ஒரு மொழியின் ஓர் எழுத்தின் ஒலியை அதே மொழியின் இன்னொரு எழுத்தை அல்லது எழுத்துகளைச் சேர்த்து எழுத முடியுமா?
அப்படி எழுத முடிந்தால் பின் அந்த இரண்டு எழுத்துகள் எதற்கு ?
எதையாவது ஒன்றை வைத்துவிட்டு இன்னொன்றை எடுத்து விட வேண்டியதுதானே?
இப்படிப் பட்ட சிக்கலில் மாட்டிக் கொண்ட உயிர் எழுத்துகள்தாம் ஐ எனும் எழுத்தும் ஔ எனும் எழுத்தும்.
பெரியாரிய எழுத்துச் சீர்திருத்தம் வலியுறுத்திய முக்கியமான மாற்றங்களில் ஐயாவை அய்யா எனப் பரிந்துரைத்ததும் ஒன்று.
ஆனால் இந்தச் சிக்கல் நம் மொழியில் எப்பொழுது தோன்றியது?
சென்ற நூற்றாண்டிலா என்றால் இல்லை.
அது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தோன்றிவிட்டது.
அவரிடமும் இக்கேள்வி எழுப்பப்பட்டது.
“அஇ என்பதை சேர்த்தால் ஐ வருகிறதே! ஐ எனும் எழுத்தை அஇ என்று எழுதினால் என்ன தவறு?” என்று ஒருவன் கேட்கிறான்.
அருகில் இருக்கும் இன்னொருவன், “ ஏன் அதை அய் என்று எழுதக் கூடாதா அய் என்று எழுதினாலும் ஐ என்னும் ஒலி வருமே? ” என்கிறான்.
தொல்காப்பியர்தான் என்ன செய்வார் பாவம்?
இருதரப்பிலும் நியாயம் இருக்கும்போது தீர்ப்புச் சொல்லும் இடத்தில் இருப்பவருக்குத்தானே சிரமம் தெரியும்?
கடைசியில் தொல்காப்பியரும் நம் வழிக்குத்தான் வர வேண்டியிருக்கிறது.
“அட போங்கப்பா..!
நீங்க இரண்டுபேர் சொல்றதும் சரிதான்!” என்று சொல்லிவிட்டார்.
ஆனால் அவர்கள் விடவில்லை.
“அப்படியெல்லாம் சொல்லிட்டுப் போக முடியாது. சொன்னத எழுதிக் கொடுங்க” என்று கேட்கவே எழுதியும் கொடுத்துவிட்டார்.
அதுதான்,
“அகர இகரம் ஐகாரம் ஆகும்”
“அகர உகரம் ஔகாரம் ஆகும்”
“அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்”
( தொல். மொழிமரபு-21,22,23 )
இப்ப உள்ள தமிழில் சொல்லனும் என்றால்,
“அ வோட இ சேர்த்தா ஐ“ ( அஇ = ஐ )
“அ வோட உ சேர்த்தா ஔ” (அஉ = ஔ )
“அ வோட ய் சேர்த்தா அதுவும் ஐ மாதிரி இருக்கும்” ( அய் = ஐ )
என்பதுதான் இதற்குப் பொருள்.
ஆனால் நாம் கவனிக்க வேண்டியது,
ஐ என்கிற எழுத்தை அய் எனவோ அஇ எனவோ எழுதிவிட முடிகிறபோது ஐ என்ற எழுத்துத் தமிழில் எதற்கு? அதை நீக்கிவிடலாமே என்று தொல்காப்பியர் நீக்கிவிடவில்லை.
அதற்கும் வலுவான காரணங்கள் இருந்தன. இருக்கின்றன.
பொதுவாக நம் இலக்கண மரபில்,
ஒரு சொல்லில் ஒரு எழுத்து இருக்க வேண்டிய இடத்தில் இன்னொரு எழுத்து(கள்) வந்து பொருளை வேறுபடுத்தாமல் இருக்குமானால் அந்த எழுத்துப் போலி எழுத்து எனப்படுகிறது.
இதன் அடிப்படையில் பார்த்தால்,
ஐ என்பதை அய் என்று எழுதுவது போலி.
எனவே ஐயா என்று எழுதுவதே ஒரிஜினல்.
ஐ என்பதை அய் என்று சொல்லிவிடலாம் என்றால் பின் அந்த எழுத்துத் தமிழ் நெடுங்கணக்கில் எதற்கு? ஐ என்கிற எழுத்தையும், அதே போல உள்ள ஔ என்கிற எழுத்தையும் நீக்கித் தமிழ் உயிர் எழுத்துகளைப் பத்தாக்கிவிடலாம் என்ற தமிழறிஞர்களின் குரலும் ஒலிக்கத்தான் செய்தது . இதனை ஒட்டிய பெரியாரிய எழுத்துச் சீர்திருத்தக் கருத்திற்குப் பின் இக்குரல் சென்ற நூற்றாண்டில் மேலும் வலுப்பெற்றது.
