ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
- ஆத்தி-திருவாத்தி பூமாலையை சூடி-அணிபவராகிய சிவபெருமான் அமர்ந்த-விரும்பிய
தேவனை-விநாயகக் கடவுளை ஏத்தி ஏத்தி-வாழ்த்தி வாழ்த்தி தொழுவோம்-வணங்குவோம் யாமே-நாமே.
உயிர் வருக்கம்
1.அறம் செய விரும்பு
- அறம் - ( விதித்தன செய்தல் விலக்கியன ஒழித்தல்- நல்ல செயல்களை செய்வது மற்றும் கெடுதல் செயல்களைச் செய்யாமல் இருப்பது ) செய - செய்வதற்கு,
- விரும்பு -நீ ஆசைப்படு.
- தருமம் செய்ய நீ விரும்புவாயாக
- நல்ல செயல்களைச் செய்வதற்கு மனம் விருப்பம் கொள்ள வேண்டும். மனம் விருப்பம் கொள்ள அந்த நல்ல செயல்களை மகிழ்வுடன் செய்ய முடியும்.
2. ஆறுவது சினம்
- ஆறுவது- தவிர்க்க வேண்டியது,
- சினம் - கோபம்.
- கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
- கோபம் வரும் போது நமது சிந்திக்கும் அறிவு குறைந்து உணர்ச்சிவசப்பட்டு தவறான முடிவு எடுக்கும் சூழ்நிலை உருவாகும். அது எல்லோருக்கும் நல்லது அல்ல.
3. இயல்வது கரவேல்
- இயல்வது - நம்மால் முடிந்ததை கொடுப்பதற்கு
- கரவேல் - வறுமையினாலே இரப்பவர்களுக்கு நீ ஒளியாதே ( "கரவல்" கொடாது மறைக்கை, கரப்பு, மறைப்பு, மறைக்காதே)
- உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.
4. ஈவது விலக்கேல்
- ஈவது - தருமத்தைக் குறித்து ஒருவருக்கு ஒருவர் கொடுப்பதை
- விலக்கேல் - நீ தடுக்காதே
- ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே
5.உடையது விளம்பேல்
- உடையது - உனக்கு உள்ள பொருளை
- விளம்பேல் - நீ பிறர் அறியும்படி சொல்லாதே
- உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.
- உனக்குள்ள பொருள் மற்றும் சிறப்புகளை பலரும் அறியும்படி பெருமையாக பேசாதே.
- உன்னுடைய பலவீனத்தையும் பலரும் அறியும்படி சொல்லாதே. அதனால் நல்ல பயன் எதுவும் இல்லை.
6. ஊக்கமது கைவிடேல்
- ஊக்கமது– செய்தொழிலில் மனஞ்சோராமை, உள்ளக் கிளர்ச்சியை
- கைவிடேல்– நீ தளர்ந்து போக விடாதே.
- எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.
7. எண் எழுத்து இகழேல்
- எண் – கணித நூலையும்
- எழுத்து - அற நூல்களையும், இலக்கண நூலையும்
- எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன; ஆகவே, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.
8. ஏற்பது இகழ்ச்சி
- ஏற்பது – ஒருவரிடத்திலே போய் இரப்பது பிறரிடம் சென்று யாசித்தல்; இகழ்ச்சி – பழிப்பாகும் (அல்லது) இழிவு தரும்.
- இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.
9. ஐயம் இட்டு உண்
- ஐயமிட்டு – உன்னிடம் உணவு கேட்பவற்குக் கொடுத்து
- உண் - பிறகே நீ உண்ண வேண்டும்.
- யாசிப்பவர்கட்கு கொடுத்து பிறகு உண்ண வேண்டும்.
10. ஒப்புரவு ஒழுகு
- ஒப்புரவு – உலக போக்கிற்கு எற்றவாறு;
- ஒழுகு – நட
- உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.
11. ஓதுவது ஒழியேல்
- நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
12. ஔவியம் பேசேல்
- ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
13.அஃகஞ் சுருக்கேல்
- அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.
உயிர்மெய் வருக்கம்
14.கண்டொன்று சொல்லேல்.
- கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே.
15.ஙப் போல் வளை.
- 'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ
அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.
- 'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ
- "ங" என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
16.சனி நீராடு.
- சனி(குளிர்ந்த) நீராடு.
17.ஞயம்பட உரை.
- கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு.
18.இடம்பட வீடு எடேல்.
- உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.
19.இணக்கம் அறிந்து இணங்கு.
- ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.
20.தந்தை தாய்ப் பேண்.
- உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.
21.நன்றி மறவேல்.
- ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.
22.பருவத்தே பயிர் செய்.
- எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.
23.மண் பறித்து உண்ணேல்.
- பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே (அல்லது)
- நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)
24.இயல்பு அலாதன செய்யேல்.
- நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.
25.அரவம் ஆட்டேல்.
- பாம்புகளை பிடித்து விளையாடாதே.
26.இலவம் பஞ்சில் துயில்.
- 'இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு
27.வஞ்சகம் பேசேல்.
- கபடச்(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களை பேசாதே
28.அழகு அலாதன செய்யேல்.
- இழிவான செயல்களை செய்யாதே
29.இளமையில் கல்.
- இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை (இலக்கணத்தையும், கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்.
30.அறனை மறவேல்.
- கடவுளை மனதில் எப்பொழுதும் நினைக்கவேண்டும்
31.அனந்தல் ஆடேல்.
- மிகுதியாக தூங்காதே
ககர வருக்கம்
32.கடிவது மற
- யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.
33.காப்பது விரதம்
- தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது)
- பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.
