திருக்குவளை தந்த தெருக்குரலே!
உருக்குலையாத தமிழ்க் குரலே!
கருக் கொண்ட கதிரின் மணிப்பிடியென
செறுநரும் கேட்கச்
சீறும் போர்வாளே!
சாட்டையால் அடித்துச் சமூக நீதி கேட்டு- அழுக்கு
மூட்டையாய்க் கிடந்த மூடநம்பிக்கை விரட்டி-நாட்டை
தேட்டை போடும் எத்தர்கள் தலை குனிய-எஃகுக்
கோட்டையாய் மக்கள் மனதில் வாழும் குறளோவியமே!
பொன்னர் சங்கர் வீரம் புகழ்ந்து எழுதிய அண்ணாவின் இதயமே!
புலிக்கொடி பறக்கும் சோழ மண்ணின் உதயமே!
கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை உலகத் தமிழருக்கு
உரைத்திட்டாய்!
உடைமை பொது வென சமத்துவபுரங்களை அமைத்தே காட்டிட்டாய்!
வானளாவிய வள்ளுவர் கோட்டம் ஒருபுறம்!
தேனுலாவும் பூம்புகார் தோட்டம் மறுபுறம்!
ஊனுலாவும் தமிழர் உயிர் மூச்சாம் ஒண்டமிழைச்
செம்மொழியாய்ச் செதுக்கிய தமிழ்ச் சிற்பியே!
காணும் இடமெலாம் கன்னித்தமிழ் தான் வளர
கல்லக்குடி கொண்ட கருணாநிதியே!
மெல்ல தமிழினிச் சாகும் எனச் சொன்ன
முண்டாசுக் கவியின் கவலை போக்க
கள்ளத்தனமாய் குடியேற நினைத்த
மொழி விரட்டிய திராவிடத் தீயே!
திசைக்கொரு தமிழ் முழக்கம்
திக்கெட்டும் இனி ஒலிக்கும்!
கழகத்தின் ஆட்சி தன்னில்
கயவர்கள் சிரம் உடைக்கும்!
இசைக்கொரு குயில் என எழுதிட்ட உன் பேனா!
இமயத்தில் கொடியென இனி பறக்கும்!
உயரமா முக்கியம் உரம் தானே முக்கியம்?!
நெஞ்சுக்கு நீதி கேட்ட அஞ்சுகத்தாய் மைந்தனே!
தமிழ்நாட்டில் வஞ்சகர்க்குச் சொப்பனமாய்
வாழ்த்திட்ட தலைவனே! தமிழினக் காவலனே!
இனமானத் தலைவனே!
வணங்குகிறேன் நூற்றாண்டில்
வண்டமிழ்ச் சொல்லெடுத்து!
இணங்கி வா என்னோடு
சமூக நீதி எனும் வாளெடுத்து!
-கவிஞர் கல்லூரணி முத்து முருகன்