போதைப் பொருள் ஒழிப்போம்! மனித மாண்பைக் காப்போம்!
ஆறறிவதுவே அவற்றொடு மனனே என்கிறது தொல்காப்பியம். ஆறாம் அறிவான சிந்தனையைத் தடுமாற வைப்பன போதைப் பொருள்கள். ஜூன் 26 ஆம் நாளை உலகப் போதைப் பொருள் நாளாக மட்டுமல்ல, இதனால் சித்திரவதைக்கு ஆளானோர் சர்வதேச ஆதரவு தினமாகவும் அதாவது வேர்ல்ட் ஆன்ட்டி டிரக்ஸ் டே நாம் கடை பிடித்து வருகிறோம். போதைப் பொருள்களைத் தயாரித்தல், பயன்படுத்துதல், கடத்தல், விற்பனை செய்தல், பதுக்குதல் என அனைத்திற்கும் தண்டனை உண்டு என்கிறது இந்திய போதைப்பொருள் தடுப்புச் சட்டம் 1985 பிஞ்சு வயதில் நஞ்சை விதைப்பதாக போதை சாக்லேட், பான் மசாலா, புகையிலை பைகள், குட்கா மற்றும் கஞ்சாவின் போதை மாத்திரைகள் போதை ஊசிகள் என அத்தனையும் அணிவகுத்துக் கிடக்கின்றன. இருப்பது ஓர் உயிர் தான் அது போகப் போவதும் ஒருமுறைதான் அவ்வுயிர் இந்நாட்டிற்காகப் போவதில் பெருமை கொள்கிறேன் என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். வாகன விபத்துகள் கணவன் மனைவி உறவில் விரிசல் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் என எல்லாவற்றிற்கும் தூண்டுதலாக போதை அரக்கன் அமைந்துள்ளது. அறிவுரை கூறி அற வழி நடக்கச் சொல்லும் பெற்றோரும் உறவினரும் சுற்றமும் இப்பழக்கத்திற்கு ஆளாகி இருந்தால் பள்ளி மாணவர்கள் அவர்களைப் பார்த்துக் கெட்டுப்போக அதிக வாய்ப்புகள் உள்ளன. அதிலும் சிலர் மாணவர்களை விட்டே போதைப் பொருள்களை வாங்கி வரச் சொல்வது முற்றிலும் ஆபத்தானது. ஐந்தறிவு உயிரினம் ஆக்கி நம்மை அலைய விடுவது போதைப் பொருள்கள்.
உண்ணற்க கள்ளை உண்ணில் உண்க
சான்றோரானல் எண்ணப் பட வேண்டாதார் என்கிறார் வள்ளுவர். அவையில் நிற்க முடியாமல், தன் கருத்துகளை வெளிப்படுத்த வழி இன்றி சிந்தனைகெட்டுத் திரிந்தால் விலங்கினும் கேடுடையவன் தானே மனிதன்?. ஏன் இந்த இழிநிலை? மனிதராய்ப் பிறந்த எவரும் தன் அடையாளத்தைப் பதிவு செய்து விட்டுச் செல்ல வேண்டும். நம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 47 மருத்துவ உபயோகம் தவிர பிற பயன்பாட்டுக்கு ஆக்சி கோடின் விகோடின் போன்ற மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளது உலக அரங்கில் போதைப் பொருள் கடத்துவது ஒரு பெரும் வணிகமாக இயங்கி வருகிறது கள்ளு, சாராயம், கசிப்பு என்ற நிலை கடந்து அபின், கஞ்சா மாறி போதை ஊசியும் கடந்து பெவி பாண்டை நீரில் கலந்து குடிக்கும் அளவுக்கு இளைஞர் கூட்டம் வந்துவிட்டது. அதிலும். நகர்ப்புற இளைஞர்கள் போதையின் பிடியில் சிக்கித் தவிக்கும் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இந்தியாவின் பெரும் சொத்தான இளைஞர் கூட்டம் இப்படிச் சீரழிவதை ஒருபோதும் நாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது. 12 கோடி இந்தியர்கள் புகைப்பழக்கம் உடையவராய் இருக்கின்றனர். சுகாதாரத் துறையும் பள்ளிக்கல்வித்துறையும் இணைந்து போதைப்பொருள் தடுக்க விழிப்புணர்வுக் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தி வருகின்றன. இந்திய மனித வள மேம்பாட்டு துறை பல்வேறு நடவடிக்கைகளை போதைப்பொருள் ஒழிப்பதற்காக எடுத்து வருகிறது. ஒரு கிலோ ஹெராயின் மூன்று மில்லியன் ரூபாய் விலை ஆகிறதாம்! இரும்புக்கரம் கொண்டு அரசு போதைப்பொருள் நடமாட்டத்தை அடக்கி வருகிறது இருந்தாலும் தனி மனித ஒழுக்கம் இல்லை என்றால் நாம் போதைப் பொருளைத் தடுக்க முடியாது.
தேடிச் சோறு நிதந் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்பம் மிக உழன்று பிறர் வாடச் செயல்கள் பல செய்து நரை கூடிக் கிழப்பருவம் எய்திக் கொடுங் கூற்றுக்கு இறையான பின் மாயும் வேடிக்கை மனிதரைப் போலே நானும்
வீழ்வேன் என்று நினைத்தாயோ? என்ற பாரதியின் சிந்தனையை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். சிந்தனையை அழித்து மக்களை மாக்களாக்கும் போதைப்பொருள் பயன்பாட்டில் இருந்து மாணவர்களைக் காப்போம்! அவர்களை வல்லரசு இந்தியாவின் தூண்களாக நிறுத்துவோம்!
மு.முத்துமுருகன். தமிழாசிரியர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ம. ரெட்டியபட்டி