளர்ச்சி பெற்றுவிட்டது. பல்லூடகங்களின் பயன்பாடு குறித்து நாம் இக்
கட்டுரையில் காண்போம்!
தொலைக்காட்சியும் கல்வி
நிகழ்ச்சிகளும்
'தொலைக்காட்சிப்
பெட்டி ஒரு முட்டாள் பெட்டி' என்றார்கள். வானொலியில் இருந்து தொலைக்காட்சிக்குத் தாவிய போது கல்வியாளர்கள்
விடுத்த எச்சரிக்கை இது!. ஆனால் தொலைக்காட்சியைப் பயன்படுத்தும் விதமோ இன்று
பல்வேறு பயன்களைத் தருவதாக உள்ளது." கல்வித் தொலைக்காட்சி" என்ற தனி
அலைவரிசையில் கற்றல்- கற்பித்தல் மேம்பட மாணவர்களுக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு
வருகின்றன. "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப
வாழும் உயிர்க்கு", என்றார் திருவள்ளுவர். அது மட்டுமா
உலகச்செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை உடனுக்குடன் தெரிவிக்கின்றன
தொலைக்காட்சி நிறுவனங்கள். முக்கிய நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்பு செய்து மக்களை
விழிப்புணர்வுடன் வாழச் செய்யும் பணியைச்செவ்வனே செய்கின்றன. சமூகச் சீர்திருத்த
நாடகங்கள் மூலம் பெண் கல்வியின் அவசியம் பெண்களின் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின்
கூறுகளைப் புரிய வைத்தல் போன்ற பணிகளைச் செய்கின்றன.மத்திய மாநில அரசுகளின்
நடைமுறைகளையும் முக்கிய நிகழ்வுகளையும் ஒலி ஒளிக் காட்சிகளாகப் பதிவு செய்து
ஒளிபரப்புகின்றன.
உலகம் உள்ளங்கையில்
"உன் நண்பன் யார் என எனக்கு காட்டு; நீ யார் என நான்
கூறுகிறேன்"என்பார்கள் நம் முன்னோர். ஆனால்
இன்றோ உலகமெங்கும் நாம் முகநூல் மூலம் நண்பர்களைப் பெற்று
இருக்கிறோம்.செய்திகளையும் நிழற்படங்களையும் உடனுக்குடன் பரிமாறிக் கொள்கிறோம். திறன்பேசி
உதவியால் காணொலி உரையாடல் மூலம் அவர்களை நேரடியாகப் பார்க்கவும் முடிகிறது.
வெடித்துச் சிதறும் எரிமலைகளைப் பார்க்க முடிகிறது. அடர்ந்த காட்டுக்குள்
வேட்டையாடும் விலங்குகளைப் பார்க்க முடிகிறது. மிகவும் சிக்கலான அறுவைச்
சிகிச்சைகளை வெளி நாட்டில் இருக்கக்கூடிய ஒரு மருத்துவர் அங்கிருந்தே ஆணையிட
இங்குள்ளோர் நேரடியாகச் செய்ய முடிகிறது." ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகசைவு கூட உலகின் மற்றொரு பகுதியில் ஓர் எதிர்
விளைவை ஏற்படுத்தக் கூடும்"என்ற
ஆய்வாளர்களின் கூற்று உண்மையாகி இருக்கிறது. ஆழ்கடலில் வாழக்கூடிய உயிரிகளைப் படம்
பிடித்துக் காட்ட முடிகிறது. ஒரே நேரத்தில் ஸ்பெயினில் நடைபெறக்கூடிய காளைச்
சண்டையையும் அலங்காநல்லூரில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை வெவ்வேறு
அலைவரிசைகளில் கண்டு களிக்க முடிகிறது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
"கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்பதனை இன்று உலகம் கண்கூடாகக் கண்டு வருகிறது. ஆம் உலகின்
மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் பணியாற்றிவரும் பேராசிரியர்கள் உலகின் எந்த ஒரு
மூலையிலும் இருக்கக்கூடிய ஒரு மாணவனுக்கு தான் இருந்த இடத்திலிருந்தே பயிற்சி
அளிக்க முடிகிறது. 'யாதும் ஊரே
யாவரும் கேளிர் 'என்றார் கணியன்
பூங்குன்றனார் அன்று; இணைய
(வையக விரிவு வலை) வலை மூலம் நாம் இணைந்திருக்கிறோம் இன்று.' முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு'என்ற தெய்வப் புலவரின் வரிகள் இன்று மொழிகள் கடந்து இனம்
கடந்து மதம் கடந்து சாத்தியமாகிறது என்றால் அதற்கு இணையதளமே காரணம் ஆகும்.
