கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, February 24, 2021

பல்லூடகப் பயன்பாடு தமிழ்க் கட்டுரை USAGE OF MEDIA TAMIL ESSAY PALLUDAGA PAYANPADU TAMIL KATTURAI

பல்லூடகப் பயன்பாடு

முன்னுரை

"காசி நகர்ப் புலவர் பேசும் உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்!"-என்றார் மகாகவி பாரதியார். ஆனால் இன்றோ காசியில் மட்டுமல்ல உலகின் எந்த ஒரு மூலையில் ஒரு நிகழ்வு நடந்தாலும் உடனுக்குடன் கேட்கவும் முடியும் பார்க்கவும் முடியும். நாம் அறிவியல் யுகத்தில் வாழ்ந்து வருகிறோம். மனிதனின் ஆறாம் அறிவான பகுத்தறிவு நமக்கு மண்ணை மட்டுமல்ல விண்ணையும் ஆளும் வல்லமையைத் தந்துள்ளது. கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய் என்பார்கள் நம் முன்னோர்கள். இன்றைக்கு நம்முடைய தகவல் தொடர்பு சாதனங்கள் அறிவியலின் துணையோடு இமாலய வளர்ச்சி பெற்றுவிட்டது. பல்லூடகங்களின் பயன்பாடு குறித்து நாம் இக் கட்டுரையில் காண்போம்!

தொலைக்காட்சியும் கல்வி நிகழ்ச்சிகளும்

'தொலைக்காட்சிப் பெட்டி ஒரு முட்டாள் பெட்டி' என்றார்கள். வானொலியில் இருந்து தொலைக்காட்சிக்குத் தாவிய போது கல்வியாளர்கள் விடுத்த எச்சரிக்கை இது!. ஆனால் தொலைக்காட்சியைப் பயன்படுத்தும் விதமோ இன்று பல்வேறு பயன்களைத் தருவதாக உள்ளது." கல்வித் தொலைக்காட்சி" என்ற தனி அலைவரிசையில் கற்றல்- கற்பித்தல் மேம்பட மாணவர்களுக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு", என்றார் திருவள்ளுவர். அது மட்டுமா உலகச்செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை உடனுக்குடன் தெரிவிக்கின்றன தொலைக்காட்சி நிறுவனங்கள். முக்கிய நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்பு செய்து மக்களை விழிப்புணர்வுடன் வாழச் செய்யும் பணியைச்செவ்வனே செய்கின்றன. சமூகச் சீர்திருத்த நாடகங்கள் மூலம் பெண் கல்வியின் அவசியம் பெண்களின் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கூறுகளைப் புரிய வைத்தல் போன்ற பணிகளைச் செய்கின்றன.மத்திய மாநில அரசுகளின் நடைமுறைகளையும் முக்கிய நிகழ்வுகளையும் ஒலி ஒளிக் காட்சிகளாகப் பதிவு செய்து ஒளிபரப்புகின்றன.

உலகம் உள்ளங்கையில்

"உன் நண்பன் யார் என எனக்கு காட்டு; நீ யார் என நான் கூறுகிறேன்"என்பார்கள் நம் முன்னோர். ஆனால் இன்றோ உலகமெங்கும் நாம் முகநூல் மூலம் நண்பர்களைப் பெற்று இருக்கிறோம்.செய்திகளையும் நிழற்படங்களையும் உடனுக்குடன் பரிமாறிக் கொள்கிறோம். திறன்பேசி உதவியால் காணொலி உரையாடல் மூலம் அவர்களை நேரடியாகப் பார்க்கவும் முடிகிறது. வெடித்துச் சிதறும் எரிமலைகளைப் பார்க்க முடிகிறது. அடர்ந்த காட்டுக்குள் வேட்டையாடும் விலங்குகளைப் பார்க்க முடிகிறது. மிகவும் சிக்கலான அறுவைச் சிகிச்சைகளை வெளி நாட்டில் இருக்கக்கூடிய ஒரு மருத்துவர் அங்கிருந்தே ஆணையிட இங்குள்ளோர் நேரடியாகச் செய்ய முடிகிறது." ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகசைவு கூட உலகின் மற்றொரு பகுதியில் ஓர் எதிர் விளைவை ஏற்படுத்தக் கூடும்"என்ற ஆய்வாளர்களின் கூற்று உண்மையாகி இருக்கிறது. ஆழ்கடலில் வாழக்கூடிய உயிரிகளைப் படம் பிடித்துக் காட்ட முடிகிறது. ஒரே நேரத்தில் ஸ்பெயினில் நடைபெறக்கூடிய காளைச் சண்டையையும் அலங்காநல்லூரில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை வெவ்வேறு அலைவரிசைகளில் கண்டு களிக்க முடிகிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

"கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்பதனை இன்று உலகம் கண்கூடாகக் கண்டு வருகிறது. ஆம் உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் பணியாற்றிவரும் பேராசிரியர்கள் உலகின் எந்த ஒரு மூலையிலும் இருக்கக்கூடிய ஒரு மாணவனுக்கு தான் இருந்த இடத்திலிருந்தே பயிற்சி அளிக்க முடிகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர் 'என்றார் கணியன் பூங்குன்றனார் அன்று; இணைய (வையக விரிவு வலை) வலை மூலம் நாம் இணைந்திருக்கிறோம் இன்று.' முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு'என்ற தெய்வப் புலவரின் வரிகள் இன்று மொழிகள் கடந்து இனம் கடந்து மதம் கடந்து சாத்தியமாகிறது என்றால் அதற்கு இணையதளமே காரணம் ஆகும். கலாச்சாரம் பண்பாடு இவை பரிமாற்றம் செய்யப் படவேண்டும். தனக்கென்று ஓர் அடையாளத்தைத் தான் சென்ற இடமெல்லாம் முத்திரை பதித்தவன் தமிழன். அமெரிக்காவில் இருந்துகொண்டே தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய பொங்கல் விழாவைக் காணமுடிகிறது.தமிழ்நாட்டில் இருப்போர் மலேசியாவில் நடைபெறக்கூடிய வழிபாட்டு நிகழ்ச்சிகளை நேரலையில் கண்டு களிக்க முடிகிறது. தூரம் நமக்கு பாரமில்லை. உறவுக்குத் தொலைவு தடையில்லை.

சைபர் குற்றங்களும் விழிப்புணர்வும்

பெண்ணும் பூவும் பிறந்த இடத்திலேயே இருந்து விட்டால் அதற்கு மதிப்பில்லை. அதே சமயத்தில் அவற்றின் நடமாட்டத்தால் மனமும் மணமும் பாதித்து விடக்கூடாது.

பாதகம் செய்பவரைக் கண்டால் -நீ பயங்கொள்ள லாகாது பாப்பா!

 மோதி மிதித்துவிடு பாப்பா- அவர்

 முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

என்கிறார் முண்டாசுக்கவி பாரதி. ஆராயாது கொள்ளக்கூடிய நட்பு ஆபத்திலும் முடிந்து விடும் என்பதை நாம் எச்சரிக்கை உணர்வுடன் கடைப்பிடிக்க வேண்டும். நாம் பரிமாறக் கூடிய செய்திகளும் நிழற்படங்களும் நம்பகத்தன்மை உடையனவா என்பதைச் சோதித்து அறிந்து கொள்ள வேண்டும். காவல்துறையினரால் பெண் பிள்ளைகளுக்கு என சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள தனிச் செயலியைத் திறன்பேசியில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். சுவைமிக்க தேனை சுவைக்க வேண்டும் என்றால் தேனீக்களைக் கையாளும் வித்தை தெரிந்திருக்க வேண்டும். முள் படாமல் ரோஜாவைப் பறிக்கும் ஒருவருக்கே அதன் வாசனை இனிமையாக இருக்கும். விழிப்புணர்வு இல்லாமல் இணையதளம் மூலம் எதை வேண்டுமானாலும் பதிவிடலாம், யாருடன் வேண்டுமானாலும் நட்புக் கொள்ளலாம் என்ற மன நிலையை நாம் மாற்றியாக வேண்டும். 'சைபர் குற்றங்கள்'என்று பெயரிடப்பட்டுள்ள இணையதளம் மூலம் நடைபெறும் மோசடிகளைக் காவல்துறை உதவியுடன் களை எடுக்க வேண்டும்.

பல்லூடகக் கருவிகள்

'தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்', எனவே ஆராயாது நட்புக் கொள்ளக் கூடாது. கணினி, மடிக்கணினி, உள்ளங்கைக் கணினி, திறன்பேசி இவற்றின் மூலம் இன்று விரல்நுனியில் பல்வேறு செய்திகளை நாம் தெரிந்து கொள்கிறோம்! தெரிந்துகொண்ட செய்திகள் அனைத்தும் உண்மை தன்மை உடையதா என்பதை ஆராய வேண்டியது அவசியம். உண்மைத் தன்மை அறியாது நம்மிடமுள்ள பல்லூடக கருவிகள் மூலம் அவற்றை பிறருக்கும் பரப்புவது குற்றமாகும். தேவையற்ற உண்மை சிறிதும் இல்லாத செய்திகளை பொதுத் தளங்களில் பதிவிடுவதும் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இன்றைக்கு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் நேரலையில் அவர்கள் படங்களை படிப்பதற்கு ஏதுவாக இணையதள சேவை வழங்குநர் மூலமாக இணைப்புப் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய படைப்பாற்றல் திறனை வெளிக்கொண்டு வருவதற்கும் உலகம்முழுவதும் அதைக்கண்டு அங்கீகாரம் செய்வதற்கும் பல்லூடக கருவிகள் பெரும்பயன் விளைகின்றன. சரியாக இவற்றை நாம் பயன்படுத்தினால் பேச்சுத்திறன் எழுதும் திறன் கவிதை புனைதல் ஓவியம் வரைதல் சமையற்கலை தற்காப்புக் கலைகள் போன்ற பல்வேறு கலைகளில் நாம் பெற்ற திறமையைக் கண்டு பாராட்டும். தொலைக்காட்சிகளில் புவியியல், விலங்கியல், விளையாட்டு, மொழித்திறன் வளர்ச்சி, முழுநேர செய்தி வழங்குதல் என ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி செய்தி நிறுவனங்கள் உள்ளன. அரசு அறிவிக்கும் ஆணைகள் மற்றும் திட்டங்களைத் தெளிவாக ,பொது மக்களுக்குப் போய்ச் சேரும் வண்ணம் செய்திகள் ஒளிபரப்பப்படுகின்றன. பயிற்சி பெற்ற ஊடகவியலாளர்கள் இலக்கியவாதிகள், தனித்திறனாளர்கள், விளையாட்டு வீரர்கள் விஞ்ஞானிகள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை நேர்காணல் செய்து அனைவரும் அறியும் வண்ணம் நமக்கு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறார்கள்.

