புத்தக வாசிப்பும் மனிதநேயமும் - பேச்சுப்போட்டி...
"செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்"என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
கேட்டார்ப் பிணிக்கும் விதமாக நாம் பேச வேண்டும் என்றால் முதலில் படிக்க வேண்டும்.
அறியாமை அகல நாம் பள்ளிகளில் சென்று கல்வி கற்கிறோம்.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது பழமொழி.
ஆனால் படித்த படிப்போடு விட்டுவிடாமல் நூலகங்களிலும் சென்று புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் இருந்தால் நம்முடைய அறிவு விசாலம் அடையும்;உலகம் புரியும்; உள்ளத்தில் உணர்வுகளும் சொற்களும் பேச்சாய் கவிதையாய் கட்டுரையாய் வெளிப்படும்.
படிப்பாளி மட்டுமே படைப்பாளியாக முடியும்.
உலகத்தின் மாபெரும் தலைவர்கள் எல்லாம் புத்தக வாசிப்பைத் தம் உயிராக வைத்திருந்தவர்கள் தாம்!
லண்டன் நூலகத்தில் நாள் முழுவதும் 16 மணி நேரங்களைக் கழித்தார் கார்ல் மார்க்ஸ்.
அதனால் தான் உலகமே பாராட்டும் மூலதனம் என்ற நூல் பிறந்தது.
வாசிப்பு என்ற வெறி மட்டும் அவருக்கு இல்லாமல் இருந்திருந்தால் இப்படி ஒரு புரட்சியாளனை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது என்கிறார் லெனினின் மனைவி க்ரூப்ஸ்க்கா.
ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி? என்று கேட்ட பாரதியைத் தீவிரவாதியாக வைத்திருந்தது ஆங்கிலேய அரசு. ஏன்?
பாரதியின் வரிகள் ஒவ்வொன்றும் விடுதலை வேட்கையைத் தூண்டும்.
அக்கா அக்கா என்று நீ அழைத்தால் சுக்கா மிளகா கொடுக்கச் சுதந்திரம் கிளியே என்ற பாரதிதாசனின் வரிகளைக் கேட்டால்.. இளைஞனின் நரம்புகள் புடைக்கும்.
சுதந்திர வேட்கை கொதித்து எழும்.
உலகமே பாராட்டும் வண்ணம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நமக்குப் படைத்து அளித்த சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் நூலகம் திறக்கும் போது முதல் ஆளாகச் செல்வதும் நூலகம் மூடும்போது இறுதியாக ஆளாய் வெளி வருவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தவர்.
வெள்ளையன் தன்னைத் தூக்கிலிடும் கடைசி நேரம் வரை 'லெனின் புரட்சி' என்ற புத்தகத்தைக் கையில் ஏந்திப் படித்துக் கொண்டிருந்தானாம் புரட்சியாளன் பகத்சிங்.
லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றுவிட்டு இந்தியாவுக்கு கோட்டும் சூட்டும் ஆக வந்தவர்தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.
அவரை மகாத்மாவாக ஆக்கியது எது தெரியுமா இரண்டே இரண்டு புத்தகங்கள்தான் .
ஒன்று ஜான் ரஸ்கின் எழுதிய கடையனுக்கும் கடைத்தேற்றம்.
மற்றொன்று தோரே அவர்கள் எழுதிய சட்ட மறுப்பு நூல்.
இந்த இரண்டும்தான் கத்தியின்றி ரத்தமின்றி வெள்ளையனுக்கு எதிராக அகிம்சை என்ற ஒரு கருவியை வடிவமைக்க காந்தியடிகளுக்கு உதவியது.
நான் படிக்காத நூலொன்றை எனக்குத் தருபவர்களே எனக்கு மிகவும் விருப்பமானவர்கள் என்று ஆபிரகாம் லிங்கன் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல. ஜார்ஜ் வாஷிங்டன் வரலாறு என்ற புத்தகத்தைப் படித்த பின் தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிபராக ஆகவேண்டும் என்ற கனவு பிறந்தது அந்த ஏழை லிங்கனுக்கு.