கலாச்சாரம் பண்பாடு இவை பரிமாற்றம் செய்யப் படவேண்டும். தனக்கென்று ஓர்
அடையாளத்தைத் தான் சென்ற இடமெல்லாம் முத்திரை பதித்தவன் தமிழன். அமெரிக்காவில்
இருந்துகொண்டே தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய பொங்கல் விழாவைக்
காணமுடிகிறது.தமிழ்நாட்டில் இருப்போர் மலேசியாவில் நடைபெறக்கூடிய வழிபாட்டு
நிகழ்ச்சிகளை நேரலையில் கண்டு களிக்க முடிகிறது. தூரம் நமக்கு பாரமில்லை.
உறவுக்குத் தொலைவு தடையில்லை.
சைபர் குற்றங்களும்
விழிப்புணர்வும்
பெண்ணும் பூவும்
பிறந்த இடத்திலேயே இருந்து விட்டால் அதற்கு மதிப்பில்லை. அதே சமயத்தில் அவற்றின்
நடமாட்டத்தால் மனமும் மணமும் பாதித்து விடக்கூடாது.
பாதகம் செய்பவரைக் கண்டால் -நீ
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா- அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
என்கிறார் முண்டாசுக்கவி பாரதி. ஆராயாது
கொள்ளக்கூடிய நட்பு ஆபத்திலும் முடிந்து விடும் என்பதை நாம் எச்சரிக்கை உணர்வுடன்
கடைப்பிடிக்க வேண்டும். நாம் பரிமாறக் கூடிய செய்திகளும் நிழற்படங்களும்
நம்பகத்தன்மை உடையனவா என்பதைச் சோதித்து அறிந்து கொள்ள வேண்டும். காவல்துறையினரால்
பெண் பிள்ளைகளுக்கு என சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள தனிச் செயலியைத் திறன்பேசியில்
தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். சுவைமிக்க தேனை சுவைக்க வேண்டும் என்றால் தேனீக்களைக் கையாளும் வித்தை தெரிந்திருக்க வேண்டும். முள் படாமல் ரோஜாவைப் பறிக்கும் ஒருவருக்கே அதன்
வாசனை இனிமையாக இருக்கும். விழிப்புணர்வு இல்லாமல் இணையதளம் மூலம் எதை
வேண்டுமானாலும் பதிவிடலாம், யாருடன் வேண்டுமானாலும் நட்புக்
கொள்ளலாம் என்ற மன நிலையை நாம் மாற்றியாக வேண்டும். 'சைபர் குற்றங்கள்'என்று
பெயரிடப்பட்டுள்ள இணையதளம் மூலம் நடைபெறும் மோசடிகளைக் காவல்துறை உதவியுடன் களை
எடுக்க வேண்டும்.
