எண்களை எழுத்தால் எழுதுகையில் சிலர்க்குக் குழப்பம் ஏற்படும். அதிலும் குறிப்பாக 90 என்ற எண்ணை எழுதுகையில் பலரும் தவறாகவே எழுதுகிறார்கள்.
தொன்னூறு என்று எழுதிவிடுகிறார்கள்.
தொன்னூறு என்பது பிழை. தொண்ணூறு என்பதே சரி.
இந்த ஐயத்தை முழுமையாய்த் தீர்க்க வேண்டுமென்றால் தொன்னூறு என்பதன் பொருளை அறியவேண்டும்.
தொண்ணூறு என்பதற்கும் ஒரு பொருள் இருக்குமன்றோ ? அதனையும் அறிய வேண்டும்.
அவ்வாறு ஐயந்திரிபற அறிந்துவிட்டால் எழுதுவதில் பிழையே ஏற்படாது.
தொன்னூறு என்பதைப் பிரித்தால் என்ன கிடைக்கும்?
தொல் + நூறு என்று கிடைக்கும்.
தொல் என்பதற்குப் ‘பழைமையான’ என்று பொருள். பழைய பொருளைத் தொல்பொருள் என்கிறோம்.
வரலாற்றுப் பழைமை மிக்க இடங்களைத் தொல்லிடம் என்கிறோம்.
ல் என்று முடியும் ஒரு சொல் புணர்ச்சியின்போது ன் என்று மாறும். இரண்டாம் சொல் மகர அல்லது நகர எழுத்தில் தொடங்க வேண்டும்.
முதல் + முதலாக = முதன்முதலாக
சொல் + நலம் = சொன்னலம்
இங்கே புணர்ச்சியில் வருமொழி மகர அல்லது நகர எழுத்தாக இருக்கையில் ல் என்ற மெய் ன் ஆகிவிட்டது. அதன்படி தொன்னூறு என்ற சொல் தொல் + நூறு ஆகிய இரு சொற்களின் சேர்க்கை. பழைய நூறு என்ற பொருளைத்தான் தரும். ஆகவே 90 என்ற எண்ணைத் தொன்னூறு என்று எழுதுவது பிழை.
அப்படியானால் தொண்ணூறு என்று ஏன் வரவேண்டும் ?
தொண்ணூறு என்னும் சொல் தொள் + நூறு என்று பிரியும். ள் என்ற மெய்யெழுத்து புணர்ச்சியின்போது ண் என்று மாறும். வருமொழி மகர, நகர எழுத்தில் தொடங்கினால் இது கட்டாயம்.
அருள் + மொழி = அருண்மொழி
வெள் + மை = வெண்மை
மருள் + நீக்கீயார் = மருணீக்கியார்
ஆகவே தொள் + நூறு என்பதுதான் தொண்ணூறு.
தொள்ளாயிரம் என்று சொல்கிறோம். அதில் தொள் + ஆயிரம் ஆகிய சொற்கள்தாம் உள்ளன.
தொண்ணூற்றிலும் தொள் + நூறு ஆகிய சொற்களே இருக்க வேண்டும்.
தொண்ணூறு என்பதன் பொருள் என்ன?
தொள்ளு என்று ஒரு வினைவேர் இருக்கிறது. தொள்ளுதல் என்றால் வலிமை குன்றி நெகிழ்தல். தளர்ந்து நெகிழ்தல்.
அணியும் ஆடை இறுக்கமின்றி நெகிழ்வாக இருந்தால் எப்படிச் சொல்கிறோம்?
“தொளதொளன்னு இருக்குது” என்கிறோம்.
அந்தத் ‘தொள’ என்னும் சொல்தான் தொண்ணூற்றிலும் தொள்ளாயிரத்திலும் இருக்கிறது.
தொண்ணூறு என்று ஒன்பது பத்துகளைச் சொல்கிறோம்.
பத்தின் தன்மை வலிமையிழந்து நெகிழ்கிறது.
நூற்றினை அடையப்போகிறது. அதனால்தான் தொண்ணூறு என்கிறோம்.
தொள்கின்ற நூறு.
நூற்றின் தன்மை வலிமையிழந்து ஆயிரத்தை அடையும் இடத்தைத் தொள்ளாயிரம் என்கிறோம்.
தொண்ணூறு என்பதன் பொருள் இப்போது விளங்குகிறதா ? இனிமேல் மறவாமல் தொண்ணூறு என்றே எழுதுங்கள்.