கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, May 23, 2022

வாழைமரம் கவிதை BANANA TREE KAVITHAI

 வாழை மரம்


கிளைகள் இல்லா வாழை இது 

கிளை வாழ வாழ்த்தும் 

மலை வாழை கல்வி என 

மழலையரை அழைக்கும் 

தலைவாழை இலை போட்டு

விருந்துக்கு அழைக்கும்

குலைகுலையாய்க்  காய்காய்த்து 

விவசாயம் வளர்க்கும் 

முக்கனிகளுள் மூன்றாம் கனி

வாழைக்கனி தானே

முதியோர் முதல் குழந்தை வரை 

விரும்பும் கனி நானே 

பக்குவமாய்ச் சமைப்பதற்கு 

வாழைக்காயும் தருவேன் 

பைங்குழலார் பூத் தொடுக்க 

வாழைநாராய் வருவேன் 


பூவன் பேயன் ரஸ்தாலி 

கற்பூரவள்ளி 

பச்சை நாடு நேந்திரம் 

செவ்வாழையோடு 

இச்சை தீரத் தின்று தீர்க்க

எத்தனை வகை உண்டு 

நச்சரவம் தீண்டினாலும் 

எண்ணில் மருந்துண்டு 


பூவோடு சேர்ந்த தாலே 

எனக்கும் மணம் உண்டு 

(என்) பூவைச் சமைத்துச் சாப்பிட்டாலே 

சுவை அதிகம் உண்டு 

நாவோடு நீர் ஊறும் 

நல்ல பழங்கள் தருவேன் 

நான்மாடக்கூடலுக்கு

நள்ளிரவில் வருவேன் 


கட்டுக்கட்டாய்க் கரும்பு தனைக் 

கட்டிடவே உதவும் 

தட்டுத் தட்டாய்ச் சீர்வரிசைத் 

தாம்பாளத்தில் விளங்கும் 

மெட்டுக் கட்டிப் பாடி ஆடி 

கோயில் குளம் வணங்கும் 

(பரி)வட்டம் கட்டி முதல் மாலை 

கொண்டவர் கை நிறைக்கும் 


கட்டுச் சாதம் பழங்களோடு 

தேங்காய் கொண்டு செல்வீர் 

மொட்டை போட்டுப் பழனியிலே 

பஞ்சாமிர்தமாய் உண்பீர் 

மாட்டு வண்டி ஓடும் அளவு

விட்டு எமை நட்டீர்  

தட்டிப் பறிக்கத் தேவையில்லை 

தன்னாலே குலை தருவேன் 


வெண்மை பசுமை மஞ்சள் கருப்பு 

இளஞ்சிவப்பு என்று 

(மருத) மண்ணில் விளைந்த என்னுள் தானே 

எத்தனை நிறமுண்டு 

வெண்ணை திருடித் தின்ற அந்தக் 

கண்ணன் கையில் இருப்பேன் 

மண்ணையள்ளிச் சுமந்த நீல

கண்டன் கையிலும் இருப்பேன் 

மாரி அல்லது காரியம் இல்லை 

என்பது பழமொழி தான் 

வாழையல்லது மங்கலமில்லை 

என்பது புதுமொழி தான் 

வாரி வாரிக் கொடுக்கும் போது 

வள்ளல் என்பது பெயராம் 

வேலை முடிந்து விட்ட பிறகு 

(தெரு)ஓரம் கிடக்கும் உயிராம் 


பார வண்டி இழுக்கும் மாடு 

பழுதடைந்தால் வீடு 

பாரில் எனக்கும் அதே கதி 

(என்) பழுத்த தோலும் வீதி

- கவிஞர் கல்லூரணி முத்துமுருகன்.

தமிழ்த்துகள்

Blog Archive