பல்லூடகக் கருவிகள்
'தேரான்
தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்', எனவே ஆராயாது நட்புக் கொள்ளக் கூடாது. கணினி, மடிக்கணினி,
உள்ளங்கைக் கணினி, திறன்பேசி இவற்றின் மூலம் இன்று விரல்நுனியில் பல்வேறு செய்திகளை நாம் தெரிந்து
கொள்கிறோம்! தெரிந்துகொண்ட செய்திகள் அனைத்தும் உண்மை தன்மை உடையதா என்பதை ஆராய
வேண்டியது அவசியம். உண்மைத் தன்மை அறியாது நம்மிடமுள்ள பல்லூடக கருவிகள் மூலம்
அவற்றை பிறருக்கும் பரப்புவது குற்றமாகும். தேவையற்ற உண்மை சிறிதும் இல்லாத
செய்திகளை பொதுத் தளங்களில் பதிவிடுவதும் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இன்றைக்கு
மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இணையதளம்
மூலம் நேரலையில் அவர்கள் படங்களை படிப்பதற்கு ஏதுவாக இணையதள சேவை வழங்குநர் மூலமாக
இணைப்புப் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய படைப்பாற்றல் திறனை
வெளிக்கொண்டு வருவதற்கும் உலகம்முழுவதும் அதைக்கண்டு அங்கீகாரம் செய்வதற்கும் பல்லூடக கருவிகள் பெரும்பயன் விளைகின்றன. சரியாக இவற்றை நாம் பயன்படுத்தினால் பேச்சுத்திறன்
எழுதும் திறன் கவிதை புனைதல் ஓவியம் வரைதல் சமையற்கலை தற்காப்புக் கலைகள் போன்ற
பல்வேறு கலைகளில் நாம் பெற்ற திறமையைக் கண்டு பாராட்டும். தொலைக்காட்சிகளில்
புவியியல், விலங்கியல், விளையாட்டு,
மொழித்திறன் வளர்ச்சி, முழுநேர செய்தி
வழங்குதல் என ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி செய்தி நிறுவனங்கள் உள்ளன. அரசு
அறிவிக்கும் ஆணைகள் மற்றும் திட்டங்களைத் தெளிவாக ,பொது
மக்களுக்குப் போய்ச் சேரும் வண்ணம் செய்திகள் ஒளிபரப்பப்படுகின்றன. பயிற்சி பெற்ற
ஊடகவியலாளர்கள் இலக்கியவாதிகள், தனித்திறனாளர்கள், விளையாட்டு வீரர்கள் விஞ்ஞானிகள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை
புரிந்தவர்களை நேர்காணல் செய்து அனைவரும் அறியும் வண்ணம் நமக்கு நிகழ்ச்சிகளைத்
தொகுத்து வழங்குகிறார்கள்.
முடிவுரை
செய்தி என்பது
யாது என்பதற்கு ஓர் அறிஞர் சொன்னாராம் ஒரு நாய் மனிதனைக் கடித்தால் அது செய்தி
அல்ல ஒரு மனிதன் நாயைக் கடித்தால் தான் அது செய்தி என்றாராம். அனைத்துச்
செய்திகளுமே கற்பனை கலந்து உண்மையோடு பொய்யும் கலந்ததாக இருந்தால், அவை தேவையற்ற குழப்பங்களைத்தான் தரும். கூறும் செய்திகள்
தகுந்த ஆதாரங்களோடு சொல்லப்படும்போது உண்மைத்தன்மை வலுப்பெறுகிறது. வானிலை
முன்னறிவிப்பு களும் வெள்ள அபாய எச்சரிக்கை இயற்கை சீற்றங்களை முன் அறிவிப்புகளும்
பொதுமக்களுக்கும் ராணுவம், காவல் துறையினருக்கும் மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும்
பெரும் உதவியாக இருக்கிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை. 'வானை அளப்போம் விண்மீனை அளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டு
தெளிவோம்'என்றார் பாரதி அன்று. நாமோ சந்திரனுக்குச் சந்திராயனையும்
செவ்வாய்க்கு மங்கள்யானையும் அனுப்புவதை நம் வீட்டில் இருந்துகொண்டே நேரலையில்
கண்டு இன்புறுகிறோம். 'அடுத்தது காட்டும் பளிங்குபோல்
நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்', என்கிறது
வள்ளுவம். நாமும் இன்று
திறன்பேசி மூலமும் தொலைக்காட்சி மூலமும் இணையதள சேவை மூலமும் உறவுகள் நட்புகள்
அலுவல் சார்ந்த செயல்பாடுகள் அனைத்தையும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களின்
உதவியுடன் மின்னல் வேகத்தில் செய்து வருகிறோம். இன்று யாரையும் யாரும் பொய்ச்
செய்திகளை கூறி ஏமாற்றி விட முடியாது. அந்த அளவுக்கு உண்மைகளைத் தேடித்
தெரிந்துகொள்ள பல ஊடகங்கள் பெரிதும் உதவுகின்றன. வெள்ளத்தனையது மலர் நீட்டம்
என்பார்கள். நம் இலக்கு விண்ணைத் தொடுவதாக இருக்கட்டும்! இனிவரும் தலைமுறைகள்
பல்லூடகப் பயன்பாட்டால் மண்ணையும் விண்ணையும் இணைக்கட்டும்!