கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, June 03, 2021

தமிழ் இலக்கியங்களில் வடக்கிருத்தல் VADAKKIRUTHAL

 வடக்கிருத்தல் என்பது பண்டைய தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் ஒன்றாகும். 

இதனை ஆடவர் மேற்கொண்டனர். 

வடக்கு திசை நோக்கி அமர்ந்தவண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர் துறப்பதே வடக்கிருத்தல் எனப் பழந்தமிழர் கொண்டிருந்தனர்.

முற்காலத்தமிழகத்தில், போர்களின்போது முதுகிலே புண்பட்டவர்கள், அதை அவமானமாகக் கருதுவர்.

இதனால், அப்போர்க்களத்திலேயே வடக்கு நோக்கியபடி பட்டினி கிடந்து தமது உயிரைப் போக்கிக் கொள்வது உண்டு. 

வடக்கிருத்தலை உத்ரக மனம் என்றும் மகாப்பிரத்தானம் என்றும் கூறுகிறது. 

வடக்கிருந்து உயிர் துறந்தோருக்கு நடுகல் இட்டு நினைவுச் சின்னமாக வழிபடுவதும் உண்டு. 

வடக்கிருத்தல் இக்காலத்தில் வழக்கில் இல்லை.

சமண மதத்தில் வடக்கிருத்தல்

வடக்கு நோக்கி உண்ணா நோன்பிருந்து உயிர் துறக்கும் சமண நோன்பு முறை 'சல்லேகனை' எனப்படும். ஆயினும் இது வடக்கிருத்தலை விட வேறுபட்டது. இது ஆண் பெண் இரு பாலருக்கும் பொதுவாகக் காட்டப்படுகிறது. மேலும் நோன்புக்குரிய காரணியாக மன வேதனையைத் தரும் இடையூறு, தீராத நோய், மூப்பு, வற்கடம் ஆகியவை அமைகின்றன. மேலும் 'சல்லேகனை ' வீடு பேறு பெறுவதற்காக நோன்பிருத்தலைக் குறிக்கும்.

வடக்கிருத்தலின் அடிப்படைக் காரணிகள்

வடக்கிருத்தலின் அடிப்படைக் காரணியாக அமைவன மானம், வீரம், நட்பு, தன்நோக்கம் நிறைவேறாமை என்பனவாக அமையலாம். வீரர், புலவர், மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் எனப் பழந்தமிழர் நம்பினர். வடக்கிருந்து உயிர் நீப்பவர் மறு பிறப்பில் மன்னராகப் பிறாப்பர் என சிறுபஞ்ச மூலம் சுட்டுகிறது. நாணத்தகு நிலை நேர்ந்ததானால் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன.

வீரம் காரணமாக வடக்கிருத்தல்

பழங்காலத் தமிழகத்திலே போர்களுக்குக் குறைவு இருக்கவில்லை, முடியுடை மூவேந்தர்கள் எனக் குறிப்பிடப்படும் சேரர், சோழர், பாண்டியர் என்போரும், அவர்களுக்கு அடங்கிய குறுநில மன்னரும், ஒருவருடன் ஒருவர் போரில் ஈடுபட்டனர். வீரம் என்பது ஆண்களுக்கு இருக்க வேண்டிய சிறந்த பண்புகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. புகழ் பெற்ற மன்னர்கள் பெரும் வீரர்களாக இருந்தார்கள். இத்தகைய வீரர்கள் பற்றிப் புலவர்கள் புகழ்ந்து பாடினர். போர் வரும்போது புறமுதுகிடாமல் (பயந்து ஓடாமல்) முன் நின்று போர் செய்வது வீரர்களுக்கும் அவர்களது ஆண்மைக்கும் அடையாளமாகக் கருதப்பட்டது. மார்பிலே புண்பட்டு இறப்பது புகழுக்குரியது, முதுகிலே புண்படுவது, வீரத்துக்குக் களங்கம் என்று கருதப்பட்டது. முதுகிலே புண்படுவது புறமுதுகிட்டதன் விளைவாக இருக்கலாம் என்பதனால் இவ்வாறு கருதப்பட்டது போலும்.

இலக்கியத்தில் வடக்கிருத்தல்

சங்க காலத் தமிழ் இலக்கியமான புறநானூற்றில் வரும் பாடல்கள் இரண்டில், சேர மன்னனான பெருஞ்சேரலாதன், கரிகால் சோழனுடன் ஏற்பட்ட போரின்போது முதுகில் புண் பட்டதனால் வடக்கிருந்து உயிர் துறந்தது பற்றிய செய்தி வருகிறது. அவ்வாறு வடக்கிருந்து உயிர் விடுவதன் மூலம், வீரர்கள் தங்களுக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்கிக் கொள்ள முடிந்தது என்பதும், முதுகிலே அம்பெய்தவனுக்கு அது ஒரு களங்கமாகக் கருதப்பட்டது என்பதும் இப்பாடல்கள் மூலம் தெரிய வருகிறது.

மானமும் நட்பும்

தன் புதல்வர்கள் செயலுக்கு நாணிய கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் துறந்ததும் காணாமலே அவருடன் நட்புக் கொண்ட புலவர் பிசிராந்தையார் அவனுடன் வந்து வடக்கிருந்து உயிர் விட்ட நட்பின் மாட்சிமையும் புறநாற்றுப் பாடல்கள் மூலம் அறியப்படுகிறது.

துறவிகள்

மானம், நட்பு காரணமாக உண்ணாமல் வடக்கிருத்தல் சங்ககால வழக்கம். இந்தக் கருத்து மருவி, உண்டும் உண்ணாமலும் இருக்கும் துறவிகளைக் குறிக்கவும் 'வடக்கிருந்தார்' என்னும் சொல் படன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்த்துகள்

Blog Archive