முடிவுரை

செய்தி என்பது யாது என்பதற்கு ஓர் அறிஞர் சொன்னாராம் ஒரு நாய் மனிதனைக் கடித்தால் அது செய்தி அல்ல ஒரு மனிதன் நாயைக் கடித்தால் தான் அது செய்தி என்றாராம். அனைத்துச் செய்திகளுமே கற்பனை கலந்து உண்மையோடு பொய்யும் கலந்ததாக இருந்தால், அவை தேவையற்ற குழப்பங்களைத்தான் தரும். கூறும் செய்திகள் தகுந்த ஆதாரங்களோடு சொல்லப்படும்போது உண்மைத்தன்மை வலுப்பெறுகிறது. வானிலை முன்னறிவிப்பு களும் வெள்ள அபாய எச்சரிக்கை இயற்கை சீற்றங்களை முன் அறிவிப்புகளும் பொதுமக்களுக்கும் ராணுவம், காவல் துறையினருக்கும் மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் உதவியாக இருக்கிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை. 'வானை அளப்போம் விண்மீனை அளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்'என்றார் பாரதி அன்று. நாமோ சந்திரனுக்குச் சந்திராயனையும் செவ்வாய்க்கு மங்கள்யானையும் அனுப்புவதை நம் வீட்டில் இருந்துகொண்டே நேரலையில் கண்டு இன்புறுகிறோம். 'அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்', என்கிறது வள்ளுவம். நாமும் இன்று திறன்பேசி மூலமும் தொலைக்காட்சி மூலமும் இணையதள சேவை மூலமும் உறவுகள் நட்புகள் அலுவல் சார்ந்த செயல்பாடுகள் அனைத்தையும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களின் உதவியுடன் மின்னல் வேகத்தில் செய்து வருகிறோம். இன்று யாரையும் யாரும் பொய்ச் செய்திகளை கூறி ஏமாற்றி விட முடியாது. அந்த அளவுக்கு உண்மைகளைத் தேடித் தெரிந்துகொள்ள பல ஊடகங்கள் பெரிதும் உதவுகின்றன. வெள்ளத்தனையது மலர் நீட்டம் என்பார்கள். நம் இலக்கு விண்ணைத் தொடுவதாக இருக்கட்டும்! இனிவரும் தலைமுறைகள் பல்லூடகப் பயன்பாட்டால் மண்ணையும் விண்ணையும் இணைக்கட்டும்!

ஆக்கம்:-
மு. முத்து முருகன் தமிழாசிரியர்
 ம ரெட்டியபட்டி

நவீன காலக் கல்வியின் போக்கும் தொலைநோக்குப் பார்வையும் தமிழ்க் கட்டுரை TAMIL ESSAY NAVEENA KALA KALVI KATTURAI

பத்தாம் வகுப்பு தமிழ் அன்னை மொழியே இயங்கலைத் தேர்வு 10th TAMIL ANNAI MOLIYE ONLINE TEST

தேர்வு/EXAM

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 இயங்கலைத் தேர்வு மதுரை MADURAI TENTH TAMIL UNIT 1 ONLINE TEST

தேர்வு/EXAM

Monday, February 22, 2021

குறைக்கப்பட்ட பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு இயல் 3 REDUCED SYLLABUS TENTH TAMIL UNIT TEST 3 PDF

 பதிவிறக்கு/DOWNLOAD 

குறைக்கப்பட்ட பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு இயல் 2 REDUCED SYLLABUS TENTH TAMIL UNIT TEST 2 PDF

 பதிவிறக்கு/DOWNLOAD 

குறைக்கப்பட்ட பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு இயல் 1 REDUCED SYLLABUS TENTH TAMIL UNIT TEST 1 PDF

