ஆண்டாள் தமிழகத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர்.
வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார்.
ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார்.
வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை நமக்கு எடுத்துரைக்கிறது.
மேலும், ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.
மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர்
என்னும் ஊரில் வசித்துவந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர் ஒருவரால் ஒரு குழந்தையாகத் துளசிச் செடியின் கீழ் கிடந்தபோது, ஆண்டாள் கண்டெடுக்கப்பட்டாள்.
இவர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சமேத அரங்கநாதர் கோவிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர்.
தனக்கெனக் குடும்பம் எதுவும் இல்லாதிருந்த நிலையிலும், கண்டெடுத்த குழந்தையைத் தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார்.
ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வார் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை என்பதாகும்.
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மலர் மாலைகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி பெருமாளுக்குச் சார்த்துவதற்காக வருடந்தோறும் அனுப்பப்படுகிறது.
இவ் வைபவம், தமிழ் மாதமான புரட்டாசியில், திருப்பதி பிரம்மோற்சவம் விழாவில், குறிப்பாகக் கருட சேவை அன்று நடைபெறுகிறது.
ஆண்டாள் சூடிய மலர் மாலையைப் பெருமாள் சூடிக்கொண்டு பவனி வருகிறார்.
இந்த மலர்மாலை, துளசி, செவ்வந்தி மற்றும் சம்பங்கி பூக்களால் தொடுக்கப்பட்டதாக உள்ளது.
மதுரையில் நடைபெறும் பிரசித்தமான சித்திரைத் திருவிழாவின் போது, ஆண்டாளின் மலர்மாலை கள்ளழகருக்கு அணிவிப்பதற்காகத் திருவில்லிப்புத்தூரிலிருந்து கொண்டு செல்லப்படுகிறது.