கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, April 14, 2022

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் தமிழ்க் கட்டுரை Dr.B.R.AMBEDKAR TAMIL KATTURAI ESSAY SPEECH

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர்



உன் பிறப்பு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம் ஆனால் உன் வாழ்வு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.

மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்- ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்!

அன்னிய ஆதிக்கத்தின் அடிமை விலங்கு ஒடித்து விடுதலைக் காற்றைச் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் நாம். அடிமை வாழ்வு எப்படி இருக்கும்? என்று கேட்டால் நமக்கு என்ன தெரியும்? தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடிய காலம் ஒரு காலம்? தீண்டாமை எப்படி இருக்கும் என்று கேட்டால் நமக்கு என்ன தெரியும்?தோளில் கிடக்கும் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு காலில் கிடக்கும் செருப்பைக் கையில் எடுத்துக்கொண்டு உங்கள் தெருவில் கூனிக்குறுகி நடந்து பாருங்கள்! அடிமை வாழ்வு என்பதும் தீண்டாமை என்பதும் எப்படி இருக்கும் என்று தெரியும்.

ஏழையாகப் பிறந்தாலும் கோழையாக பிறக்காதே என்பார்கள்!

ஆம்! மராட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் தபோலி என்ற கிராமத்தில் பிறந்தவர் தான் பீமாராவ் ராம்ஜி அம்பவாடேகர். படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பள்ளி சென்ற அந்தப் பிஞ்சு மனது தீண்டாமை என்னும் தீயில் கருகியது எல்லோருக்கும் அமர்வதற்குப் பலகை தனக்கு மட்டும் வீட்டில் இருந்து எடுத்து வரப்பட்ட கோணி. எல்லோரும் குவளையில் தண்ணீர் அருந்த தனக்கு மட்டும் நீட்டிய கைகளுக்குள் ஊற்றப்படும் குடிநீர்! எவ்வளவு அவமானங்கள் அவன் உட்கார்ந்த இடத்தில் உட்காராதே! அவன் தொட்ட இடத்தில் தொடாதே! என்று ஆசிரியர் முதல் அனைவரும் ஒதுக்கி வைக்க எத்தனை எத்தனை ஏளனங்கள்? அத்தனையையும் சகித்துக்கொண்டு "படிப்பு ஒன்று மட்டுமே நமக்கு விடுதலை" என்ற எண்ணத்தில் எல்லாம் தாங்கிக் கொண்டார் அம்பேத்கார்.

ராம்ஜி மனோஜி சக்பால் பீமாபாய் ராம்ஜி சக்பால் இணையருக்கு 14-வது குழந்தையாகப் பிறந்தவர் தான் அம்பேத்கர். தன்னுடைய ஆசிரியரின் பெயரைத் தன் பெயராக்கிக்கொண்டு பெருமை சேர்த்தவர் தான் பீமாராவ் ராம்ஜி. ஆம்! கருணையற்ற சாதி மத வேறுபாடு கருதுகின்ற பள்ளிச் சூழலிலும் தன்னுடைய உணவைக் கொடுத்து கல்வியும் புகட்டிய தன்னுடைய ஆசிரியரின் பெயரைத்தன் பெயராக ஆக்கிக் கொண்டார் பீமாராவ் ராம்ஜி -அம்பேத்கர் ஆனார். மும்பை பல்கலை கொலம்பியா பல்கலை லண்டன் பல்கலை என அவர் தேடித்தேடி தம் அறிவுத் தாகத்தைத் தீர்த்தார் 2013 ல் இளங்கலை 2015 மற்றும் 16-இல் முதுகலை1916 மற்றும் 1927இல் முனைவர் பட்டங்கள். மீண்டும் 1921இல்முதுகலை அறிவியல் 2022-ல் பாரிஸ்டர் பட்டம் டிஎஸ்சி என்று சொல்லப்படக்கூடிய லண்டன் பல்கலை வழங்கும் பொருளாதாரப் பட்டத்தை 1923இல் பெற்றவர். மூன்றாவது மற்றும் நான்காவது முனைவர் பட்டங்களைக் கொலம்பியா பல்கலையிலும் உஸ்மானியா பல்கலையிலும் பெற்றவர்.