 பதிவிறக்கு/DOWNLOAD 

துரித உணவும் ஆரோக்கிய சீர்கேடும் தமிழ் பேச்சுப்போட்டி THURITHA UNAVUM AROKIYA SEERKEDUM TAMIL SPEECH

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 1 இயங்கலைத் தேர்வு 9th TAMIL UNIT 1 ONLINE TEST

பத்தாம் வகுப்பு தமிழ் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் இயங்கலைத் தேர்வு 1 TENTH TAMIL REDUCED SYLLABUS ONLINE TEST EXAM 1

அலகிடுதல் தமிழ் இலக்கணம் அலகிட்டு வாய்பாடு எளிய விளக்கம் ALAGIDUTHAL TAMIL ILAKKANAM ALAKITU VAYPADU ELIYA VILAKAM

அலகிடுதல்:
———————-
சீர் என்பது அசைகளால் ஆனது.
ஒரு சீரைப் பிரித்து அசைகளாகப் பார்ப்பதே
‘ அலகிடுதல் ‘ எனப்படும். அதாவது
அளவிடுதலாகும்.

அசைகளைப் பிரிக்கும்போது அல்லது அசைகளை இனங்காணும்போது கவனிக்க
வேண்டுபவை இவை:

அ) பொருள் பார்த்தல் கூடாது.

ஆ) ஒரு சீரில் ( சொற்றொடரில்) இருக்கும்
எழுத்துகளை மட்டும் அசையாகப் பிரித்தல்
வேண்டும். அடுத்த சீரில் உள்ள
எழுத்துகளைச் சேர்த்துப் பிரித்தல் கூடாது.

இ) சந்தி ( எகா: ஒற்றெழுத்து) பிரித்து அசை
பிரித்தல் கூடாது ; சந்தி சேர்த்தே அசை
பிரித்தல் வேண்டும்.

ஈ) இடையில் மெய்யெழுத்து இருந்தால், அசை
வேறாகப் பிரிந்துவிடும்.
(எகா: கற்றார் – கற்+ றார் = நேர் + நேர்).

உ) மெய்யெழுத்து , கணக்கிடப்படாது. இரண்டு
மெய்யெழுத்துகள் இருப்பினும் கணக்கில்
கொள்ளப்படுவதில்லை ‘ பார்த்தார்’
என்பதைப் பார்த்+ தார் – ( நேர்+ நேர்) என்றே
பிரிக்க வேண்டும்.
ஆய்த எழுத்தும் (ஃ) செய்யுளில் மெய்யெழுத்
துப் போலவே கருதப் படும்.

ஊ) இரண்டெழுத்துகளையோ, அவற்றுடன்
மெய்யெழுத்துகளையோ இணைத்தால்
நிரையசை யாகுமெனின், அவற்றைச்
சேர்த்தே நிரையசையாக்க வேண்டும்.
எகா: இணைந்தவரா – என்னும் சொல்லை:
இணைந்> நிரை ; தவ> நிரை ; ரா> நேர் –
என்று பிரித்தல் வேண்டும்.
குறிப்பு:
————–
ஐ, ஔ என்னும் உயிரெழுத்துகளும், இந்த
உயிரெழுத்துகள் ஏறிய உயிர்மெய் எழுத்துகளும் நெடில் எழுத்துகளாகவே
கொள்ளப்படும். அதாவது ஐ, ஔ, கை, லை,
னை, தை, பௌ, சௌ, ணௌ, போன்றவை
நெடில்களே. இவை நேரசைகளாகவே கருதப் படும் என்பதையும் அறிக.

இனி ஒரு குறளைக் கொண்டு அலகிட்டுப்
பார்ப்போம்.

‘ அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.’ (திரு. 01)

அக + ர = நிரை + நேர்
முத + ல = நிரை + நேர்
எழுத்தெல்லாம் = எழுத் + தெல்+ லாம்
= நிரை + நேர் + நேர்
ஆதி = ஆ + தி = நேர் + நேர்
பகவன் = பக + வன் = நிரை + நேர்
முதற்றே = முதற் + றே = நிரை+ நேர்
உலகு = உல + கு = நிரை + நேர்
உல – என்பதை நிரை அசையாகக் கணக்கில்
எடுத்துக் கொண்டு, ‘ உலகு’ என்பது
உயிர்தொடர்க் குற்றியலுகரம் என்பதால் ‘ கு’
என்னும் எழுத்தைக் கணக்கில் கொள்ளாமல்
விட்டுவிட வேண்டும்.
குறிப்பு:
—————
குற்றியலுகரம், குற்றியலிகரம், மெய்யெழுத்து
ஆகியவை செய்யுளில் கணக்கில் கொள்ளப்
படா ( அலகு பெறா).

