ஆத்திசூடி, இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.
- அச்சம் தவிர்
- ஆண்மை தவறேல்
- இளைத்தல் இகழ்ச்சி
- ஈகை திறன்
- உடலினை உறுதிசெய்
- ஊண்மிக விரும்பு
- எண்ணுவது உயர்வு
- ஏறுபோல் நட
- ஐம்பொறி ஆட்சிகொள்
- ஒற்றுமை வலிமையாம்
- ஓய்த லொழி
- ஓளடதங் குறை
- கற்ற தொழுகு
- காலம் அழியேல்
- கிளைபல தாங்கேல்
- கீழோர்க்கு அஞ்சேல்
- குன்றென நிமிர்ந்து நில்
- கூடித் தொழில் செய்
- கெடுப்பது சோர்வு
- கேட்டிலும் துணிந்து நில்
- கைத்தொழில் போற்று
- கொடுமையை எதிர்த்து நில்
- கோல்கைக் கொண்டு வாழ்
- கவ்வியதை விடேல்
- சரித்திரத் தேர்ச்சிகொள்
- சாவதற்கு அஞ்சேல்
- சிதையா நெஞ்சு கொள்
- சீறுவோர்ச் சீறு
- சுமையினுக்கு இளைத்திடேல்
- சூரரைப் போற்று
- செய்வது துணிந்து செய்
- சேர்க்கை அழியேல்
- சைகையிற் பொருளுணர்
- சொல்வது தெளிந்து சொல்
- சோதிடந் தனையிகழ்
- சௌரியந் தவறேல்
- ஞமலிபோல் வாழேல்
- ஞாயிறு போற்று
- ஞிமிறென இன்புறு
- ஞெகிழ்வ தருளின்
- ஞேயங் காத்தல் செய்
- தன்மை இழவேல்
- தாழ்ந்து நடவேல்
- திருவினை வென்று வாழ்
- தீயோர்க்கு அஞ்சேல்
- துன்பம் மறந்திடு
- தூற்றுதல் ஒழி
- தெய்வம் நீ என்றுணர்
- தேசத்தைக் காத்தல் செய்
- தையலை உயர்வு செய்
- தொன்மைக்கு அஞ்சேல்
- தோல்வியிற் கலங்கேல்
- தவத்தினை நிதம் புரி
- நன்று கருது
- நாளெலாம் வினை செய்
- நினைப்பது முடியும்
- நீதிநூல் பயில்
- நுனியளவு செல்
- நூலினைப் பகுத்துணர்
- நெற்றி சுருக்கிடேல்
- நேர்படப் பேசு
- நையப் புடை
- நொந்தது சாகும்
- நோற்பது கைவிடேல்
- பணத்தினைப் பெருக்கு
- பாட்டினில் அன்பு செய்
- பிணத்தினைப் போற்றேல்
- பீழைக்கு இடங்கொடேல்
- புதியன விரும்பு
- பூமி இழந்திடேல்
- பெரிதினும் பெரிது கேள்
- பேய்களுக்கு அஞ்சேல்
- பொய்மை இகழ்
- போர்த் தொழில் பழகு
- மந்திரம் வலிமை
- மானம் போற்று
- மிடிமையில் அழிந்திடேல்
- மீளுமாறு உணர்ந்துகொள்
- முனையிலே முகத்து நில்
- மூப்பினுக்கு இடங் கொடேல்
- மெல்லத் தெரிந்து சொல்
- மேழி போற்று
- மொய்ம்புறத் தவஞ் செய்
- மோனம் போற்று
- மௌட்டியந் தனைக் கொல்
- யவனர்போல் முயற்சிகொள்
- யாரையும் மதித்து வாழ்
- யௌவனம் காத்தல் செய்
- ரஸத்திலே தேர்ச்சிகொள்
- ராஜஸம் பயில்
- ரீதி தவறேல்
- ருசிபல வென்றுணர்
- ரூபம் செம்மை செய்
- ரேகையில் கனி கொள்
- ரோதனம் தவிர்
- ரௌத்திரம் பழகு
- லவம் பல வெள்ளமாம்
- லாவகம் பயிற்சி செய்
- லீலை இவ் வுலகு
- (உ)லுத்தரை இகழ்
- (உ)லோக நூல் கற்றுணர்
- லௌகிகம் ஆற்று
- வருவதை மகிழ்ந்துண்
- வானநூற் பயிற்சிகொள்
- விதையினைத் தெரிந்திடு
- வீரியம் பெருக்கு
- வெடிப்புறப் பேசு
- வேதம் புதுமை செய்
- வையத் தலைமை கொள்
- வௌவுதல் நீக்கு