கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, March 22, 2021

சீப்பு வியாபாரம் - குட்டிக்கதை seeppu viyabaram kutty kathai tamil short story

முன்னொரு காலத்தில் ரோமாபுரி என்னும் நாட்டில் ஒரு பெரிய வியாபாரி இருந்தார். அவருக்கு பாபு, குமார், ராமன் என்ற மூன்று மகன்கள் இருந்தனர். தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யாரிடம் ஒப்படைப்பது என தீர்மானிக்க அவர்களுக்கு வியாபாரி ஒரு போட்டி வைத்தார். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்தில் விற்கிறார்களோ அவர் தான் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அவர்களிடம் கூறினார். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்தார். ஆனால், மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா? என்று மூன்று மகன்களும் ஆரம்பத்தில் திகைத்தனர்.

பிறகு மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு செய்தனர். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி, அவகாசம் முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டார். அதில், முதல் மகன் பாபு இரண்டு சீப்புகள் புத்த மடாலயத்திற்குள் விற்றேன் என்றான். எப்படி விற்றாய்? என்று அவனது தந்தை கேட்டார். சீடர்களிடம், இந்த சீப்பை முதுகு சொறிய உபயோகிக்கலாம் என்று கூறினேன். இரண்டு புத்த சீடர்களுக்கு அது சரியென தோன்றியது. அதனால் இருவரும் இரண்டு சீப்புகள் வாங்கினார்கள் என்றான்.

இரண்டாவது மகன் குமார், பத்து சீப்புகள் விற்பனை செய்ததாக கூறினான். ஆச்சரியத்துடன் எப்படி? என அவனது தந்தை கேட்டார். வழியெல்லாம் காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல் உள்ள புத்த மடாலயத்திற்கு செல்பவர்கள் தலைமுடி கலைந்து விடுகிறது. அப்படி கலைந்த தலைமுடியுடன் புத்தரை தரிசிக்க பக்தர்கள் செல்வது, புத்தருக்குச் செய்யும் அவமரியாதையாகத் தோன்றுகிறது என்றும், ஒரு பெரிய கண்ணாடியும் சில சீப்புகளும் வைத்தால் அவர்கள் தங்கள் தலைமுடியைச் சரி செய்து கொண்டு புத்தரை தரிசிக்க செல்வது நன்றாக இருக்கும் என்றும், ஆலோசனை கூறியதால் அச்சீடர்கள் ஒத்துக்கொண்டு பத்து சீப்புகள் வாங்கினார்கள் என்றான். இதைக்கேட்ட வியாபாரி குமாரைப் பாராட்டினார். 

பின், மூன்றாவது மகன் ராமன் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்ததாக கூறினான். எப்படி? என ஆச்சரியத்துடன் கேட்டார். புத்த மடாலயத்திற்கு ஏராளமானோர் பொருளுதவி செய்கிறார்கள். அவர்கள் உதவியை பாராட்டி புத்தரின் ஆசிகள் அவர்களை வழிநடத்தும் வண்ணம் அவர்களுக்கு ஏதாவது ஒரு நினைவுப்பரிசு வழங்கினால், மேலும் பலரும் புத்த மடாலயத்திற்கு உதவி செய்யத் தூண்டுவதற்கு உதவும் என்றேன்.

பின் நான் புத்தரின் வாசகங்களைப் பதித்து வைத்திருந்த சில சீப்புகளை நீட்டினேன். அந்த சீப்புகளை தினமும் உபயோகிக்கும் பக்தர்களுக்கு அந்த வாசகத்தை தினமும் காணும் வாய்ப்பும் கிடைக்கும், அந்த உபதேசங்கள் அவர்களைத் தினமும் வழிநடத்துபவையாகவும் இருக்கும் என்று தெரிவித்தேன். அது நல்ல யோசனை என்று நினைத்து மடாலயத் தலைவர் ஆயிரம் சீப்புகளை வாங்க ஒப்புக்கொண்டார் என்றான்.

இப்போது அந்த வியாபாரி எந்த மகனிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்தார் என்று தெரிகிறதா?

மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு விற்கப்போவது கண்டிப்பாக ஆகாத வேலை என்று நினைப்பது தான் பொதுவாக நாம் காணக்கூடிய மனோபாவம். விதி சில சமயங்களில் நம்மைக் கொண்டு சேர்க்கும் சூழ்நிலையும் கிட்டத்தட்ட இதே போலத் தான் இருக்கும். அதிலிருந்து மீள்வதற்கு வழியே இல்லை என்று முதலில் தோன்றும். ஆனால், நாம் இருக்கும் அந்த மோசமான சூழ்நிலைக்குத் தீர்வே இல்லை என்று ஆரம்பத்தில் தோன்றினாலும் ஏதாவது செய்து நல்ல தீர்வைக் காண வேண்டும் என்று தீர்மானிப்பதே அறிவு.

முயற்சிகளிலும் பல வகை உண்டு என்பதற்கு வியாபாரியின் மூன்று மகன்களின் முயற்சிகளே உதாரணம். 

நீதி: எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் மனம் துவண்டுவிடாமல், முடியாது என்று தோன்றும் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து பல்வேறு கோணங்களில் சிந்தியுங்கள். பொறுமையுடனும், நம்பிக்கையுடனும், துடிப்புடனும் செயல்பட்டால் அந்தக் கடினமான சூழ்நிலையே நீங்கள் அடையப் போகும் வெற்றிகளுக்கு ஊன்றுகோலாய் அமையும்

தமிழ்த்துகள்

Blog Archive