அவரின் புத்தக வெறிக்கு ஒரு எடுத்துக்காட்டு கூறமுடியும். இரவல் வாங்கிய புத்தகங்கள் அவருடைய வீட்டில் இருந்தபோது மழையில் நனைந்து விட்டன.
இதனைக்கண்ட புத்தகத்தின் உரிமையாளர் வயல்களில் மாடுகளைப் பூட்டுவதற்குப் பதிலாக ஆபிரகாம் லிங்கனைப் பூட்டி வேலை செய்தாராம்.
புத்தகப் படிப்பிற்காக எவ்வளவு கொடுமைகளைத் தாங்கி, தன்னை ஒரு புரட்சியாளனாகச் செதுக்கியுள்ளார் லிங்கன் பார்த்தீர்களா?
காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் என்று தன்னுடைய வாழ்நாளில் ஆசைப்பட்டவன் பாரதி.
கலைமகள் என்ற பொருள் கொண்ட பாரதி என்ற பட்டத்தை மட்டும் சுமந்துகொண்டு எட்டயபுரம் முதல் காசி வரை இந்திய மண்ணை அளந்தவன் முண்டாசுக் கவிஞன்.
இதைத் தவிர அவனுக்கு வேறு சொத்துகள் எதுவும் இல்லை.இறக்கும் தருவாயில் தன்னுடைய பிள்ளைகளைக் கூட்டிச் சென்று தகரப் பெட்டியில் அடுக்கி வைத்திருந்த தன்னுடைய கையெழுத்துப் பிரதிகளைக் காண்பித்து இவற்றின் மதிப்பு இரண்டு லட்சம் ரூபாய் இருக்கும் கவலைப்படாதீர்கள் உங்கள் தந்தை தரித்திரன் ஆகச் சாகவில்லை என்றாராம்.
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் போட்டி போட்டு வளர்ந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் மனிதநேயம் கேள்விக்குறியாக இருக்கிறது.
ஆம்! அன்றைக்கு எரவாடா சிறையில் காந்தியடிகளின் மார்பின்மீது எட்டி உதைத்த ஸ்மட்ஸ்க்கு அவனது கால் அளவை அவனால் மிதிக்கப்பட்ட தன்னுடைய மார்புத் தடத்திலே பார்த்து புதிய ஷு ஒன்றைத் தைத்துக் கொடுத்தாராம் காந்திஜி.
பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே! என்ற பண்பு கற்றவர்கள் எல்லாருக்கும் வருவதில்லை.
தன்னுடைய பெயருக்குப் பின்னால் தன் படிப்பைப் போடுவதை மட்டும் பெருமையாகக் கருதும் சாமானியர்களைத் தான் இவ்வுலகம் கண்டிருக்கிறது.
ஆனால் புத்தகங்களையே சுவாசமாக் கொண்டு தன் வாழ்நாளில் சாதனை படைத்த சரித்திர நாயகர்களை மறந்துவிடுகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் மாஸ்கோ சென்றிருந்தபோது தனக்கு இரண்டு அறைகள் போடச் சொன்னாராம்.
அதிகாரிகள் குழம்பி நின்று பார்க்கையில் தான் கொண்டு வந்திருந்த புத்தகங்களுக்கு ஓர் அறை தனக்கு ஓர் அறை என்பதை அறிந்தார்கள்.
தென்னாட்டுப் பெர்னாட்ஷா இந்நாட்டு இங்கர்சால் என்று அழைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாதுரை காஞ்சிபுரத்திலிருந்து முதுகலைப் பட்டதாரியாகச் சென்னை சென்று முதல்வராகத் திரும்பியவர். தன்னுடைய உடல் நலக்குறைவுக்காக அறுவை சிகிச்சை முடிவு செய்யப்பட்டபோது தான் படிக்க வேண்டிய புத்தகம் ஒன்றை முடிக்க இன்னும் ஒரு நாளாகும் அறுவை சிகிச்சையை மறுநாள் வைத்துக்கொள்ள முடியுமா ?என்று மருத்துவரிடம் கேட்டாராம் பேரறிஞர் அண்ணாதுரை.
