சீத்தலைச் சாத்தனார் என்பவர் சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்களில் ஒருவர் ஆவார்.
மணிமேகலை என்னும் காப்பியத்தைப் படைத்தவர்.
இவர் மதுரையில் வாழ்ந்தவர் என்றும் தானிய வணிகம் செய்தவர் என்றும் இலக்கியத் தகவல்கள் கிடைக்கின்றன.
திருச்சியைச் சார்ந்த சீத்தலை என்ற ஊரில் பிறந்தவராக இருந்திருக்கக் கூடும்.
புத்த சமயக் கொள்கையைக் கொண்டிருந்த 'சாது' (சாத்து) என்பதாலோ 'சாத்து' என்கிற வணிக தலைவராக இருந்ததாலோ சாத்தன் என அழைக்கப்பட்டிருக்கிறார்.
சீத்தலைச் சாத்தன் என்கிற பெயரிலேயே மேலும் ஒரு சில புலவர்கள் இருந்ததனால் அவர்களிலிருந்து அடையாளம் பிரித்துக் காட்டுவதற்காக இவர் 'மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தன்' என அழைக்கப்படுகிறார்.
இவர் பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர்.
இவர் இயற்றிய மணிமேகலை என்னும் காப்பியம் புத்த சமயக் கொள்கைப் பரப்பு நூலாகும்.
புத்த மதக் கருத்துகளை ஆழ்ந்த அனுபவ முறையில் மிக விரிவாக மணிமேகலையில் இவர் கூறியுள்ளார்.
சிலப்பதிகாரம் இயற்றிய சமணத் துறவி இளங்கோவடிகள் மணிமேகலை இயற்றிய சீத்தலைச் சாத்தனாரின் மிக நெருங்கிய நண்பராக இருந்ததாக அறியப்படுகிறது.
சீத்தலைச் சாத்தனார் 'நன்னூற் புலவன்', 'தண்டமிழ் ஆசான், சாத்தன்' என்று இளங்கோவடிகளால் போற்றப்படுகிறார்.