விடுதலை வேள்வியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு போராடியவர் அம்பேத்கர். இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகளுடன் கலந்து கொள்ள வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பற்றி பேசியவர் என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ அதற்காகப் போராடுவேன்! அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன் என்றவர் அண்ணல் அம்பேத்கர். ஆடுகளைத்தான். கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல! ஆடுகளாக இருக்க வேண்டாம் சிங்கங்களைப் போன்று வீறு கொண்டு எழுங்கள் வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம் யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம் நமது திறமையும் நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான் என்றார்.இரட்டை வாக்குரிமைக்கு எதிராகக் குரல் கொடுத்து காந்தியடிகளுடன் பூனா ஒப்பந்தம் செய்துகொண்டார். அதன்மூலம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனித் தொகுதி வழங்கப்பட்டது.

ஒரு தேசத்தின் ஒற்றுமை என்பது அதன் ஆன்மீக ஒற்றுமையே இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒரே இனத்தவரே என்று குரல் கொடுத்தவர் அண்ணல் அம்பேத்கர். 1947இல் விடுதலை பெற்ற பிறகு இந்தியர்களுக்கு ஆளத் தெரியாது என்று கேலி செய்த வின்ஸ்டன் சர்ச்சில் வியக்கும் அளவுக்கு இந்தியாவின் தலையெழுத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வகுப்பதற்கு இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பியாக இருந்தவர்தான் அண்ணல் அம்பேத்கர். வட்டமேசை மாநாட்டின் போது ஏன் இன்னும் உறங்காமல் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்று வெளிநாட்டவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு என் மக்கள் எல்லாம் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் விழித்தெழும் வரை நான் உறங்க மாட்டேன் என்று குரல் கொடுத்தவர் அம்பேத்கர்.

பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழிப்புக்காகப் பாடுபட்டவர். அம்பேத்கரை சட்ட மாமேதை ஆகத்தான் எல்லோரும் அடையாளம் காட்டுவார்கள் ஆனால் அவர் பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் பயின்றவர். அதனால்தான் தமிழக அரசு அவருடைய பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்திருக்கிறது. தன் அன்புத் துணையான ராமாபாய் என்பவர் மூலம் யஸ்வந்த் அம்பேத்கர் என்ற வாரிசை இவ்வுலகுக்குத் தந்து விட்டுச் சென்றவர் என்பது பலருக்குத் தெரியாது. சைத்திய பூமி என்ற இடத்தில் மராட்டிய மண்ணில் அவர் உடல் புதைந்து இருந்தாலும் மக்கள் மனங்களில் அவரது புரட்சிக் கருத்துகள் விதைக்கப்பட்டுத் தான் இருக்கின்றன.

பம்பாய் சட்டமன்ற உறுப்பினராக 1937 முதல் 1942 வரை இருந்தவர் அண்ணல் அம்பேத்கர். மும்பையின் என்பில்ஸ்டன் பள்ளியில் கற்கத் தொடங்கிய அவரது படிப்பு ஆர்வம் தன் வீட்டில் 50 ஆயிரம் புத்தகங்களை அடுக்கி வைத்துப் படிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. சுதந்திர தொழிலாளர் கட்சி, பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு என்ற அரசியல் கட்சிகளைத் தொடங்கி அடிமை வாழ்வு ஒழிப்பதற்குக் குரல் கொடுத்தவர் அண்ணல் அம்பேத்கர். ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து பிறகு அவன் தானாகவே கிளர்ந்து எழுவான் என்றார் அம்பேத்கர். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விடம் பரவட்டும் என்று முழங்கிய அண்ணல் அம்பேத்கர் புத்தர் மீது தான் கொண்ட பற்றால் புத்தரும் அவரின் தம்மமும் என்ற நூலை எழுதினார். தீண்டாமை என்பது சாதி தேசத்திலிருந்து வளர்கிற ஒன்று, சாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிப்பது என்பது நடக்கக் கூடியது அல்ல என்று அன்றே சொன்னவர் அம்பேத்கர் .

மகர் என்ற தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்த அண்ணல் அம்பேத்கர் கோடிக்கணக்கான இதயங்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வீற்றிருக்கிறார். புயலுக்குத் தலைவணங்க நாம் ஒன்றும் புல் அல்ல எதற்கும் அஞ்சாத இமயமலைகள் என்று எல்லோருக்கும் காட்டுங்கள்! என்று சொன்ன பாபாசாகேப் அதாவது தந்தை என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அம்பேத்கரின் உயரிய கருத்துகளை நெஞ்சில் பதிப்போம்! இந்தியத் திரு நாட்டின் இணையற்ற குடிமக்களாக இருப்போம்!



மு.முத்து முருகன் தமிழாசிரியர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.ரெட்டியபட்டி

தமிழ்த்துகள்

Blog Archive