கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, February 22, 2021

அலகிடுதல் தமிழ் இலக்கணம் அலகிட்டு வாய்பாடு எளிய விளக்கம் ALAGIDUTHAL TAMIL ILAKKANAM ALAKITU VAYPADU ELIYA VILAKAM

அலகிடுதல்:
———————-
சீர் என்பது அசைகளால் ஆனது.
ஒரு சீரைப் பிரித்து அசைகளாகப் பார்ப்பதே
‘ அலகிடுதல் ‘ எனப்படும். அதாவது
அளவிடுதலாகும்.

அசைகளைப் பிரிக்கும்போது அல்லது அசைகளை இனங்காணும்போது கவனிக்க
வேண்டுபவை இவை:

அ) பொருள் பார்த்தல் கூடாது.

ஆ) ஒரு சீரில் ( சொற்றொடரில்) இருக்கும்
எழுத்துகளை மட்டும் அசையாகப் பிரித்தல்
வேண்டும். அடுத்த சீரில் உள்ள
எழுத்துகளைச் சேர்த்துப் பிரித்தல் கூடாது.

இ) சந்தி ( எகா: ஒற்றெழுத்து) பிரித்து அசை
பிரித்தல் கூடாது ; சந்தி சேர்த்தே அசை
பிரித்தல் வேண்டும்.

ஈ) இடையில் மெய்யெழுத்து இருந்தால், அசை
வேறாகப் பிரிந்துவிடும்.
(எகா: கற்றார் – கற்+ றார் = நேர் + நேர்).

உ) மெய்யெழுத்து , கணக்கிடப்படாது. இரண்டு
மெய்யெழுத்துகள் இருப்பினும் கணக்கில்
கொள்ளப்படுவதில்லை ‘ பார்த்தார்’
என்பதைப் பார்த்+ தார் – ( நேர்+ நேர்) என்றே
பிரிக்க வேண்டும்.
ஆய்த எழுத்தும் (ஃ) செய்யுளில் மெய்யெழுத்
துப் போலவே கருதப் படும்.

ஊ) இரண்டெழுத்துகளையோ, அவற்றுடன்
மெய்யெழுத்துகளையோ இணைத்தால்
நிரையசை யாகுமெனின், அவற்றைச்
சேர்த்தே நிரையசையாக்க வேண்டும்.
எகா: இணைந்தவரா – என்னும் சொல்லை:
இணைந்> நிரை ; தவ> நிரை ; ரா> நேர் –
என்று பிரித்தல் வேண்டும்.
குறிப்பு:
————–
ஐ, ஔ என்னும் உயிரெழுத்துகளும், இந்த
உயிரெழுத்துகள் ஏறிய உயிர்மெய் எழுத்துகளும் நெடில் எழுத்துகளாகவே
கொள்ளப்படும். அதாவது ஐ, ஔ, கை, லை,
னை, தை, பௌ, சௌ, ணௌ, போன்றவை
நெடில்களே. இவை நேரசைகளாகவே கருதப் படும் என்பதையும் அறிக.

இனி ஒரு குறளைக் கொண்டு அலகிட்டுப்
பார்ப்போம்.

‘ அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.’ (திரு. 01)

அக + ர = நிரை + நேர்
முத + ல = நிரை + நேர்
எழுத்தெல்லாம் = எழுத் + தெல்+ லாம்
= நிரை + நேர் + நேர்
ஆதி = ஆ + தி = நேர் + நேர்
பகவன் = பக + வன் = நிரை + நேர்
முதற்றே = முதற் + றே = நிரை+ நேர்
உலகு = உல + கு = நிரை + நேர்
உல – என்பதை நிரை அசையாகக் கணக்கில்
எடுத்துக் கொண்டு, ‘ உலகு’ என்பது
உயிர்தொடர்க் குற்றியலுகரம் என்பதால் ‘ கு’
என்னும் எழுத்தைக் கணக்கில் கொள்ளாமல்
விட்டுவிட வேண்டும்.
குறிப்பு:
—————
குற்றியலுகரம், குற்றியலிகரம், மெய்யெழுத்து
ஆகியவை செய்யுளில் கணக்கில் கொள்ளப்
படா ( அலகு பெறா).