34.கிழமை பட வாழ்
- உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்
35. கீழ்மை யகற்று
- இழிவான குணஞ் செயல்களை நீக்கு
36. குணமது கைவிடேல்
- நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).
37. கூடிப் பிரியேல்
- நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே
38. கெடுப்ப தொழி
- பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.
39. கேள்வி முயல்
- கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய்
40. கைவினை கரவேல்
- உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.
41. கொள்ளை விரும்பேல்
- பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே.
42. கோதாட் டொழி
- குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு)
43.கௌவை அகற்று
- வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு
சகர வருக்கம்
44. சக்கர நெறி நில்
- தர்மசக்கர நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் = ஆள்பவர், தலைவர் )
45.சான்றோ ரினத்திரு
- அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.
46. சித்திரம் பேசேல்
- பொய்யான வார்தைகளை மெய் போலப் பேசாதே
47. சீர்மை மறவேல்
- புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.
48. சுளிக்கச் சொல்லேல்
- கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்
49. சூது விரும்பேல்
- ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.
50. செய்வன திருந்தச் செய்
- செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்
51.சேரிடமறிந்து சேர்
- நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.
52. சையெனத் திரியேல்
- பெரியோர் 'சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே
53. சொற்சோர்வு படேல்
- பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே
54. சோம்பித் திரியேல்
- முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.
தகர வருக்கம்
55. தக்கோ னெனத்திரி
- பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்
56. தானமது விரும்பு
- யாசிப்பவர்களுக்கு தானம் செய்.
57. திருமாலுக்கு அடிமை செய்
- நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்
58. தீவினை யகற்று
- பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.
59.துன்பத்திற் கிடங்கொடேல்
- முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.
60. தூக்கி வினைசெய்
- ஒரு வேளையை முடிப்பதற்கான வழிமுறைகளை நன்கு ஆராய்ந்து அறிந்த பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்
61. தெய்வ மிகழேல்
- கடவுளை பழிக்காதே.
62. தேசத்தோ டொத்துவாழ்
- உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்
63. தையல்சொல் கேளேல்
- மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.
64. தொன்மை மறவேல்
- பழைமையை மறவாதிருக்க வேண்டும் (பழங்கால மற்றும் பண்டைய முறையிலான நம் தமிழ் கலாச்சாரத்தை விட்டு கொடுக்காமல் இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும்)
65. தோற்பன தொடரேல்
- ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.
நகர வருக்கம்
66. நன்மை கடைப்பிடி
- நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்
67. நாடொப் பனசெய்
- நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்
68. நிலையிற் பிரியேல்
- உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.
69. நீர்விளை யாடேல்
- வெள்ளபெருக்கில் நீந்தி விளையாடாதே
70. நுண்மை நுகரேல்
- நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே
71. நூல்பல கல்
- அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி
72.நெற்பயிர் விளை
- நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.
73. நேர்பட வொழுகு
- ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட
74. நைவினை நணுகேல்
- பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே
75. நொய்ய வுரையேல்
- பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.
76. நோய்க்கிடங் கொடேல்
- மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.
பகர வருக்கம்
77. பழிப்பன பகரேல்
- பெரியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றைப் பேசாதே.
78. பாம்பொடு பழகேல்
- பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.
79. பிழைபடச் சொல்லேல்
- குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.
80. பீடு பெறநில்
- பெருமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
- உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்
82. பூமி திருத்தியுண்
- விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை வாழ்க்கைத் தொழிலாகக் கொள்
83. பெரியாரைத் துணைக்கொள்
- அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்
84. பேதைமை யகற்று
- அறியாமையைப் போக்கு
85. பையலோ டிணங்கேல்
- அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.
86. பொருடனைப் போற்றிவாழ்
- பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்.
87. போர்த்தொழில் புரியேல்
- யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாகச் செய்யாதே
மகர வருக்கம்
88. மனந்தடு மாறேல்
- எதனாலும் மனக்கலக்கம் அடையாதே
89. மாற்றானுக் கிடங்கொடேல்
- பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்கு இடம் கொடுக்காதே.
90. மிகைபடச் சொல்லேல்
- சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.
91. மீதூண் விரும்பேல்
- மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.
92. முனைமுகத்து நில்லேல்
- எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே
93. மூர்க்கரோ டிணங்கேல்
- மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே
94. மெல்லினல்லாள் தோள்சேர்
- பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.
95. மேன்மக்கள் சொற்கேள்
- நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.
96. மைவிழியார் மனையகல்
- விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்
97. மொழிவ தறமொழி
- [மொழிவது = பேசுவது;
- சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்
98.மோகத்தை முனி
- நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு
வகர வருக்கம்
99. வல்லமை பேசேல்
- உன்னுடைய வலிமையை நீயே புகழ்ந்து பேசாதே
100. வாதுமுற் கூறேல்
- முந்திக்கொண்டு வாதிடாதே
101. வித்தை விரும்பு
- கல்வியாகிய நற்பொருளை விரும்பு
102. வீடு பெறநில்
- முக்தியை பெறுவதற்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து
103. உத்தமனாய் இரு
- உயர்ந்த குணங்கள் கொண்டவனாக வாழ்.
104. ஊருடன் கூடிவாழ்
- ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்
105. வெட்டெனப் பேசேல்
- யாருடனும் கடினமாகப் பேசாதே
106. வேண்டி வினைசெயேல்
- வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே
107. வைகறை துயிலெழு
- விடியற்காலையில் தூக்கத்திலிருந்து எழு
- நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு
108. ஒன்னாரைத் தேறேல்
- பகைவர்களை நம்பாதே
109. ஓரஞ் சொல்லேல்
- எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு.