போதைப் பொருள்களைத் தவிர்ப்போம்! வளமான எதிர்காலம் அமைப்போம்!
வாலில்லா மந்திகளாய் வானரங்களுடன் திரிந்த மனித இனம் இன்று உலகத்தையே உள்ளங்கையில் உருட்டி விளையாண்டு கொண்டிருக்கிறது. சூரியக் குடும்பத்தின் கோள்களில் உயிர்க்கோளமாம் பூமி தனக்கே உரித்தென்று மனிதன் கொண்டாடிக் கொண்டிருக்கிறான். அதே வேளையில் அறிவிழக்கும் போதைப் பழக்கம் அவனை மீண்டும் மிருக நிலைக்குத் தள்ளி வருகிறது. சோம பானம் சுராபானம் என்று என் முன்னோர் பயன்படுத்தினரே! என்று தனக்குத்தானே சமாதானம் செய்வதும் அவன் வழக்கமாகிவிட்டது.
நாட்டின் நாளைய எதிர்காலம் இன்றைய வகுப்பறையில் அல்லவா தீர்மானிக்கப்படுகிறது?. இளம் குருத்துகள் போதை வழிச் சென்று பாதை மாறுவதால் சமுதாயத்தின் அடித்தளமே ஆட்டம் கண்டு விடும் அல்லவா?
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண்பவர் என்கிறார் வள்ளுவர். பற்களைக் கெடுக்கும் பாக்குகள், குட்கா. பான் மசாலா புகையிலைப் பயன்பாடு புற்றுநோய் தரும். மதி மயக்கி வீதியில் தள்ளும் கஞ்சா, அபின் கோகின் என்று இளம் வயதிலேயே அறிந்து கொண்டால் நாம் போதைப் பொருள்களைத் தொடவே மாட்டோம். சிறு மூளையைத் தாக்கி சிந்தனை கெடுத்து அறிவிழக்கச் செய்யும் ஆல்கஹாலை எந்த வடிவத்திலும் நாம் உடலுக்குள் அனுமதிக்கக் கூடாது.
முகநக நட்பது நட்பன்று என்பதை உணர்ந்து தீய நண்பர்களை நாம் ஒதுக்கி விட வேண்டும். ஒரு குடம் பாலைக் கெடுக்க, ஒரு துளி நஞ்சு போதுமே நம் கதை முடிக்க. போதை மாத்திரைகள், போதை ஊசிகள் என நவ நாகரிக காலத்தில் காலனும் வடிவங்கள் வேறாய் மாறி வந்து நம்மை வா என்று கைநீட்டி அழைப்பான். நாம் போதைப் பொருளைக் கை பிடித்தால் அது நம் கைப்பற்றிக் கொண்டு விடவே விடாது! 1985 இல் இந்திய போதைப் பொருள் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. சட்டப்பிரிவு 31 ஏ மரண தண்டனை வரை கொடுக்க வழிவகை செய்கிறது .
1989, 2001 மற்றும் 2014இல் இயற்றப்பட்ட உறுதிச் சட்டங்கள் மூலம் இந்தியாவில் போதைப் பொருள் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. படிப்பைக் கெடுத்து தன்னம்பிக்கை தளர்த்தி சோம்பலைத் தருவது போதை வாழ்வு. அது மட்டுமா? சமுதாய மதிப்பிழந்து வேலை இழந்து நட்பு இழந்து வாழ்வது ஒரு வாழ்வாகுமா?
40 வினாடிக்கு ஒருவர் உலகில் புற்றுநோயால் இறக்கிறாராம். 1950 முதல் 60 ஆம் ஆண்டு வரை 19.5 விழுக்காடாக இருந்த போதைப் பழக்கம். 1981 முதல் 86 வரை மக்கள் தொகையில் பாதிக்கு மேல் என்ற புள்ளி விவரம் கூறிப் பதற வைக்கிறது அரசு. தவறு என்பது தவறிச் செய்வது தப்பு என்பது தெரிந்தே செய்வது. தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும். தப்பு செய்தவன் வருந்தியே ஆகணும் நமக்கு நாமே கொள்ளி வைத்துக் கொள்ளும் போதைப் பழக்கத்தை விட்டொழிப்போம்! நம் தனித் திறமைகளை அடையாளம் கண்டு வளர்த்து இத் தரணியில் சிறந்த மனிதனாய் வாழ்ந்திடுவோம்!
மு. முத்து முருகன் தமிழாசிரியர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி.ம.ரெட்டியபட்டி