ஒரு கிராமத்தின் தேநீர் கடையின் வழியாக ஒரு சிறுவன் சென்று கொண்டிருந்தான். அப்போது ஒரு பெரியவர் அந்த சிறுவனை அழைத்து “தங்கம் உயர்ந்ததா – வெள்ளி உயர்ந்ததா? – என்று கேட்டார்.
சிறுவன் “வெள்ளி தான்” என்று சொல்ல – “இந்தா பிடி என்று சொல்லி பத்து ரூபாய் கொடுத்தார். சிறுவன் சென்றதும் “இவன் முட்டாள் என்று ஒத்துக்கொள்கிறீர்களா? என்று கூட்டத்தில் கேட்க – எல்லோரும் ஆமாம் என்று ஆமோதித்தார்கள்.
இந்த சம்பவம் ஒரு தொடர் நிகழ்ச்சியாக தினமும் நடந்து வந்தது.
சில நாட்களாக இதை வேடிக்கை பார்த்து வந்த ஒருவன், ஒரு நாள் அந்த சிறுவனை அழைத்து “தினமும் இவரிடத்தில் அவமானப்படுகிறாய். இதை ஏன் நீ உணர்வதில்லை. நிஜமாகவே நீ முட்டாள் தான்” – என்று சொல்ல – அந்த சிறுவன் இப்படி சொன்னான்.
“ஐயா! அந்த பெரியவருக்கு தான் மிகவும் புத்திசாலி என்று ஒரு இறுமாப்பு உண்டு. தற்பெருமை போக்கும் உண்டு. அவருக்கு துதி பாட ஒரு கூட்டமும் எப்போதும் அவருடன் உண்டு. என்னை அவமானப்படுத்தி தினமும் தன்னை புத்திசாலி என்று காட்டிக்கொள்ள அவர் விரும்புகிறார். “தங்கம் தான் சிறந்தது என்று எனக்கும் தெரியும். நான் தவறாக சொல்லும்போதெல்லாம் அவர் பத்து ரூபாய் கொடுப்பது வழக்கம். இது ஐந்து மாதங்களாக தினமும் நடக்கும் விஷயம் தான். அதன் விளைவாக என்னிடம் ரூ. 1500/- க்கு மேல் உள்ளது. இப்போது சொல்லுங்கள் “நான் முட்டாளா – அவர் முட்டாளா”?
உண்மைதான்... அந்த சிறுவன் தான் புத்திசாலி...
அந்த பெரியவர் எதிர்மறை சிந்தனை கொண்டவராக மட்டுமல்லாமல் – எதிர்மறை சிந்தனை கொண்ட ஒரு கூட்டத்தையும் தன்னுடன் சேர்த்து வைத்துள்ளார்...
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் – எந்த தன்மை கொண்டவர்களோடு நட்பு வைத்திருக்கிறீர்கள் என்பதில் தான் உங்களின் வெற்றி அடங்கி இருக்கிறது...