முந்தைய பாடமொன்றில், குறள் வெண்பாவின் ஈற்றுச் சீராகிய ஏழாவது சீர் ‘ நாள், மலர், காசு,
பிறப்பு’ என்னும் வாய்பாட்டில்தான் முடியும்
என்றும், அவை அனைத்துமே ஓரசைச் சீர்களாகவே நேரசை அல்லது நிரையசை என்றே அமைந்திருக்கும் என்றும் பார்த்தோம்.
நேரசை என்பது ‘ நேர்பு’ என்றும், நிரையசை
என்பது ‘ நிரைபு’ என்றும் கொள்ளப்படும்.
அதாவது, நேர்பு என்பதில் நேர் என்பதும், நிரைபு என்பதில் நிரை என்பதுமே கணக்கில்
கொள்ளப்பட்டு ‘ பு ‘ என்பது குற்றியலுகரமாகக்
கருதப்பட்டுக் கணக்கிடப்படாது என்பதை அறியவும்.
எகா: (1).
———–
” மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.” (திகு: 65)

இக்குறளில் செவிக்கு என்னும் இறுதிச் சீரில்,
‘ செவி’ மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட்டு,
‘ க்கு’ விடப்படுதல் வேண்டும். ஏனெனில்,
க் – மெய் – அரை மாத்திரை உடையது;
கு – வன்றொடர்க் குற்றியலுகரம். அதுவும்
அரை மாத்திரை உடையதே.இரண்டையும்
செய்யுளில் அசையாகக் கொள்ளுதல்
கூடாது. இது நிரைபு என்னும் வாய்பாட்டில்
முடிந்துள்ளது.

எகா: (2).
—————–
” அஃகாமை செல்வத்திற்கி யாதெனில்
வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.”( திகு.178)

இக்குறளில் ‘ செல்வத்திற்கு’ என்பதை அடுத்து
யா – வந்துள்ளதால் ஈற்றில் உள்ள உகரம்
இகரமாகத் திரிந்து கு- கி ஆகி நிற்கிறது.
இது குற்றியல் இகரம் ஆகும்.அது மட்டுமன்றி,
இச் சீர், செல்+ வத்+திற்+ கி என்று நான்கு அசைகளாக நிற்கிறது. மூன்று அசைகளுக்கு
மேல் வருதல் கூடாது. ஆகவே, இங்குக் ‘ கி’ –
குற்றியலிகரமாக மாறி அலகு பெறவில்லை
என்பதையும் நோக்கவும். இது ‘ மலர்’ என்னும்
வாய்பாட்டில் முடிந்துள்ளது.

எகா: (3). // ஐ -காரம் //
————–
ஐ – தன்னைத் தானே உணர்த்தும்பொழுது
இரண்டு மாத்திரை அளவு பெறும்.
அதுவே தன் வடிவம் மாறாமல் ‘ ஐயமில்லை’
என்று சொல்லில் சேர்ந்து வருமானால்
ஒன்றரை மாத்திரை பெற்றுத் தனி அசையாக
( நேர்) மாற்றம் பெறும். ஆயின்,
அதுவே வ்+ ஐ = வை என்று தன் வடிவம்
மாறிவிடுமானால், ஒரு மாத்திரை பெற்றுக்
குறிலாக மாறிவிடும். உருவம் மாறினாலும்
சீர்க்கு முன்னதாக அமைந்து விடுமானால்
நேர் என்றே கொள்ளப் பெறுகின்றது.
எடுத்துக்காட்டாக,

” பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. “( திரு: 322)

இந்தக் குறளில் இறுதிச் சீர் த+ லை = தலை என்று இரு குறில் இணைந்த நிரை என்னும் அசையில் மலர்- என்னும் வாய்பாட்டில்
அமைந்துள்ளது. லை – என்பது ( ல்+ஐ = லை)
என்று இங்கே குறிலாக மதிக்கப் பெற்றுள்ளது.

எகா: (4).
—————
” அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம்
புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.” ( திகு: 189)

இந்தக் குறளில் வையம் என்னும் சீர்
( வை+ யம் = நேர் + நேர்) என்னும் ஈரசையில்-
தே+ மா என்னும் வாய்பாட்டில் அமைந்துள்ளது.
இதில் வ்+ ஐ = வை இரண்டு மாத்திரைகள்
கொண்ட நேரசையாகக் கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பு:
—————-
நேர் + நேர் என்பதை அசைகள் எனவும்,
தே + மா என்பதை அவற்றுக்கு ஈடான
வாய்பாடு என்றும் கொள்க.
அதுபோன்றே,
நிரை+ நிரை என்பதை அசைகள் எனவும்,
கரு + விளம் என்பதை அவற்றுக்கு ஈடான
வாய்பாடு என்றும் அறிந்து கொள்ளவும்.
- மு.முத்துமுருகன்
    தமிழாசிரியர்
   ம.ரெட்டியபட்டி

Thursday, February 18, 2021

மாதிரி பாடக்குறிப்பு தமிழ் பெரிய புராணம் வலிமிகும் இடங்கள் வகுப்பு 9 இயல் 2 MODEL NOTES OF LESSON 9TH TAMIL UNIT 2

நவீன காலத்தில் அறத்தின் வடிவங்கள் தமிழ்ப் பேச்சு NAVEENA KALATHIL ARATHIN VADIVANKAL TAMIL SPEECH