எப்படிப்பட்ட வாசிப்பாளன் பாருங்கள்.
அடிமைகள் வாழ்வு- உரிமைகள் மீட்பு என்ற லட்சியத்தோடு ஆதிக்க வெறி கொண்ட சமூகத்தை வேரறுக்கும் பணியில் களமாட அவருக்குப் புத்தகங்கள் உதவின என்றால் மிகையாகாது.
ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் அவர்கள் அக்னி சிறகுகள் என்ற புத்தகத்தை எழுதியவர்.
அவரைக் குடியரசுத் தலைவராக்கி அழகு பார்த்தவர்கள் நாம்.
அப்பதவியை நிறைவு செய்து ராமேஸ்வரம் செல்லும்போது ஏறத்தாழ பத்தாயிரம் புத்தகங்களை மட்டும் ஒரு கண்டெய்னர் லாரி ஏற்றி சென்றதாம்.
கோடி கோடியாய்ப் பணத்தைச் சேர்க்கும் அரசியல்வாதிகள் மத்தியில் நாடிநாடிப் புத்தகங்களைச் சேர்த்த இந்த அறிவியல் மாமேதையின் இறுதி ஊர்வலம் தான் இந்திய தேசத்தின் எல்லைகள் அனைத்திலும் இருந்து வந்த மக்களை வெள்ளமாகக் கொண்டிருந்தது.
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி என்று பாடினார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்.
ஆம்!நீ எத்தகைய நூல்களை விரும்பிப் படிக்கிறாய் என்பதைச் சொல் உன்னைப் பற்றி நான் அறிந்து கொள்வதற்கு அதுவே போதிய சான்றாகும் என்றார் சுவாமி விவேகானந்தர்.
வாசித்தவர்கள் சாதித்துள்ளார் கண்களும் புத்தகமும் இனமும் குலமும் பார்ப்பதில்லை.
சமாதானப் புறா ஜவஹர்லால் நேரு நான் இறந்த பிறகு என் உடல்மீது மலர் மாலைகளை வைக்க வேண்டாம் என் மடிமீது புத்தகங்களைப் பரப்புங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
இந்தியாவில் நாளந்தா பல்கலைக்கழகம் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் கொல்கத்தா தேசியப்பல்கலைக் கழகம் சென்னை கன்னிமாரா நூல் நிலையம் என்று எத்தனை எத்தனை மிகப்பெரிய நூலகங்கள் நமக்குள்ளே.
அறிவை விரிவு செய் அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை மானிட சமுத்திரம் நானென்று கூவு! என்று பாவேந்தனைக் கவிதைகள் முழங்கச் செய்தது பாரதியின் கவிதைகளைப் படித்த பின்பு தானே?
இந்தியாவிலேயே முதல்முறையாக 1948-ல் நூலகத்திற்கான சட்டம் இயற்றப்பட்டு 1950இல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஒரு நூலகம் திறக்கப் படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்றார் விக்டர் ஹியூகோ.
ஆம்! ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்; நூலகம் இல்லா ஊருக்கு அறிவு பாழ்.
டுடேஸ் ரீடர் டுமாரோஸ் லீடர் என்ற ஆங்கிலப் பழமொழியை மறந்து விடக்கூடாது.
கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்று உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் என்று அவ்வைப் பாட்டி கூறியுள்ளார்.
தொட்டனைத்தூறும் மணற்கேணி
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு.
புத்தகங்கள் நம்மை ஆக்கும் அறிவுப் பெட்டகங்கள்.
வீரம் விளைவது போர்க்களத்தில் ஈர இதயங்கள் பூப்பது புத்தகத்தில் .. எனவே புத்தகம் வாசிப்போம்! மனித நேயம் வளர்ப்போம்!!