கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, May 11, 2023

பள்ளிக்கூடம் பேசுகிறது - வாத்தியாராய் ... ஆசிரியரின் இன்றைய நிலை - கவியரங்கக் கவிதை teacher today tamil poem kavithai

 வாத்தியாராய் - கவியரங்கக் கவிதை


பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்து

இருப்பிலே இருந்து வையை ஏட்டிலே தவழ்ந்த பேதை

நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோரென

மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்!

என் தமிழ்த்தாய்க்கு முதல் வணக்கம்.

 

பள்ளிக்கூடம் பேசுகிறது…

 

வாத்தியாராய்...

 

ஆறாம் அறிவைப் புடம் போடும் இடம்

பள்ளிக்கூடம்

கரும்பலகையில் எழுதிக் காட்டி வாழ்க்கையில்

வெளிச்சம் தருமிடம்

பள்ளிக்கூடம்

கலைவாணியும் வந்து விட்டாள் திண்டுக்கல் வரை...!

ஆம் நந்தினியாய் 600க்கு 600 வாங்கி.

வாத்தியாராய்...

ஏற்றிவிடும் ஏணிப்படிகள் -அறிவுச்சுடர்

ஏற்றிவிடும் அகல் விளக்குகள் !

இறங்கி வந்து கற்பிக்கும் பிதாமகர்கள்

- உமை ஏகலைவன் ஆக்கிடாத ஏந்தல்கள்!

ஏற்றுவிட்ட பெரும் பணியைப்

போற்றி நடக்கும் ஆசு இரியர்

- ஆம் ஆசிரியர் !

வீசும் காற்றுக் கூட பணிந்து ஏத்தும் கடமை வீரர்!

நாற்று நட்டுப் போற்றி வளர்க்கும் நல்லதொரு விவசாயியாய்

நாளைய குடிமக்களை நலமுடன் விளைவிக்கும் நன்னெறியாளர்!

தூற்றுகின்ற பேர்களுக்கும் தூய நெஞ்சத்துடன் பணி செய்யும்

துளியும் கடமை மறவாத தாயுள்ளம் கொண்ட தயாபரர்!

மண்ணாளும் அரசருக்கும் எந்நாளும் ஆசிரியர்...

முன்னாள் பிரதமர் உண்டு

முன்னாள் அமைச்சர் உண்டு

முன்னாள் முதலாளியும் உண்டு .. அவ்வளவு ஏன்?

முன்னாள் காதலியும் உண்டு

முன்னாள் ஆசிரியர் என்று எவரும் இல்லை!

எந்நாளும் ஆசிரியர் என்ற

இறுமாப்பில் இருந்ததெல்லாம் அந்தக்காலம்...?

அஞ்சி நடுங்கி அரைக்கால் டவுசரோடு

கஞ்சிவாளி கையில் எடுத்து வந்த

பிஞ்சுகளுக்குப் பாடம் புகட்டினேன் அன்று!

நெஞ்சை நிமிர்த்தி நேர்வகிடெடுத்து

கொஞ்சமும் மரியாதை இல்லாதவர்களுக்கு

அஞ்சிச் சொல்லிக் கொடுக்கிறேன் இன்று!

வீட்டில் விளைந்த பூசணிக்காய் சுரைக்காய்

காட்டில் விளைந்த கம்பு சோளம் பாகற்காய்

ஓட்டைப் பையில் சுமந்து வந்து ஒழுகவிட்ட அன்புக்காய்

கேட்கக் கேட்க கற்பித்தேன் எண்ணும் எழுத்தும் அன்று!

அரைக்காசுப் பணி என்றாலும் அரசுப் பணி என்ற

இறுமாப்பில் ஓராயிரம் போட்டிகளுக்கிடையே

பற்றிக் கொண்ட வேலையை விட்டு விடக்கூடாது

என்பதற்காய்த் தன்மானம் விற்றுத்

தலை குனிகிறேன் இன்று!

கண்டதும் குவிந்த கரங்கள் எங்கே ?

கருணை கொண்ட இதயங்கள் எங்கே?

நின்று வணங்கிய நேர்மை எங்கே?

நிரூபிக்கத்தான் ஆளில்லை இங்கே!

உளி தாங்கி எழுந்த சிலைகள் எங்கே?

வலி மறந்து விளைந்த நிலங்கள் எங்கே ?

விழிநீர் துடைத்துச் சிரித்த முகங்கள் எங்கே?

பழி போட்டு பாடாய் படுத்தும் இவர்கள் எங்கே?

எழுதியது உடைந்த சிலேட்டு தான் -ஆனால்

பழுதில்லாதது படிப்பும் ஒழுக்கமும் தான் !

உடுத்தியது கிழிந்த உடைகள் தான் - ஆனால்

படித்தது எல்லாம் பண்பாடும் நாகரிகமும் தான்!

முழுக்கால் சட்டையும் முகவெட்டும் புற அழகே

ஒழுக்கம் இல்லா உங்களிடம் எதை எதிர்பார்த்தாலும்

அது சமூகக் கேடே!

"வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை

போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை"

கொதித்தேன்! மறுத்தேன்! அன்று ...

வாக்குக் கற்றவருக்கு வாத்தியார் வேலை

போக்குக் கற்றவருக்கு போலீஸ் வேலை திருத்தினேன்!

வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலைதான்

வரவேற்கிறேன் தலை குனிந்து..? இன்று

வெள்ளித் திரையில் கூட சிவாஜி ஜெய்சங்கர் சிவக்குமாரும்

வாத்தியார்கள் அன்று கௌரவ வேடத்தில்?

வெண்ணிற ஆடை மூர்த்தியும் பாஸ்கரும்

மனோபாலாவும் என்றானபின்

வாத்தியார்கள் கோமாளி வேடத்தில் ...

எனினும் சுழன்றது சாட்டை- நாயகன் சமுத்திரக்கனியால்!

'நச்சு பிகருடா!'

கிண்டல் பண்ணாதீகடா பிள்ளைகள...

எச்சரித்த ஆசிரியைக்கு அவன் எங்கள சொல்லல மேடம்

நச்சாக இறங்கிய சொல்கேட்டு இன்னும் தன்னுயிரை

மிச்சம் வைத்துக் கொண்டுதான் இருக்கிறார் எங்கள் பள்ளி ஆசிரியை.

பிரம்புகள் பேசின

மாணவர்கள் படித்தார்கள் அன்று

மாணவன் பேசுகிறான்

யாரும் படிக்கவில்லை இன்று.

அயோத்திதாசரும் அம்பேத்கரும் அடையாளமானவர்கள்

ஆசிரியர் பெயரை மாணவனுக்காய்த் தந்து!

ஆட்களே இழுக்கும் குதிரை வண்டிகள் ஆனது

ஆசிரியருக்காய்ப் புனிதம் சுமந்து!

தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் என்கிறார்கள்...

அழுது புலம்புகிறோம் கத்தியோடு வந்து விடாதீர்கள்!

பொழுது விடிந்தாலே பதைபதைக்கும் உள்ளத்தோடு

பள்ளி சென்றனர் மாணவர்கள் அன்று படிப்பதற்குப் பயந்து

இன்று பதைபதைக்கும் உள்ளத்தோடு ஆசிரியர்கள் செல்கிறார்கள்

கத்தி வரும் திசை அறியாது...

பள்ளி செல்லும் எங்களுக்கு விடிவு தான் எப்போது?

-கவிஞர் கல்லூரணி முத்து முருகன்

 

தமிழ்த்துகள்

Blog Archive