கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, June 05, 2021

வீரமாமுனிவர் செய்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் VEERAMA MUNIVAR TAMIL ELUTHU SEERTHIRUTHAM

 

உயிரெழுத்துச் சீர்திருத்தம்

1) அகரத்தையும் ஆகாரத்தையும் வேறுபடுத்தல்

வீரமாமுனிவர் காலத்தில் ஆகாரத்தை எழுதும் பொழுது அகரத்தின் மேல் புள்ளியிட்டு எழுதியதை விடுத்து அகரத்திற்கு சுழியிட்டு ஆகாரத்தை எழுதினார்

அ் => ஆ

2) எகரத்தையும் ஏகாரத்தையும் வேறுபடுத்தல்


முனிவர் காலத்திற்கு முன்னால் "எ" என்னும் எழுத்து குறிலாகவும் நெடிலாகவும் ஒலிப்புப் பெற்றது. அவர் குறிலுக்கும் நெடிலுக்கும் வேறுபாடு காண்பிக்க எகரத்தில் வருகின்ற மேல் கோடு நீட்டிச் சுழித்தால் அதை நெடிலாக ஒலிக்கலாம் என்று சீர்திருத்தம் கொணர்ந்தார். ஆனால் அச்சீர்திருத்தம் தற்போது வழக்கத்தில் இல்லை. அவர் இயற்றிய தமிழ்-இலத்தீன் அகராதி (1744) முழுவதிலும் "ஏ" என்னும் எழுத்தை "எு" என்றே எழுதியுள்ளார். இப்போது ஏகாரத்தில் இடப்படுகின்ற கீழ் வளைகோட்டைக் கொண்டுவந்தது யார் என்று தெரியவில்லை.

எ் => எு

3) ஒகரத்தையும் ஓகாராத்தையும் வேறுபடுத்தல்

இங்கேயும் குறிலையும் நெடிலையும் வேறுபடுத்த வீரமாமுனிவர் ஒகரத்தின் கீழே சுழி சேர்த்து அதை நெடிலாக்கினார்.

ஒ் => ஓ

உயிர்மெய்யெழுத்துச் சீர்திருத்தம்

1) எகர ஏகார உயிர்மெய் வேறுபடுத்தல்


தேன் என்பதைத் தென் என்பதிலிருந்து வேறுபடுத்த எகர ஒலி ஏகார ஒலியாக வேண்டும். இவ்வேறுபாட்டைக் காட்ட வீரமாமுனிவர் எகர ஒலியைச் சுட்டுகின்ற கொம்புக்கு மேலே சுழி அமைத்து, ஏகார ஒலி பெறச் செய்தார்.

தெ்ன் => தேன்.

2) ஒகர ஓகார உயிர்மெய் வேறுபடுத்தல்


கோல் என்னும் சொல்லைக் கொல் என்னும் சொல்லிலிருந்து வேறுபடுத்த ஒகர ஒலி ஓகார ஒலியாக வேண்டும். இவ்வேறுபாட்டைக் காட்ட முனிவர் ஒகர ஒலியைச் சுட்டுகின்ற கொம்புக்கு மேலே சுழி அமைத்து, ஓகார ஒலி பெறச் செய்தார்.

தெ்ால் => தோல்

3) உயிர்மெய்யெழுத்தில் ஆகாரத்தையும் ஓகாரத்தையும் சுட்டும் காலை ரகரத்திலிருந்து வேறுபடுத்தல்


மான் என்னும் சொல்லிலும் கோன் என்னும் சொல்லிலும் ஆகாரமும் ஓகாரமும் வருகின்றன. அவற்றைக் குறிக்க பயன்படும் கால் ரகரம் போல் இருந்தாலும் அது கீழே வளைவு பெறுவதில்லை. இவ்வாறு வளைவு கொடுத்து நெடிலைச் சுட்டும் காலை ரகரத்திலிருந்து வேறுபடுத்தும் முறை வீரமாமுனிவர் கொணர்ந்த சீர்திருத்தம் அல்ல. அவர் காலத்திலேயே சிலர் கிரந்த ரகரம் போன்ற இம்முறையைக் கையாண்டனர் என்றும், தாமும் அவ்வாறு எழுதியதாகவும் முனிவர் கூறுகிறார். அதையே அவரும் பயன்படுத்தி வழக்கத்தில் கொண்டுவந்தார்.இந்த ரகரம் சீர்திருத்தம் மலையாளத்தில் உள்ள ரகரம் "ര" போல இருந்தது

தமிழ்த்துகள்

Blog Archive