குழந்தைகள் தினக் கவிதை
கல்விச் சோலையில் பூக்கும் காம்பில்லா
மலர்கள்
குழலிசையும் யாழிசையும் வென்றவர்கள்
இவர்கள் !
பிஞ்சுக் கரங்கள்
பிடிக்கும்
எழுதுகோல்
பிரபஞ்சம் தொடும் சிந்தனை
தேன்கூட்டில்
மொய்ப்பது போல் நம் மனத்தே அமர்பவர்கள் சட்டென
நடிக்கத் தெரியாத செவாலியேக்கள் !
இவர்கள் மன்னிப்பதிலும் மறப்பதிலும்
மகாத்மாக்கள்
இன்னும் இப்புவியை உயிர்ப்பாய் வைத்திருக்கும் ஏகலைவர்கள்!
விடுதலை நாட்டின் சிற்பியென
விளங்கிய நேருவின் வாசமிகு ரோஜாவாய்
அவர் தம்
இதயத்தில் நிறைந்தவர்கள்! பிறந்தநாளில் சிறந்த நாள் பிள்ளைகளைக் கொண்டாடும் நாளே!
கருவில் இருக்கும் போதே தெருவில் விடப்பட்டவர்களும் இவர்களில் உண்டு கொஞ்சம் கருணை இருப்பதால்
அனாதை இல்லங்களில் இடமும் உண்டு !??
பிஞ்சிலேயே
பழுத்து விட்ட
அறிஞரும் உண்டு ஐம்பத்தஞ்சிலேயும் இவர்கள் போல
மழலையும் உண்டு உணவுக்காய்க்
கையேந்தும்
வாடிய மலர்கள்
உறவுக்காய்க்
கண் ஏங்கும்
வாடா மலர்கள் !!!
நாளைய
வரலாறை எழுதிடப் பிறந்தவர்கள்
நம்மெதிரே
நடமாடும் தெய்வங்களாய் வழிபடச் சிறந்தவர்கள்!
பூவினும் மெல்லிய
இதயம்
இவர்க்குண்டு
பூமியில் கொண்டாட
இவர் போல்
எவருண்டு?
புன்னகையும் கண்ணீரும் இடம் மாறும் முன் கொண்டாடிடுவோம் குழந்தைகள் தினத்தை
-கவிஞர் கல்லூரணி முத்து முருகன்