A congratulatory poem for the students who are writing the public examination
பொதுத்தேர்வு எழுதும் மாணவச் செல்வங்களுக்கு
வாழ்த்துக் கவிதை
முதன்முதலாய்
பத்தாம் வகுப்பில்
பொதுத்தேர்வு
எழுதப்போகும்
என்னருமைக் குழந்தைகளே!
பொதுத் தேர்வு
மட்டுமே
வாழ்க்கை அல்ல
அச்சப்பட...
பொதுத்தேர்வு
போர்க்களம் அல்ல
உங்கள் திறமைகளை
உலகம் அறியும் களம்
எளிதாக
எதிர்கொள்ளுங்கள்
எந்த உயரத்தையும் நீங்கள்
எட்டலாம் உறுதியாக.
இதுவரை
அப்பாவின் அதட்டல்
அம்மாவின் ஆறுதல்
ஆசிரியரின் தேடல்
உங்களைப்
பட்டை தீட்டியிருக்கும்.
படி... படி... படி...
படித்துவிட்டாயா?
எழுதிவிட்டாயா?
மதிப்பெண்கள் எவ்வளவு?
மருத்துவமா?
பொறியியலா?
என்னவாகப் போகிறாய்?
எதிர்காலத்தில்
என்ற
வினாக் கணைகள்தான்
உங்கள் காதுகளைத்
துளைத்திருக்கும்.
மறந்து விடுங்கள்
மற்ற அனைத்தையும்
தேர்வு
உங்களுடையது.
தைரியம்
உள்ளத்திற்குள் உலாவரட்டும்
மனதில்
நம்பிக்கை நங்கூரமிடட்டும்
தேர்வு நாளில்...
அதிகாலையில் எழுந்து
உங்களையும்
உள்ளத்தையும்
தூய்மையாக்குங்கள்.
படித்ததை எல்லாம்
பத்திரமாக
மூளையில்
முடிந்து வையுங்கள்.
எதை எழுதுவது?
எப்படி எழுதுவது?
எனத் திட்டமிடுங்கள்.
அதற்காக உங்கள்
சிந்தனையை வட்டமிடுங்கள்.
மதிப்பெண்களை மட்டும்
யோசித்துவிடாதீர்கள்.
அது உங்களைக்
கோழையாக்கி
கைவிலங்கிட்டு
மனதை மலடாக்கும்.
உழைப்பிற்கும்
உன்னதமான
முயற்சிக்கும்
உரிய மதிப்பெண்கள்
கிடைத்தே தீரும்.
உங்களை நீங்களே
நம்பவில்லையெனில்
மற்றவர்கள் எப்படிப்
போற்றுவார்கள்
தேவையான போது
தேவையானவற்றை மட்டும்
தரமானதாகச்
சாப்பிடுங்கள்.
உணவுகள் கூட
உணர்வுகளைச்
சிதைக்கும்
நினைவில் கொள்ளுங்கள்.
துணியை
உடுக்கும் போதே
துணிவையும் சேர்த்து
உடுத்திக்கொள்ளுங்கள்.
பொதுத்தேர்வு
சதா ரணம் அல்ல
சாதாரணம்.
தந்தையிடம்
தைரியத்தைக்
கடன் வாங்குங்கள்.
தாயிடம்
பொறுமையைப்
பெற்றுக்கொள்ளுங்கள்.
கற்றுக்கொடுத்தவரிடம்
தன்னம்பிக்கையை
வாங்கிக்கொள்ளுங்கள்.
தேர்வறைக்குள்
தெளிந்த
நீரோடைபோல் நுழையுங்கள்.
ஒரு நொடி
விழிகளை மூடிக் கொள்ளுங்கள்.
மிச்சமுள்ள
அச்சத்தை
எச்சமெனத் தூக்கி எறியுங்கள்.
எல்லாம் தெரியும்
என்று
நம்பி கையால் எழுதுங்கள்.
உங்கள்
நம்பிக்கையால் எழுதுங்கள்.
எழுதுவதைத்
தெளிவாக எழுதுங்கள்.
எழுதுவதை
எளிதாக எழுதுங்கள்.
எழுதுவதை
முழு நம்பிக்கையுடன் எழுதுங்கள்.
வினாக்களுடன்
விடைகளாக
விளையாடுங்கள்.
வினாத்தாளையும்
விடைத்தாளையும்
நண்பர்களாக்குங்கள்
நேர மேலாண்மை
கற்றுக் கொள்ளுங்கள்
பிற சிந்தனைகளை
நிறுத்திவையுங்கள்
தேர்வு முடியும்வரை.
தேர்ச்சியும்
மதிப்பெண்களும்தான்
பெற்றோர் மனதை
நிறைவடையச் செய்யும்
எழுதுகோல் சிந்தும்
ஒவ்வொரு துளி மையிலும்
மதிப்பெண்
மறைந்துள்ளது என்பதை
மறக்காதீர்கள்
தடுமாறாமல் மட்டுமல்ல
தடம் மாறாமலும் எழுதுங்கள்
பெற்றோரை மனதில் வைத்து
கற்றவற்றை எல்லாம் எழுதுங்கள்
பத்துமாதங்கள்
படித்துச் சுவைத்தவற்றை
வெள்ளைத் தாளில்
விதைத்து வாருங்கள்.
தேர்வு எழுதி முடிந்தவுடன்
தேர்வு முடிவுகள்
விழி முன் விரிய வேண்டும்
நம்பிக்கை தர வேண்டும்
எழுதி முடித்து
கம்பீரமாக
எழுந்து வாருங்கள்
என் செல்வங்களே
வாழ்க்கையிலும்
முன்னேற
முன்பதிவு செய்தோம்
என்ற எண்ணத்துடன்
முகம் மலர வாருங்கள்
உங்களை
அழைத்துச் செல்ல
வெற்றி
வெகு நேரம்
காத்துக்கிடக்கும்.
தேர்வு முடிவுகள்
தேனாய் அமைய
தாய்மொழியால்
வாழ்த்துகிறேன்...
செ.பாலமுருகன்,
தமிழாசிரியர்,
அருப்புக்கோட்டை.