மதுரையின் பெருமைகள்
முத்துக் கடல் பதித்து மூன்று நெறி வளர்த்து
கத்தும் கடல் மீது கலங்களில் விளையாடும் கற்றுக் கலை மிகுந்த காவலனாம் தென்பாண்டி
மண்டலத்தின் புகழ் உரைக்க வந்துள்ளேன்.
கூத்தன் இருந்தான் குறளரசன் அங்கிருந்தான்
வார்த்தைத் தமிழுக்கு வணங்கிய தமிழ்வேந்தன் கம்பன் இருந்தான் வயதான தமிழ்ப் பாட்டி
ஔவை இருந்தாள். நக்கீரன் நன்னாகன் நப்பசலை ஒக்கூர் மாசாத்தி ஒண்சாத்தன் சிலம்பு
எடுத்த தக்கோன் என புலவர் பலர் இருந்தனர். யாப்பிலாப் பாடலேனும் யார் தரும்
கவிதையேனும் மா பலா போல் மடியில் வாங்கி காப்பிலாத் தமிழர் நெஞ்சில் பதித்து விட்ட
பாண்டிய மன்னரின் பழந்தமிழ்க் குடிகள் நாங்கள்.
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என ஐவகை
நிலங்களை வகுத்து அறம் வளர்த்தவர் தமிழர். தென்மதுரையும் கபாட புரமும் கடல்கோளால்
அழிந்த பின்னும் வைகைக் கரையில் மூன்றாவது சங்கம் அமைத்த பெருமை எமக்கே உரியது.
விண்ணை முட்டும் பரங்குன்றமும் பசுமை போர்த்திய அழகர் மலையும் தெற்கும் வடக்குமாய்
அமைந்து மதுரையின் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.
எட்டேரு கட்டி இடத்தில் ஒரு யானை கட்டி
பத்தேரு கட்டி உழும் பாண்டியனார் சீமையிலே'
என்று உரைக்கிறது ஒரு நாட்டுப்புறப் பாடல். மதுரையில் ஆட்சி மீனாட்சி என்று
சொல்லும் அளவுக்கு சொக்கநாதருடன் குடிகொண்டு இருந்து மதுரை மாநகரின்
வடிவமைப்புக்கே காரணமாய் அமைந்திருக்கிறது மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில்.
மழைநீர் சேமிப்புக்கான தமிழரின் அறிவியல் கண்டுபிடிப்பு தான் அன்றைய
தெப்பக்குளங்கள் என்பதற்கு வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளமே ஒரு சாட்சி. மேலமடை
கீழ மடை என்று ஆங்காங்கே பெரும் கண்மாய்களை அமைத்து கழுந்துகள் மூலம் அவற்றைத்
திறந்து விட்டு விவசாயம் செய்தனர் மதுரை மக்கள். மதுரை மல்லிகைக்கு மட்டுமா மணம்
உண்டு அங்கே மாத் தமிழுக்கும் ஓர் இடம் உண்டு. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம்
குற்றமே என்று உரைத்த நக்கீரர் பிறந்த மண் இது.
ஏதன்ஸ் நகரத்தின் எழில் அமைப்புக்கும்
எகிப்தின் பழமைக்கும் கூடல் நகராம் மதுரை சளைத்தது அல்ல. வையை என்னும் பொய்யாக்
குலக்கொடி என்று வைகை நதியையும் தமிழையும் எங்கள் மண்ணையும் தனித்தே பிரிக்க
முடியாது என்பதற்கு அடையாளமாக தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின்
மதுரை என்றும் தமிழ்க்கெழு கூடல் என்றும் இலக்கியங்கள் குறிக்கின்றன.
மருத மரங்கள் மிகுந்து இருந்ததால் மருதை
என்றானதா?
கடம்பவனம் மிகுந்து இருந்ததால் கடம்பவனம் என்றானதா? ஆலவாயன் கைப் பாம்பு எல்லை வகுத்துக் கொடுத்ததால் ஆலவாய் என்றானதா? எத்தனை எத்தனை பெயர்கள் எங்கள் மதுரை மண்ணுக்கு. ஈரமும் வீரமும் எங்கள்
இனத்தின் அடையாளம். அலங்காநல்லூரும் பாலமேடும் சொல்லும் அதை இன்றைக்கும் உலகு
தோறும்.