முந்தைய பாடமொன்றில், குறள் வெண்பாவின் ஈற்றுச் சீராகிய ஏழாவது சீர் ‘ நாள், மலர், காசு,
பிறப்பு’ என்னும் வாய்பாட்டில்தான் முடியும்
என்றும், அவை அனைத்துமே ஓரசைச் சீர்களாகவே நேரசை அல்லது நிரையசை என்றே அமைந்திருக்கும் என்றும் பார்த்தோம்.
நேரசை என்பது ‘ நேர்பு’ என்றும், நிரையசை
என்பது ‘ நிரைபு’ என்றும் கொள்ளப்படும்.
அதாவது, நேர்பு என்பதில் நேர் என்பதும், நிரைபு என்பதில் நிரை என்பதுமே கணக்கில்
கொள்ளப்பட்டு ‘ பு ‘ என்பது குற்றியலுகரமாகக்
கருதப்பட்டுக் கணக்கிடப்படாது என்பதை அறியவும்.
எகா: (1).
———–
” மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.” (திகு: 65)

இக்குறளில் செவிக்கு என்னும் இறுதிச் சீரில்,
‘ செவி’ மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட்டு,
‘ க்கு’ விடப்படுதல் வேண்டும். ஏனெனில்,
க் – மெய் – அரை மாத்திரை உடையது;
கு – வன்றொடர்க் குற்றியலுகரம். அதுவும்
அரை மாத்திரை உடையதே.இரண்டையும்
செய்யுளில் அசையாகக் கொள்ளுதல்
கூடாது. இது நிரைபு என்னும் வாய்பாட்டில்
முடிந்துள்ளது.

எகா: (2).
—————–
” அஃகாமை செல்வத்திற்கி யாதெனில்
வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.”( திகு.178)

இக்குறளில் ‘ செல்வத்திற்கு’ என்பதை அடுத்து
யா – வந்துள்ளதால் ஈற்றில் உள்ள உகரம்
இகரமாகத் திரிந்து கு- கி ஆகி நிற்கிறது.
இது குற்றியல் இகரம் ஆகும்.அது மட்டுமன்றி,
இச் சீர், செல்+ வத்+திற்+ கி என்று நான்கு அசைகளாக நிற்கிறது. மூன்று அசைகளுக்கு
மேல் வருதல் கூடாது. ஆகவே, இங்குக் ‘ கி’ –
குற்றியலிகரமாக மாறி அலகு பெறவில்லை
என்பதையும் நோக்கவும். இது ‘ மலர்’ என்னும்
வாய்பாட்டில் முடிந்துள்ளது.

எகா: (3). // ஐ -காரம் //
————–
ஐ – தன்னைத் தானே உணர்த்தும்பொழுது
இரண்டு மாத்திரை அளவு பெறும்.
அதுவே தன் வடிவம் மாறாமல் ‘ ஐயமில்லை’
என்று சொல்லில் சேர்ந்து வருமானால்
ஒன்றரை மாத்திரை பெற்றுத் தனி அசையாக
( நேர்) மாற்றம் பெறும். ஆயின்,
அதுவே வ்+ ஐ = வை என்று தன் வடிவம்
மாறிவிடுமானால், ஒரு மாத்திரை பெற்றுக்
குறிலாக மாறிவிடும். உருவம் மாறினாலும்
சீர்க்கு முன்னதாக அமைந்து விடுமானால்
நேர் என்றே கொள்ளப் பெறுகின்றது.
எடுத்துக்காட்டாக,

” பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. “( திரு: 322)

இந்தக் குறளில் இறுதிச் சீர் த+ லை = தலை என்று இரு குறில் இணைந்த நிரை என்னும் அசையில் மலர்- என்னும் வாய்பாட்டில்
அமைந்துள்ளது. லை – என்பது ( ல்+ஐ = லை)
என்று இங்கே குறிலாக மதிக்கப் பெற்றுள்ளது.

எகா: (4).
—————
” அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம்
புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.” ( திகு: 189)

இந்தக் குறளில் வையம் என்னும் சீர்
( வை+ யம் = நேர் + நேர்) என்னும் ஈரசையில்-
தே+ மா என்னும் வாய்பாட்டில் அமைந்துள்ளது.
இதில் வ்+ ஐ = வை இரண்டு மாத்திரைகள்
கொண்ட நேரசையாகக் கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பு:
—————-
நேர் + நேர் என்பதை அசைகள் எனவும்,
தே + மா என்பதை அவற்றுக்கு ஈடான
வாய்பாடு என்றும் கொள்க.
அதுபோன்றே,
நிரை+ நிரை என்பதை அசைகள் எனவும்,
கரு + விளம் என்பதை அவற்றுக்கு ஈடான
வாய்பாடு என்றும் அறிந்து கொள்ளவும்.
- மு.முத்துமுருகன்
    தமிழாசிரியர்
   ம.ரெட்டியபட்டி

தமிழ்த்துகள்

Blog Archive