இதன் தொடர்ச்சியாகப் பல தமிழறிஞர்களும் ஐ என்கிற எழுத்தை விட்டுவிட்டு அது மெய்யோடு இணைந்து வருமிடத்திலும் அய் என்றும் ஔ என்கிற எழுத்தை அவ் என்றும் எழுதலாயினர். ( சாலை இளந்திரையன் = சாலய் இளந்திரயன். பழமலை = பழமலய் ) ஆனால் அது நிலைபெறவில்லை.
வலைத்தளத்திற்கு வந்த ஆரம்ப நாட்களில் நான் ஐயா என்றே எழுதி இருக்கிறேன்.
“ வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே ” என்று தொல்காப்பியம் சொல்லும்.
இதற்குப் பொருள், கல்வி கேள்விகளில் உயர்ந்தவர்களே உயர்ந்தவர்கள். அவர்கள் வழங்குவதே வழக்கு.
என்போன்றோர் அதைப் பார்த்துக் கற்கின்றவர்.
எனவே நான் மதிக்கும் எழுத்தாளுமைகள் பலரும் இங்கு அய்யா என எழுதக் கண்டதால் அதுவும் ஏற்கப்பட்ட வடிவம்தானே எனக்கருதி, ஐயாவை அய்யா என மாற்றி எழுதத் தொடங்கினேன். அதற்கு இலக்கண அமைதியும் இருந்தது.
ஆனால் என்னால், ஐ என்னும் எழுத்தை முற்றிலும் விட முடியவில்லை.
ஐ எனும் எழுத்தை அய் என எழுதும் என்னைப் போன்ற பலர்க்கும் எல்லா இடங்களிலும் இந்த ஐ யை விட்டுவிட்டு அதற்குப் பதில் அய் என்று எழுத முடியாது.
சென்ற பதிவில் காட்டிய, பேதைமை என்ற சொல்லை “பேதய்மய்” என்று எழுதிப் பார்த்தால் எனக்கே சிரிப்பு வருகிறது. இது தமிழ்ச்சொல் போன்றே எனக்குத் தோன்றவில்லை. உங்களுக்கும் இது ஏதோ தட்டச்சுப் பிழை என்றுதான் தோன்றும் என நினைக்கிறேன்.
எனவே ஐ என்ற எழுத்து வருமிடத்தில், அதனை அய் என எழுதச் சொல்லி விட்டு,
அது உயிர்மெய்யோடு வரும்போது மட்டும் ( எடுத்துக்காட்டு; தொகை – இதில் கை என்பது க்+ஐ சேர்ந்தது. ஐ என்பதை அய் என மாற்றினால் பின் இதைத் ‘தொகய்’ என்றுதானே எழுத வேண்டும்?) ஐ சேர்ந்த மெய்யின் வடிவத்தில் எழுதச் சொல்லும் இரட்டை நிலைப்பாட்டைத் தவிர்க்கலாம் என்பதே என் பரிந்துரை.
“ஏன் பெரியாரியச் சீர்திருத்தத்தின் அடிப்படையில் ஐகார உயிர் மெய்யையும் மாற்றித் தொகை என்பதை தொகய் என்று சொல்வதில் என்ன தவறு?” என்றால் அப்படிச் சொல்லும் போது, மரபிலும் இலக்கணத்திலும் சில சிக்கல்கள் நேர்கின்றன. ( இதைச் சரி என்று யாரேனும் வாதிட்டால் அவர்களுக்கு மறுமொழி சொல்வதற்காக அதை இப்போது சொல்லாமல் பதுக்கி வைத்திருக்கிறேன் :). பதிவு நீண்டுவிடக் கூடாது என்பதும் முக்கிய காரணம். )
இறுதியாகப் பதிவின் தலைப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு என் புரிதலின் அடிப்படையிலான பதில்,
‘ஐயா’ என்று எழுதுவது மிகச் சரியானது.
அய்யா என்பது இன்றைய உயர்ந்தோர் வழக்கில் பரவலாக நம்மிடையே இருக்கிறது.
அப்படித் தொல்காப்பியர் கால மொழிப்பயில்விலும் இதைப்போலச் சொல்ல அனுமதி இருந்திருக்கிறது.
எனவே ஐயா என்பதை அய்யா என்று வழங்குவதையும் தவறன்று என்று ஏற்க வேண்டி இருக்கிறது.
என்ன இருந்தாலும் ஐ என்கிற எழுத்தை விட்டுவிட வேண்டாமே !
சரி. நீங்கள் இனி எப்படிச் சொல்லப் போகிறீர்கள்?
ஐயாவா....? அய்யாவா...?