ஒருவன் தன் கிணற்றை ஒரு விவசாயிக்கு விலைக்கு விற்றான்.
கிணற்றை விலைக்கு வாங்கிய விவசாயி, அடுத்த நாள் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தார்.
அங்கு கிணற்றை விற்றவன் நின்று கொண்டிருந்தான்.
அவன் விவசாயியைத் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான்.
விவசாயிக்குக் கோபம் வந்தது. “எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே? இது நியாயமா?” என்று கிணறு விற்றவனைப் பார்த்துக் கோபத்துடன் கேட்டார்.
கிணறு விற்றவன், “நான் உனக்குக் கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை இல்லை. எனவே நீ தண்ணீரை இங்கிருந்து எடுக்கக் கூடாது” என்று வாதம் செய்யத் தொடங்கினான்.
விவசாயி குழப்பத்துடனும் கோபத்துடனும் உள்ளூர் நீதிபதியிடம் சென்று முறையிட்டார்.
நீதிபதி இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாயத்தையும் விசாரித்தார்.
பின்னர் கிணற்றை விற்றவனிடம் “நீ கிணற்றை இந்த விவசாயிக்கு விற்றுவிட்டதால் கிணறு உன்னுடையதல்ல.
அதில் உன் தண்ணீரை வைத்திருப்பது தவறு.
உனக்கு அதில்தான் தண்ணீரைச் சேமித்து வைக்க வேண்டும் என்றால், விவசாயிக்கு அதற்கான வாடகையைத் தினமும் கொடுத்து விடு. கிணற்றிலிருந்து உன் தண்ணீரை எடுத்துக் கொள்ளாவிட்டால் உடனே வெளியேற வேண்டும்” என்று தீர்ப்புக் கூறினார்.
கிணறு விற்றவன், தன் தவறுக்கு மன்னிப்புக் கோரியதுடன் கிணற்றின்முழுப் பயனையும் விவசாயி அனுபவிக்கலாம் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்றான்.