அகிம்சை தந்த காந்தியே எங்கள் மண்ணை மிதித்த
பின் தான் மகாத்மா ஆனார் ஆம்! அரை நிர்வாணப் பக்கிரி என்று வின்ஸ்டன் சர்ச்சில்
இகழ்வதற்குக் காரணமாக இருந்த நிகழ்வு மதுரை மேல ரத வீதியில் தான் நடந்தது
என்பார்கள். நவநாகரீக உடைகளுடன் வலம்வந்த காந்தியை மண்ணின் மைந்தர் ஆக மாற்றிய
பெருமை மதுரைக்கே உரியது.
பதினாறாம் நூற்றாண்டு வரை பாண்டியர்களும்
பின்னர் சுல்தான்களாலும் நாயக்க மன்னர்களாலும் ஆளப் பெற்ற மாமதுரை பல மாண்புகளை
உடையது. முச்சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை என்பது மட்டுமல்ல நான்காம்
சங்கத்தையும் அமைத்த பெருமை வள்ளல் பாண்டித்துரை அவர்களால் மதுரைக்கே வாய்த்தது.
ஆனை மலையிலும் அரிட்டாபட்டியிலும் கீழக்கோயில்குடியிலும் சமணர் படுக்கைகள் அமைந்துள்ளன.
பல்வேறு சமயங்கள் சாதிகள் சங்கமிக்கும் எங்கள் ஊர் வேற்றுமையில் ஒற்றுமை காணும்
இந்தியத் திருநாட்டின் மரபுக்கு ஓர் எடுத்துக்காட்டு. சித்திரைத் திருவிழா என்னும்
முத்திரைத் திருவிழா சமத்துவத்தை இவ்வுலகுக்குச் சொல்லும்.
வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல்
காற்றுண்டு என்று பாடத் தோன்றும் எங்கள் மண்ணை மிதித்தால். ஓடிவரும் நீர் அழகும்
ஆடி வரும் தேரழகும் தூங்காநகரமாய் இன்னும் துடிப்புடன் 2,500 ஆண்டுகள் பழமை தாங்கி வீற்றிருக்கிறது எங்கள் மதுரை. கெட்டும் பட்டணம் போ!
என்று எங்கள் நகரை பார்த்தபின்தான் பழமொழி பிறந்திருக்கும் போல ஆம்! வந்தாரை
வாழவைக்கும் மாமதுரை. கோட்டை கொத்தளங்களோடு கொழுவீற்றிருந்த காலத்தும் மண்ணில்
மக்களாட்சி மலர்ந்து விட்ட காலத்தும் நாட்டை ஆளப்போவது யார் என்பதை மிகச் சரியாகக்
கணித்து அரியணை ஏற்றுவதில் எங்களுக்கு இணை யாருமில்லை!
நெஞ்சுரம் கொண்ட வீர மறவர்களை நேதாஜியின்
படைக்கு அள்ளித் தந்ததும் மதுரை தான்! வடக்கே இருந்து படையெடுப்பு வந்தபோதெல்லாம்
ஒன்றுகூடி எதிர்த்ததும் கூடல் நகர் தான்.. எளிமை கண்டு இரங்குவதும் தன்மானம்
தொட்டால் போர்ப்பரணி பாடுவதும் எங்கள் முன்னோர் எங்களுக்கு இட்ட விதை
ஊதி அணைத்து விட நாங்கள் ஒன்றும் அகல்
விளக்குகள் அல்ல சூறாவளிக்கும் அணையாத சூரிய விளக்குகள்! புயலுக்குத் தலைவணங்க
நாங்கள் ஒன்றும் புல் அல்ல எதற்கும் அஞ்சாத இமயமலைகள்!
தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கொரு
குணமுண்டு அமிழ்தம் அவனது மொழியாகும் அன்பே அவனது வழியாகும்
வாய்ப்புக்கு நன்றி வருகிறேன்! விடைபெறுகிறேன்!
-
கவிஞர் கல்லூரணி முத்துமுருகன்