கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, March 24, 2021

கருப்பங்கழி - தெனாலிராமன் கதை thenaliraman tamil story

விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் தெனாலிராமனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதைப் பார்த்த மற்ற அரசவையினருக்கு தெனாலி மீது பொறாமை ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி, “அரசே! எங்களிடம் என்ன குறை? நீங்கள் ஏன் எங்களை விடத் தெனாலிக்கு அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள்?'' என்று கேட்டனர். இதற்கு பதில் அரசரின் சிரிப்புதான்.

ஒருநாள், தெனாலி விடுப்பில் சென்றிருந்தார். அரசர், அமைச்சர், சேனாதிபதி முதலானோர் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றனர். பேசிக் கொண்டே ஒரு கிராமத்தை அடைந்தனர். ஓரிடத்தில் விவசாயிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தார் அரசர். அவர்களிடம் சென்று, “நாங்கள் வெளிநாட்டினர், உங்களை இந்நாட்டு அரசர் சரியாகக் கவனித்துக் கொள்கிறாரா?'' என்றார்.

உடனே அனைவரும் அரசரைப் புகழ்ந்தனர். பிறகு அரசர் ஒரு முதிய விவசாயியிடம் அதே கேள்வியைக் கேட்டார். உடனே அவர் சட்டென்று அங்கிருந்து எழுந்து எங்கோ போய்விட்டுப் பிறகு திரும்பி வந்தார்.
அவர் கையில் ஒரு கருப்பங்கழி! வந்ததும் அதை அவர் இரு கையாலும் உடைத்தவாறு, “சகோதரா! எங்கள் அரசர் இதைப் போன்றவர்'' என்றார். அவரது பதில் அரசருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அமைச்சரைத் திரும்பிப் பார்த்தார்.

அமைச்சரோ “அரசே! அவர் உங்களை அவமானப் படுத்துகிறார். அவர், "எங்கள் அரசர் பலவீனமானவர்; எவரும் அவரை எளிதில் வீழ்த்தி விடலாம் என்பதைக் குறிக்கக் கரும்பை ஒடித்துக் காட்டினார்'' என்றார்.

 

இதைக்கேட்டதும், அரசருக்கு ஆத்திரம் வந்தது. அவர் ஏதோ கூற வந்தார்.

அப்போது பின்னாலிருந்து தலைப்பாகை கட்டிய ஒருவர் எழுந்து, “கோபப்படாதீர்கள் தயாநிதியே! இப்போது கிழவர் கரும்பை உடைத்து, அரசர் கரும்பு போல் மேலிருந்து கசப்பும், இடையில் இனிப்பும் உடையவர் என்பதை உணர்த்தத்தான் இப்படி செய்தார்'' என்று கூறிக் கொண்டே தனது பொய்த் தாடியை எடுத்தார். அது வேறு யாருமல்ல! தெனாலிராமன்தான்.

“அரசே! என்னைக் கண்டு பிடிக்க முடியாவிட்டாலும், நான் உங்களது பணியாள். என்னால் உங்களை விட்டு எப்படி இருக்க முடியும்?'' என்றார். அதைக் கண்ட அரசர் சிரித்துவிட்டார். தெனாலியை வாரி அணைத்துக்கொண்டு, “நான் உன்னிடம் பிரியம் வைத்திருப்பதற்குக் காரணமே இதுதான்'' என்று புகழ்ந்தார்.

கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர், ராஜகுரு மற்றும் சேனாதிபதிக்கு அவமானமாகப் போய்விட்டது. அதன்பிறகு அரசவையில் தெனாலியின் மதிப்பு மேலும் அதிகரித்து விட்டது.

தமிழ்த்துகள்

Blog Archive