Teacher's day greeting poem
ஆசிரியர் தின வாழ்த்துக் கவிதை
❤🎈❤🎈❤🎈❤🎈❤🎈❤🎈
ஆண்டுக்கு ஆண்டு
அகிலம் கொண்டாடும்
அற்புத தினம் பல
வருகிறதே!
அவைஒவ் வொன்றும்
நமக்கு அழியா
அழகிய நினைவுகள்
தருகிறதே!
அன்பின் நினைவாய்
சில தினங்கள்..
ஆழ்ந்த வருத்தத்தில்
சில தினங்கள்.
இன்பம் பொங்கும்
சில தினங்கள்..
ஈகத்தை நினைத்திட
சில தினங்கள்..
உறவுகள் கொண்டாடும்
சில தினங்கள்...
ஊர் கூடி மகிழும்
சில தினங்கள்...
எத்தனை எத்தனை
தினங்களடா...
நினைத்ததும் இனித்திடும்
மனங்களடா...
அத்தனை தினத்திற்கும் முத்தாய்ப்பாய்
அழகிய தினம் ஒன்று உண்டென்பேன்..
அத்தனை தினத்தையும்
அழகாக்கும்
அதிசயம் ஆசிரியர்
தினமென்பேன்..
"எண்ணும் எழுத்தும்
கண் எனத் தகும்"என்று முன்னோர்கள்
சொன்னார்கள்...
எண்ணும் எழுத்தும்
அறிவித்தவரை
இறைவனே
என்றார்கள்...
அன்னைக்கும் தந்தைக்கும்
அடுத்த நிலையில்
ஆசிரியர் என்றார்கள்!
ஆசிரியர் காட்டிய
வழியில் தானே
அரசரும் சென்றார்கள்!
எரிகிற விளக்கு
என்ற போதிலும்
தூண்டுகோல் தேவையடா!
எழிலாய் அந்த
இடத்தில் இருப்பது
ஆசிரியர் சேவையடா!
உயரத்தில் ஏற்றி
உலகத்தைக் காட்டும்
உன்னத ஏணியடா!
எழுகடல் போன்ற
வாழ்வினைத் தாண்ட
உனக்கான தோணியடா!
உவமைகள் காட்டி
ஒப்பிட இயலா
உயர் பணி இதுவன்றோ!
உலகத்தில் உள்ள
உயர் தொழிற்கெல்லாம்
இதுவே பொதுவன்றோ!
எப்பிறப்பில் செய்த
எத்தவப் பயனோ
இப்பணி நமைச் சேர!
அப்பணிக்கே நமை
அர்ப்பணித்திடுவோம்
அகிலம் நம் பெயர் கூற!
அறிவொளி ஏற்றி
அறப்பணி ஆற்றும்
ஆசிரியர் இனம் வாழ்க!!!
அகம் மிக மகிழ்ந்தே
அனைவரும் வாழ்த்தும்
ஆசிரியர் தினம் வாழ்க!!!
அன்புடன்
சேவியர்
தமிழாசிரியர்
ஆலங்குடி புதுக்கோட்டை