கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, March 08, 2022

பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதி கவிதை MAHAKAVI BHARATHIYAR KAVITHAI

 

பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதி

 

அச்சமில்லை என்று சொல்லி

ஆண்மை வளர்த்தவன் - தமிழ்

உச்சி மீது நின்றிருந்து

புகழ் விளைத்தவன்

 

அடிமை வாழ்வின் விலங்கொடிக்க

அறம் பாடியவன்

ஆங்கிலேயரை விரட்டிடவே

மறம் தேடியவன்

 

ஆத்திரம் கொண்டவர்க்கே எதற்குச்

சாத்திரம் என்றவன் - ஒளவை

ஆத்திசூடியைப் புதிதாய்

மாற்றி எழுதியவன்

 

ரௌத்திரம் பழகென்று நமக்குச்

சொல்லிச் சென்றவன் - கேவலம்

பௌத்திரம் அடிமை வாழ்வென்றே

கிள்ளி எறிந்தவன்

 

பாதகஞ் செய்பவரைக் கண்டால்

உமிழச் சொன்னவன் - பாப்பாப்

பாட்டிலும் வீரத்

தமிழைச் சொன்னவன்

 

பேச்சினிலே விழி பிதுங்கி இருக்கும்

மூச்சிலே தமிழ் கலந்து இருக்கும் - கொல்லன்

காய்ச்சிய உலையாய்க் கவிதைக்

கனல் கொப்பளிக்கும்

 

நாணும் அச்சமும் நாய்கட்கென்றே

நல்வழி சொன்னவன் - பெண்மை

பூணும் கொடுமையெல்லாம் அன்றே

கொன்று புதைத்தவன்

 

நிமிர்ந்த நடையும் ஞானச் செருக்கும்

புதுமைப்பெண் என்றவன் - தலை

கவிழ்ந்து கிடக்க பெண்ணொரு

பதுமையோ என்றவன்

 

ஏறுபோல் நடையினராய் வீர

இளைஞர்களை அழைத்தவன் - நாட்டைக்

கூறு போட்ட கூட்டத்தை

வேரோடு அழித்தவன்

 

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும்

இல்லை என்றவன் - அக்கிரகாரத்தில்

பிறந்தாலும் தீண்டாமை

எல்லை தாண்டியவன்

 

எரிதழல் கொண்டு

கதிரை வைத்திழந்தவன் கையெரிக்கச் சொன்னவன்

தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்

தருமம் மறுபடி வெல்லும் என்றவன்

 

அச்சம் தவிர்

ஆண்மை தவறேலென்றவன் - கோபம்

மிச்சம் வைக்காமல் கவிதையில்

அனலைக் கலந்தவன்

 

அடடா கோபம் எதற்கென்றே

அசட்டுத்தனமாய்க் கேட்போருக்கு

எடடா கோலை எழுத - வாழ்வு

சிறக்கட்டும் சின்னக் கோபத்தாலென்றவன்.

 

பண்பாட்டின் அடையாளமாம்

ஜல்லிக்கட்டை மீட்டதுவும்

பரவும் நஞ்சைக் கலந்த ஆலை

பெரிய பூட்டுப் போட்டதுவும்

பயிர் விளைப்போர் உழைப்புறிஞ்சும்

வேளாண் சட்டம் விட்டதுவும்

சின்னக் கோபம் தமிழனுக்கு

சீறிப் பாய்ந்த வழிதானே?

 

எண்ணம் யாவும் திண்ணம் உறவே

சின்னக் கோபம் கொண்டிடுவோம்

எட்டயபுரத்து அக்கினிக் குஞ்சை

எட்டும் அறிவினில் வைத்திருப்போம்!

எட்டும் அறிவினில் என்றும் வைத்திருப்போம்!

 

-    கவிஞர் கல்லூரணி முத்து முருகன்.

தமிழ்த்துகள்

Blog Archive