அணி இலக்கணம் பத்தாம் வகுப்பு தமிழ் அணிகள் வினா விடை TENTH TAMIL ANI ILAKKANAM Q&A

மாதிரி பாடக்குறிப்பு பெருமாள் திருமொழி வினா விடை பொருள்கோள் பத்தாம் வகுப்பு தமிழ் 10th model notes of lesson unit 4 tamil

Wednesday, February 17, 2021

புத்தக வாசிப்பும் மனிதநேயமும் தமிழ்ப் பேச்சு PUTHAKA VAASIPPUM MANITHANEYAMUM TAMIL SPEECH

புத்தக வாசிப்பும் மனிதநேயமும் தமிழ்ப் பேச்சு PUTHAGA VASIPPUM MANITHA NEYAMUM TAMIL SPEECH FOR COMPETITION

புத்தக வாசிப்பும் மனிதநேயமும்பேச்சுப்போட்டி...

"செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்"என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். 
கேட்டார்ப் பிணிக்கும் விதமாக நாம் பேச வேண்டும் என்றால் முதலில் படிக்க வேண்டும். 
அறியாமை அகல நாம் பள்ளிகளில் சென்று கல்வி கற்கிறோம்.
 ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது பழமொழி. 
ஆனால் படித்த படிப்போடு விட்டுவிடாமல் நூலகங்களிலும் சென்று புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் இருந்தால் நம்முடைய அறிவு விசாலம் அடையும்;உலகம் புரியும்; உள்ளத்தில் உணர்வுகளும் சொற்களும் பேச்சாய் கவிதையாய் கட்டுரையாய் வெளிப்படும்.
 படிப்பாளி மட்டுமே படைப்பாளியாக முடியும். 
உலகத்தின் மாபெரும் தலைவர்கள் எல்லாம் புத்தக வாசிப்பைத் தம் உயிராக வைத்திருந்தவர்கள் தாம்!
 லண்டன் நூலகத்தில் நாள் முழுவதும் 16 மணி நேரங்களைக் கழித்தார் கார்ல் மார்க்ஸ். 
அதனால் தான் உலகமே பாராட்டும் மூலதனம் என்ற நூல் பிறந்தது.
 வாசிப்பு என்ற வெறி மட்டும் அவருக்கு இல்லாமல் இருந்திருந்தால் இப்படி ஒரு புரட்சியாளனை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது என்கிறார் லெனினின் மனைவி க்ரூப்ஸ்க்கா.

ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி? என்று கேட்ட பாரதியைத் தீவிரவாதியாக வைத்திருந்தது ஆங்கிலேய அரசு. ஏன்?
பாரதியின் வரிகள் ஒவ்வொன்றும் விடுதலை வேட்கையைத் தூண்டும். 
அக்கா அக்கா என்று நீ அழைத்தால் சுக்கா மிளகா கொடுக்கச் சுதந்திரம் கிளியே என்ற பாரதிதாசனின் வரிகளைக் கேட்டால்.. இளைஞனின் நரம்புகள் புடைக்கும். 
சுதந்திர வேட்கை கொதித்து எழும்.

 உலகமே பாராட்டும் வண்ணம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நமக்குப் படைத்து அளித்த சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் நூலகம் திறக்கும் போது முதல் ஆளாகச் செல்வதும் நூலகம் மூடும்போது இறுதியாக ஆளாய் வெளி வருவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தவர். 
வெள்ளையன் தன்னைத் தூக்கிலிடும் கடைசி நேரம் வரை 'லெனின் புரட்சி' என்ற புத்தகத்தைக் கையில் ஏந்திப் படித்துக் கொண்டிருந்தானாம் புரட்சியாளன் பகத்சிங்.

லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றுவிட்டு இந்தியாவுக்கு கோட்டும் சூட்டும் ஆக வந்தவர்தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. 
அவரை மகாத்மாவாக ஆக்கியது எது தெரியுமா இரண்டே இரண்டு புத்தகங்கள்தான் .

