கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, August 11, 2022

போதையின் பாதை தவிர்! கல்விச்சாலையில் நிமிர்! தமிழ்க் கட்டுரை பேச்சு drugs abuse tamil essay speech

போதையின் பாதை தவிர்! கல்விச்சாலையில் நிமிர்!

இன்று ஏடு தூக்கும் சிறுவர்களே நாளைய நாடு காக்கும் தலைவர்கள் இன்று நாம் தலைகுனிந்து படித்தால் நாளை தலை நிமிர்ந்து நடக்கலாம். உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்கிறார் திருமூலர்.

காயமே இது பொய்யடா வெறும்

காற்றடைத்த பையடா என்று நம் சித்தர்கள் கூறிச் சென்றாலும் உயிர் உள்ளவரை இந்த உடம்பு பாயினிற் படுத்து நோயினில் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 ஆம் நாளை உலக போதைப்பொருள் ஒழிப்பு நாளாகக் கடைப்பிடித்து வருகிறோம். 1985 இல் இந்திய போதைப் பொருள் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. போதைப் பொருள்கள் தயாரித்தல் பதுக்குதல், கடத்தல், விற்பனை செய்தல், பயன்படுத்துதல் என ஒவ்வொரு நிலையிலும் தண்டனை வழங்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.

விளையாட்டாகத் தொடங்கும் போதைப் பழக்கம் உயிருக்கே வினையாகி முடிந்து விடுகிறது. படிக்கும் வயதில் படிக்காமல் உழைக்கும் வயதில் உழைக்காமல் தெருவில் கிடந்து உருளும் போதை ஆள்களால் இப்புவிக்கு என்ன பயன்? பாரமே அவர்களால். இப்புவிக்கு போதை ஒழிப்பிற்காக அமெரிக்கா 2005இல் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ட்ரக் அப்யூஸ் மானிட்டரின் பியூச்சர் என்ற அமைப்பைத் தொடங்கிவிட்டது. நம் நாட்டில் மட்டுமல்ல உலக அளவிலும் பிற குற்றச்செயல்களுக்கு அடிப்படையாக அமைவது போதைப்பொருள் பயன்பாடே! ஹெராயின், அபின், கொகைன், மர்ஜுவானா, ஹசிஸ், எம்டிஎம்கே. கார்ஸஸ், மேலிட்ரோன் என எத்தனை எத்தனை வகை போதைப் பொருள்கள் இவ்வுலகில் கிடைக்கின்றன தெரியுமா?

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்று வள்ளுவன் கூறிய பின்பு மதி இழக்கச் செய்யும் போதைப் பழக்கத்திற்கு நாம் ஆட்படலாமா? கூடவே கூடாது. இரண்டு கிராம் ஹெராயினைப் பயன்படுத்தி 500 பேர் போதை ஏற்றிக்கொள்ள முடியுமாம். எனில், எத்தனை ஆபத்தானது இது? ஓவியம்,விளையாட்டு, பாடல், ஆடல் என நம்முள் விளையும் தனித்திறமைகளைக் கண்டுபிடித்து அதில் பயிற்சி பெற்று புகழ் பெற வேண்டிய காலம் இது. 12 வயது முதல் 25 வயது வரை உள்ள மாணவர் இடையே அதிகரித்து வரும் பான் மசாலா, குட்கா. போதை சாக்லேட் பயன்பாடு அதிர்ச்சி தரத்தக்கது ஆகும்.

ஒளி படைத்த கண்ணினாய் வா வா என்று பாரதியார் அழைத்த கூட்டம் இளைஞர் கூட்டம். ஒளிமயமான பாரதத்தை உருவாக்குபவரின் கண்கள் ஒளி இழந்து கிடக்கலாமா?

இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்

கெடுப்பாரிலானும் கெடும் அன்றோ?. சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது. உடல் தகுதி இல்லாமல் அறிவை வளர்க்க இயலாது. தனிமனித ஒழுக்கம் பேணுவதில் தலையாயது போதைக்கு அடிமை ஆகாமையே. இளைஞர்கள் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை. தனி மரம் தோப்பாகாது ஒரு கை தட்டினால் ஓசை வராது! இனி ஒரு விதி செய்வோம் அதை எந்நாளும் காப்போம்! போதையில்லா பாரதத்தை உருவாக்குவோம்! அதன் குடிமக்களாக நாம் வெற்றி நடை போடுவோம்!

மு. முத்து முருகன் தமிழ் ஆசிரியர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ம.ரெட்டியபட்டி.

தமிழ்த்துகள்

Blog Archive