கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, June 02, 2021

வழாநிலை வகைகள் தமிழ் இலக்கணம் VAZHAANILAI VAKAIKAL TAMIL ILAKKANAM

 இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும். அவ்வாறின்றி இலக்கணமுறையுடன் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும். வழாநிலை ஏழுவகைப்படும். இலக்கண முறையின்றிப் பேசினாலும் எழுதினாலும் கூட சில இடங்களில் இலக்கணமுடையதைப்போல வழாநிலையாக ஏற்றுக்கொள்ளும் முறைக்கு வழுவமைதி என்று பெயர்.

வழாநிலை வகைகள்

திணை வழாநிலை, பால்வழாநிலை, இடவழாநிலை, காலவழாநிலை, வினாவழாநிலை, விடைவழாநிலை, மரபுவழாநிலை என வழாநிலைகள் ஏழுவகைப்படும்.

1. திணைவழாநிலை

உயர்திணை, அஃறிணை ஆகிய இரு திணைகளும் மயக்கமின்றி வருவது திணைவழாநிலை ஆகும். உயர்திணை தொடர்ந்த பொருண்முத லாறும் அதனொடு சார்த்தி னத்திணை முடிபின.

சான்று

1. கண்ணன் நல்லன். 

2. யானை கரியது.

2. பால்வழாநிலை

ஐவகைப்பாலும் மயக்கமின்றி எழுதுவதும் பேசுவதும் பால்வழாநிலை ஆகும். அந்தந்தப் பாலுக்குரிய எழுவாய்கள் அந்தந்தப் பாலின் பயனிலையைக் கொண்டு முடீதல் வேண்டும். திணைபால் பொருள்பல விரவின சிறப்பினும் மிகவினு மிழிபினு மொருமுடி பினவே..

சான்று

1. வளவன் இனியன். 

2. கோதை நல்லாள். 

3. புலவர்கள் வேந்தர்களைப் பாடினார்கள். 

4. யானையின் கோடு கூரியது. 

5. பறவைகள் பறந்தன.

3. இடவழாநிலை

மூவகை இடமும் மயக்கமின்றி எழுதுவதும் பேசுவதும் இடவழாநிலை ஆகும். ஓர் இடத்திற்கு உரிய எழுவாய் அதே இடத்திற்குரிய பயனிலையைக் கொண்டு முடிதல் இடவழாநிலையாகும்.

சான்று

1. நான் சென்றேன். 

2. நீ வந்தாய். 

3. மாணவர்கள் தமிழைப் படித்தார்கள்.

4. காலவழாநிலை

முக்காலமும் மயக்கமின்றி எழுதுவதும் பேசுவதும் காலவழாநிலை ஆகும். ஒரு தொடரில் எக்காலப்பெயர் இடம் பெறுகிறதோ அக்காலத்திற்குரிய பயனிலையையே கொண்டு முடிதல் வேண்டும்.

சான்று

1. நான் நேற்று வந்தேன். 

2. நீவிர் இன்று வருகின்றீர். 

3. மாணவர்கள் நாளை நாட்டை ஆள்வார்கள்.

5. வினாவழாநிலை

அறுவகை வினாக்களும் மயக்கமின்றி எழுதுவதும் பேசுவதும் வினாவழாநிலை ஆகும். வினாவில் இடம்பெறும் எழுவாயின் திணை, பால் ஆகியவை மாறாமல் வினாப் பயனிலை வருவதே வினாவழாநிலை ஆகும். திணைபால் பொருள்பல விரவின சிறப்பினும் மிகவினு மிழிபினு மொருமுடி பினவே.

சான்று

1. திருக்குறளை இயற்றியவர் யார்? 

2. பருப்பு உளதோ வணிகரே?

6. விடைவழாநிலை

ஒரு வினாவிற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகக் குறிப்பாலோ ஏற்ற விடை உரைப்பது விடைவழாநிலை ஆகும். தம்பால் இல்லது இல்லெனின் இனனாய் உள்ளது கூறி மாற்றியும் உள்ளது சுட்டியும் உரைப்பர் சொற்சுருங் குதற்கே ..

சான்று

1. திருக்குறளை இயற்றியவர் யார்? என்னும் வினாவிற்கு திருவள்ளுவர் என விடையளிப்பது. 

2. பருப்பு உளதோ வணிகரே? என்னும் வினாவிற்கு பருப்பு உள்ளது, பருப்பு இல்லை, பயிறு உள்ளது போன்ற விடைகளும் விடைவழாநிலையே. இங்கு பருப்பு உள்ளதா? என்னும் வினாவிற்கு பயிறு உள்ளது என விடையளிப்பினும் அதுவும் வழாநிலையே ஆகும். அவ்விடை பருப்பு இல்லை என்னும் விடைப் பொருளை மறைமுகமாக உணர்த்தியது. இது இனமொழி விடையாகும். 

இவ்வகைவிடையை இலக்கணநூலார் இறைபயத்தல் என்னும் வகையில் அடக்குவர்.

7. மரபுவழாநிலை

முன்னோர் ஒரு பொருளை எச்சொல்லால் வழங்கினரோ அவ்வாறே வழங்குவது மரபு ஆகும். மரபுத்தொடர்கள் மயக்கமின்றிப் பேசுவதும் எழுதுவதும் மரரபு வழாநிலை ஆகும்.

சான்று

1. சேவல் கூவியது. 

2. அம்பு எய்தான். 

3. குருவிக் கூடு

தமிழ்த்துகள்

Blog Archive