ஒன்று ஜான் ரஸ்கின் எழுதிய கடையனுக்கும் கடைத்தேற்றம்.
 மற்றொன்று தோரே அவர்கள் எழுதிய சட்ட மறுப்பு நூல்.
இந்த இரண்டும்தான் கத்தியின்றி ரத்தமின்றி வெள்ளையனுக்கு எதிராக அகிம்சை என்ற ஒரு கருவியை வடிவமைக்க காந்தியடிகளுக்கு உதவியது. 
நான் படிக்காத நூலொன்றை எனக்குத் தருபவர்களே எனக்கு மிகவும் விருப்பமானவர்கள் என்று ஆபிரகாம் லிங்கன் கூறியுள்ளார்.
 அதுமட்டுமல்ல. ஜார்ஜ் வாஷிங்டன் வரலாறு என்ற புத்தகத்தைப் படித்த பின் தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிபராக ஆகவேண்டும் என்ற கனவு பிறந்தது அந்த ஏழை லிங்கனுக்கு.
 அவரின் புத்தக வெறிக்கு ஒரு எடுத்துக்காட்டு கூறமுடியும். இரவல் வாங்கிய புத்தகங்கள் அவருடைய வீட்டில் இருந்தபோது மழையில் நனைந்து விட்டன.
 இதனைக்கண்ட புத்தகத்தின் உரிமையாளர் வயல்களில் மாடுகளைப் பூட்டுவதற்குப் பதிலாக ஆபிரகாம் லிங்கனைப் பூட்டி வேலை செய்தாராம். 
புத்தகப் படிப்பிற்காக எவ்வளவு கொடுமைகளைத் தாங்கி, தன்னை ஒரு புரட்சியாளனாகச் செதுக்கியுள்ளார் லிங்கன் பார்த்தீர்களா?

காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் என்று தன்னுடைய வாழ்நாளில் ஆசைப்பட்டவன் பாரதி. 
கலைமகள் என்ற பொருள் கொண்ட பாரதி என்ற பட்டத்தை மட்டும் சுமந்துகொண்டு எட்டயபுரம் முதல் காசி வரை இந்திய மண்ணை அளந்தவன் முண்டாசுக் கவிஞன். 
இதைத் தவிர அவனுக்கு வேறு சொத்துகள் எதுவும் இல்லை.இறக்கும் தருவாயில் தன்னுடைய பிள்ளைகளைக் கூட்டிச் சென்று தகரப் பெட்டியில் அடுக்கி வைத்திருந்த தன்னுடைய கையெழுத்துப் பிரதிகளைக் காண்பித்து இவற்றின் மதிப்பு இரண்டு லட்சம் ரூபாய் இருக்கும் கவலைப்படாதீர்கள் உங்கள் தந்தை தரித்திரன் ஆகச் சாகவில்லை என்றாராம்.
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் போட்டி போட்டு வளர்ந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் மனிதநேயம் கேள்விக்குறியாக இருக்கிறது. 
ஆம்! அன்றைக்கு எரவாடா சிறையில் காந்தியடிகளின் மார்பின்மீது எட்டி உதைத்த ஸ்மட்ஸ்க்கு அவனது கால் அளவை அவனால் மிதிக்கப்பட்ட தன்னுடைய மார்புத் தடத்திலே பார்த்து புதிய ஷு ஒன்றைத் தைத்துக் கொடுத்தாராம் காந்திஜி. 
பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே! என்ற பண்பு கற்றவர்கள் எல்லாருக்கும் வருவதில்லை. 
தன்னுடைய பெயருக்குப் பின்னால் தன் படிப்பைப் போடுவதை மட்டும் பெருமையாகக் கருதும் சாமானியர்களைத் தான் இவ்வுலகம் கண்டிருக்கிறது. 
ஆனால் புத்தகங்களையே சுவாசமாக் கொண்டு தன் வாழ்நாளில் சாதனை படைத்த சரித்திர நாயகர்களை மறந்துவிடுகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் மாஸ்கோ சென்றிருந்தபோது தனக்கு இரண்டு அறைகள் போடச் சொன்னாராம். 
அதிகாரிகள் குழம்பி நின்று பார்க்கையில் தான் கொண்டு வந்திருந்த புத்தகங்களுக்கு ஓர் அறை தனக்கு ஓர் அறை என்பதை அறிந்தார்கள்.
 தென்னாட்டுப் பெர்னாட்ஷா இந்நாட்டு இங்கர்சால் என்று அழைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாதுரை காஞ்சிபுரத்திலிருந்து முதுகலைப் பட்டதாரியாகச் சென்னை சென்று முதல்வராகத் திரும்பியவர். தன்னுடைய உடல் நலக்குறைவுக்காக அறுவை சிகிச்சை முடிவு செய்யப்பட்டபோது தான் படிக்க வேண்டிய புத்தகம் ஒன்றை முடிக்க இன்னும் ஒரு நாளாகும் அறுவை சிகிச்சையை மறுநாள் வைத்துக்கொள்ள முடியுமா ?என்று மருத்துவரிடம்  கேட்டாராம் பேரறிஞர் அண்ணாதுரை. 
எப்படிப்பட்ட வாசிப்பாளன் பாருங்கள். 
அடிமைகள் வாழ்வு- உரிமைகள் மீட்பு என்ற லட்சியத்தோடு ஆதிக்க வெறி கொண்ட சமூகத்தை வேரறுக்கும் பணியில் களமாட அவருக்குப் புத்தகங்கள் உதவின என்றால் மிகையாகாது. 
ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் அவர்கள் அக்னி சிறகுகள் என்ற புத்தகத்தை எழுதியவர். 
அவரைக் குடியரசுத் தலைவராக்கி அழகு பார்த்தவர்கள் நாம்.
 அப்பதவியை நிறைவு செய்து ராமேஸ்வரம் செல்லும்போது ஏறத்தாழ பத்தாயிரம் புத்தகங்களை மட்டும் ஒரு கண்டெய்னர் லாரி ஏற்றி சென்றதாம். 
கோடி கோடியாய்ப் பணத்தைச் சேர்க்கும் அரசியல்வாதிகள் மத்தியில் நாடிநாடிப் புத்தகங்களைச் சேர்த்த இந்த அறிவியல் மாமேதையின் இறுதி ஊர்வலம் தான் இந்திய தேசத்தின் எல்லைகள் அனைத்திலும் இருந்து வந்த மக்களை வெள்ளமாகக் கொண்டிருந்தது.
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி என்று பாடினார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார். 
ஆம்!நீ எத்தகைய நூல்களை விரும்பிப் படிக்கிறாய் என்பதைச் சொல் உன்னைப் பற்றி நான் அறிந்து கொள்வதற்கு அதுவே போதிய சான்றாகும் என்றார் சுவாமி விவேகானந்தர். 
வாசித்தவர்கள் சாதித்துள்ளார் கண்களும் புத்தகமும் இனமும் குலமும் பார்ப்பதில்லை. 
சமாதானப் புறா ஜவஹர்லால் நேரு நான் இறந்த பிறகு என் உடல்மீது மலர் மாலைகளை வைக்க வேண்டாம் என் மடிமீது புத்தகங்களைப் பரப்புங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
இந்தியாவில் நாளந்தா பல்கலைக்கழகம் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் கொல்கத்தா தேசியப்பல்கலைக் கழகம் சென்னை கன்னிமாரா நூல் நிலையம் என்று எத்தனை எத்தனை மிகப்பெரிய நூலகங்கள் நமக்குள்ளே.
அறிவை விரிவு செய் அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை மானிட சமுத்திரம் நானென்று கூவு! என்று பாவேந்தனைக் கவிதைகள் முழங்கச் செய்தது பாரதியின் கவிதைகளைப் படித்த பின்பு தானே?
இந்தியாவிலேயே முதல்முறையாக 1948-ல் நூலகத்திற்கான சட்டம் இயற்றப்பட்டு 1950இல் நடைமுறைப்படுத்தப்பட்டது. 
ஒரு நூலகம் திறக்கப் படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்றார் விக்டர் ஹியூகோ. 
ஆம்! ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்; நூலகம் இல்லா ஊருக்கு அறிவு பாழ். 
டுடேஸ் ரீடர் டுமாரோஸ் லீடர் என்ற ஆங்கிலப் பழமொழியை மறந்து விடக்கூடாது.
கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்று உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் என்று அவ்வைப் பாட்டி கூறியுள்ளார். 
தொட்டனைத்தூறும் மணற்கேணி
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு.
புத்தகங்கள் நம்மை ஆக்கும் அறிவுப் பெட்டகங்கள்.
 வீரம் விளைவது போர்க்களத்தில் ஈர இதயங்கள் பூப்பது புத்தகத்தில் .. எனவே புத்தகம் வாசிப்போம்! மனித நேயம் வளர்ப்போம்!!

