ஒருசமயம், தெனாலிராமன் அரசவையில் இருந்தபோது, தூக்கம் கண்ணைச் செருகியது. அதைக் கண்டு உறுப்பினர்கள் சிரித்து விட்டனர்.
அப்போது அமைச்சர், “அரசே! தெனாலிக்கு வயதாகி விட்டது. ஓய்வு கொடுங்கள்” என்றார். அரசரிடம் பதில் இல்லை.
மறுநாள் அரசர், “என் மனதில் ஒரு கேள்வி, உலகிலேயே வெண்மையான பொருள் எது? இதற்குச் சரியான பதிலை நீங்கள் சொல்லி விட்டால், தெனாலியை ஓய்வு கொடுத்து அனுப்பி விடுவேன்” என்றார்.
அமைச்சர், “வெள்ளி நகை தான்...” என்றார்.
அரசகுரு, “பால் தான்!'' என்றார்.
சிலர், “சம்பா மலர்!'” என்றனர்.
வேறு சிலர், “மல்லிகை தான்”' என்றனர்.
இன்னும் சிலர், “சுண்ணாம்பு தான்!” என்றனர்.
அரசர் திருப்தி அடையவில்லை. தெனாலியிடம் கேட்டார்.
“நாளைக்குக் கூறுகிறேன்” என்றார் தெனாலி.
மறுநாள் தெனாலி வெள்ளி நகை, கொஞ்சம் பால், சம்பா மலர், மல்லிகை மலர்கள் ஆகியவற்றை வரவழைத்தார். சுண்ணாம்பும் வந்தது.
பிறகு ஒரு பெரிய அறையில் தரை விரிப்பின் மீது அவற்றை வைத்து, கதவு மற்றும் ஜன்னல்களைச் சாத்தித் திரையிட்டார்.
வெளியில் வந்து, “அரசே! இவர்களிடம் உள்ளே போய் அவரவர்கள் வெண்மை என்று கருதும் பொருளை எடுத்து வரச் சொல்லுங்கள்...” என்றார்.
அனைவரும் உள்ளே போயினர். அவர்களுக்கு உள்ளே இருட்டில் எதுவும் தெரியவில்லை. ஒருவருக்குப் பால் பாத்திரம் காலில் இடறி, பால் தரையில் கொட்டியது. இன்னொருவர் காலில் நகைகள் இடறின. வேறொருவர் பூக்களை மிதித்து விட்டார். ஒரு பாத்திரத்தில் இருந்த சுண்ணாம்பு கவிழ்ந்தது.
மூவரும் பதறி, ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டனர்.
அதே சமயம் தெனாலிராமன் அறையில் மேற்புறக் கதவைத்திறந்தார். அறையில் ஒளி பரவியது. அப்போது அங்கிருந்த பொருட்கள் பளிச்சென்று தெரிந்தன.
அச்சமயம், அரசர் கிருஷ்ணதேவராயர் உள்ளே வந்தார்.
உடனே தெனாலிராமன், “அரசே! என்னுடைய பதில் இப்போது உங்களுக்கு விளங்கியிருக்குமே! உலகில் எல்லாவற்றையும் விட வெண்மையான பொருள் பாலோ, வெள்ளி நகையோ, சுண்ணாம்போ அல்லது மலர்களோ அல்ல. அப்படியிருந்தால், இருட்டறையில் அவை பளிச்சிட்டிருக்க வேண்டுமே! ஏன் கண்ணுக்குத் தெரியவில்லை? எனவே, உலகில் வெண்மையான பொருள் சூரியனின் பிரகாசம் மட்டும்தான். அதனால்தான் உலகின் மற்ற எல்லாப் பொருள்களும் பிரகாசிக்கின்றன” என்றார். அதைக் கேட்ட அரசர், மகிழ்ச்சியடைந்து, தெனாலியை வாரி அணைத்துக் கொண்டார்.
சபையினரிடம் அரசர், “தெனாலிராமன் நமக்கு ஏன் இத்தனை பிரியமானவனாக இருக்கிறான் என்பதை இப்போது நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்களே...?” என்றார்.
“தெனாலிக்கு ஓய்வு கொடுத்து அனுப்புங்கள்” என்று யோசனை கூறியவர்கள் எல்லாம் வாயடைத்துப் போயினர்.