அணி என்றால் அழகு என்று பொருள். ஒரு செய்யுளில் அமைந்திருக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணியாகும்.
செய்யுளை வாசிக்கும் அனுபவத்தை வசீகரப்படுத்துவதில் அணி முக்கியப் பங்கு வகிக்கிறது.
அணி இலக்கணத்தை விளக்கி படைக்கப்பட்ட தண்டியலங்காரம் எனும் இலக்கண நூலின் பொருளணியியலில் தமிழின் 35 வகையான அணிகள் விளக்கப்பட்டுள்ளன!
மனிதர்கள் ஏதேனும் ஆதாயம் வேண்டி ஒருவரைப் புகழ்வர். தமக்குப் பயனற்றவர்களை, பிடிக்காதவர்களை இகழ்வர். இவை பயன் கருதி செய்யப்படுபவை.
ஆனால் இலக்கியங்களில் சுவை கருதி புலவர்கள் ஒருவரைப் "புகழ்வது போல இகழ்வதும்", "இகழ்வது போல புகழ்வதும்" வஞ்சப்புகழ்ச்சி அணி என்று அழைக்கப்படுகிறது.
செய்யுளின் அழகு கருதியும், வாசிப்பை வசீகரமாக்கவும் வஞ்சப்புகழ்ச்சி அணி புலவர்களால் கையாளப்படுகிறது. வஞ்சப்புகழ்ச்சி அணிக்கு இலக்கியங்களிலிருந்து சில உதாரணங்களைப் பார்ப்போம்:
"இகழ்வது போலப் புகழ்தல்" :
1) வேள்பாரி வள்ளலின் கொடைத்திறத்தினை இகழ்வது போல இவ்வாறு புகழ்கிறார் கபிலர்.
"பாரி பாரி என்று பல ஏத்தி,
ஒருவற் புகழ்வர்,செந் நாப் புலவர்;
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே."
- புறநானூறு
பாரி வள்ளல்! பாரி வள்ளல்! அவன் ஒருவனே பெரிய வள்ளல்! அவனால்தான் உலக மக்கள் அனைவரும் காக்கப்படுகின்றனர் எனப் பலவாறு புலவர்கள் பாரி என்ற வள்ளலைப் புகழ்ந்து பாடுகிறார்கள். பாரி ஒருவனால் மட்டும்தான் இந்த உலகம் காக்கப்படுகிறதா என்ன? ஏன்? மழையும் கூட உலகினைக் காப்பாற்றுமே! எனப் பாரியை இகழ்வது போல புகழ்கிறார் கபிலர்.
பாரி மழைக்கு நிகரான கொடைத்தன்மை உடையவன் எனப் பாரியின் பெருமை வஞ்சப் புகழ்ச்சியாக இகழ்வதுபோல இப்பாடலில் புகழப்பட்டுள்ளது.
2) போரில் தொடர்ந்து வெற்றி பெற்று அதனால் கிடைத்த செல்வத்தை தனது மக்களுக்குப் பயன்படும்படி செய்த முதுகுடுமிப் பெருவழுதியின் பெருமையை இகழ்வது போல புகழ்கிறார் நெட்டிமையார்.
"பாணர் தாமரை மலையவும், புலவர்
பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்,
அறனோ மற்றஇது விறல்மாண் குடுமி!
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு,
இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே?"
- புறநானூறு
வெற்றிப் பெருமிதம் உடைய குடுமி அரசே!
வேற்று அரசருடைய நாட்டைப் போரிட்டு அவர்கள் வருந்தும்படி அபகரித்துக்கொண்டு, வேற்று நாட்டிலிருந்து பெற்ற செல்வத்தால் நீ உன் மக்களுக்கு அள்ளி வழங்குகிறாய். உன்னைப் பாடும் பாணர்கள் நீ பரிசிலாக வழங்கும் பொற்றாமரை விருது அணிகலனைத் தலையில் சூடிக்கொள்கின்றனர்.
புலவர்கள் நீ வழங்கும் யானைமீதும், தேர்மீதும் ஏறிச் செல்கின்றனர். பிறர் நாட்டைக் கைப்பற்றும் கொடுமையைச் செய்து அங்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு நீ விரும்புபவர்களுக்கு மட்டும் இன்பம் தரும் இத்தகைய செயல்களைச் செய்தல் அறச்செயலா? என்று கேட்கிறார் நெட்டிமையார்.
பகைவர் நாட்டைக் கவர்ந்து பொருள்களைக் கைப்பற்றுதலும், தன் மக்களுக்கு வேண்டியதை அளிப்பதும் மன்னனின் கடமை என்பதால் இப்பாடலில் இகழ்ந்து கூறுவது போல புகழப்பட்டுள்ளான் முதுகுடுமிப் பெருவழுதி!
3) கவி காளமேகம் தனிப்பட்ட ஒரு நபரின் நடவடிக்கைகளை இகழ்ந்து கூறுவதுபோல மனிதப் படைப்பினைப் புகழ்ந்து கூறும் இரட்டுற மொழியும் பாடல் இது.
"முன்னே கடிவாளம், மூன்று பேர் தொட்டு இழுக்கப்
பின்னே இருந்து இரண்டு பேர் தள்ள – எந்நேரம்
வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை
மாதம் போம் காத வழி!"