திருக்குறள் ஆறாம் வகுப்பு தமிழ் குறுவினா விடை பருவம் 3 இயல் 2 THIRUKKURAL 6TH TAMIL KURUVINA

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை 2021 GOVT PUBLIC EXAM +2 TIME TABLE

Wednesday, February 10, 2021

திருக்குறள் எட்டாம் வகுப்பு தமிழ் குறுவினா விடை இயல் 8 THIRUKKURAL 8TH TAMIL KURUVINA

CPS ACCOUNT STATEMENT பெற...

LOGIN

குறைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தமிழ் 2021 இடைப்பருவத் தேர்வு மாதிரி வினாத்தாள் 10th TAMIL MID TERM MODEL QUESTION PAPER PDF

பதிவிறக்கு/DOWNLOAD

ஆறாம் வகுப்பு தமிழ் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் 6th TAMIL REDUCED SYLLABUS

ஏழாம் வகுப்பு தமிழ் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் 7th TAMIL REDUCED SYLLABUS

எட்டாம் வகுப்பு தமிழ் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் 8th TAMIL REDUCED SYLLABUS

Monday, February 08, 2021

பத்தாம் வகுப்பு தமிழ் குறுந்தேர்வு 2 TENTH TAMIL SLIP TEST 2 PDF KURUNTHERVU 2

பதிவிறக்கு /DOWNLOAD 

பத்தாம் வகுப்பு தமிழ் குறுந்தேர்வு 1 TENTH TAMIL SLIP TEST 1 PDF KURUNTHERVU 1

 பதிவிறக்கு/DOWNLOAD

பசிப்பிணி போக்கிய பாவை ஆறாம் வகுப்பு தமிழ் குறுவினா விடை PASIPPINI POKKIYA PAVAI KURUVINA 6TH TAMIL

தமிழ்த்துகள்

Blog Archive