விகடராமன் என்பவன் ஒரு நோஞ்சான் குதிரையையும் உதவிக்குச் சில வேலைக்காரர்களையும் வைத்துக்கொண்டு ஊர் முழுக்க அலட்டல் உலா வருகிறார். அதைப் பார்த்த காளமேகம் கிண்டலாகப் பாடிய பாடல் இது.
எந்நேரமும் வேதம் படிக்கிறவன் விகடராமன். அவனுடைய குதிரைக்கு முன்னே கடிவாளம் உண்டு. ஆனால் அதைத் தொட்டு இழுத்து ஓட்டுவதற்கு ஒருவர் போதாது! மூன்று பேர் வேண்டும். அப்போதும் அந்தக் குதிரை ஓடாது. பின்னால் நின்றபடி இரண்டு பேர் குதிரையைத் தள்ளவேண்டும். இப்படி ஐந்து பேரால் ஓட்டப்படும் அந்தக் குதிரை மிக வேகமாக ஓடும். மாதம் ஒன்றுக்குக் காத தூரம் சென்றுவிடும் என்று இதன் பொருளை வெளிப்படையாகப் பார்த்தால் ஒரு நபரின் அலட்டல் செய்கையை இகழ்ந்து கூறுவது போன்று உள்ளது.
ஆனால் இதன் உண்மையான பொருளை நோக்கின், இறைவன் எனக்கு ஒரு உடம்பைத் தந்தான். அந்த உடம்பு எனும் குதிரையில் என் உயிர் அமர்ந்து கொண்டது. காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று பேர் இழுத்தனர்.
இன்பம், துன்பம் என்னும் இரண்டு பேர் பின்னே இருந்து தள்ளினர். அது சண்டிக் குதிரை என இறைவனின் படைப்பைப் புகழ்வதாய் உள்ளது இப்பாடல்.
"புகழ்வது போல இகழ்தல்: "
4) அறிவற்றவர்கள் கொள்ளும் நட்பு குறித்த இந்தத் திருக்குறள் அறிவற்றவர் நட்பைப் புகழ்வது போல இகழ்கிறது.
"பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்."
அறிவற்றவர்கள் தமக்குள் கொண்ட நட்பில் பிரிவு வந்தால், அவர்களுக்குத் துன்பம் எதுவும் ஏற்படாது. எனவே அவர்கள் கொண்ட நட்பு அவ்வளவு இனிமையானது! என்கிறார் வள்ளுவர்.
5) தொண்டை நாட்டை ஆட்சி புரிந்த தொண்டைமான் எனும் அரசன், அதியமான் நெடுமான் அஞ்சி மீது பகை கொண்டான். தன்னிடம் படைவலிமை அதிகமாக இருப்பதாக எண்ணி தொண்டைமான் மிகவும் கர்வம் அடைந்திருந்தான்.
தொண்டைமானின் செருக்கை அறிந்த அதியமான், தன் படை வலிமையையும், தன்னுடன் போர்புரிந்தால் தொண்டைமான் தோல்வி அடைவது உறுதி என்பதையும் அவனுக்கு அறிவுறுத்துமாறு ஒளவையாரைத் தன் தூதுவராகத் தொண்டைமானிடம் அனுப்பினான்.
தூதின் பொருட்டு ஒளவையார் தொண்டைமானைக் காணச் சென்றார். தன் படைவலிமையை எண்ணிக் கர்வத்தோடு இருந்த தொண்டைமான், ஒளவையாரைத் தன் படைக்கலக் கொட்டிலுக்கு அழைத்துச் சென்று, தன் படைக்கருவிகளைப் பெருமையுடன் காட்டினான். அதைப் பார்த்த ஒளவையார், தொண்டைமானின் படைக்கருவிகளைப் புகழ்ந்தும், அதியமானின் படைக்கருவிகளை இகழ்ந்தும் கூறுவது போல இப்பாடல் அமைந்துள்ளது.
பகை அரசனைப் புகழ்வது போல இகழ்கிறார் ஒளவையார்.
"இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியன்நக ரவ்வே: அவ்வே,
பகைவர்க் குத்திக், கோடுநுதி சிதைந்து,
கொல்துறைக் குற்றில மாதோ "
- புறநானூறு
இங்கு உன் போர்ப்படைக் கருவிகள் பாதுகாப்பாகப் படைக்கொட்டிலில் மயிலிறகு அணிவிக்கப்பட்டு, மாலை சூட்டப்பட்டு, கூர்முனை திருத்தம் செய்யப்பட்டு, அதில் துருப் பிடிக்காமல் இருக்க நெய் பூசப்பட்டு அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
அங்கு என் தலைவன் பயன்படுத்திய வேல்கள் பகைவரைக் குத்தியதால் நுனி ஒடிந்தும், மழுங்கியும் சிதைந்து, பழுது சரிசெய்வதற்காகக் கொல்லன் உலைக்களத்தில் கிடக்கின்றன.
உன்னிடம் படை இருக்கிறது ஆனால் வீரர்களுக்குப் பயிற்சி இல்லை. என் தலைவனிடம் பயிற்சி பெற்ற வீரர்கள் மிக அதிகம். எனவே போர் நடந்தால் நீ தோற்றுப் போவாய் எனப் பகை அரசனைப் புகழ்வதுபோல இகழ்கிறார் ஒளவையார்.