சீன தேசத்தில் அவர் சிறந்த ஓவியர்.
ஒரு நாள் அவர் ஒரு ஓவியம் வரைந்தார். அதைப் பார்த்தவர்கள் எல்லாம் பாராட்டினார்கள். பெருமையாகப் புன்னகைத்துக் கொண்டார்.
இரண்டு காளை மாடுகள் சண்டை போடுவது போன்ற ஓவியம் அது.
எனவே, அந்த ஓவியத்தைப் பத்திரமாகச் சுருட்டி எடுத்து வைத்தார்.
ஓவியத்தை ரசிக்கத் தெரிந்தவர்கள் வந்தால் மட்டும் அதை வெளியே எடுத்துக் காட்டுவார்.
ஒரு நாள், அலமாரியைச் சுத்தம் செய்வதற்காக, அந்த ஓவியத்தை எடுத்தார்.
கறையான் அரிக்காமல் இருப்பதற்காக, அறைக்கு வெளியே சூரிய ஒளிபடும்படித் தொங்க விட்டார்.
அப்போது, தற்செயலாக அந்தப் பக்கம் வந்த ஆடு மேய்க்கும் இடையன் ஓவியத்தைப் பார்த்து வாய் விட்டுச் சிரித்தான்.
“ஓவியம் பற்றி, உனக்கு என்ன தெரியும்.. இவை உயிருள்ள காளைகள் போல் இருப்பது தெரியவில்லையா?” ஓவியர் கேட்டார்.
“அவை காளைகள் மாதிரி தான் இருக்கின்றன. ஆனால்...”
“என்ன ஆனால்? என் ஓவியத்தில் என்ன குறை உணர்கிறாய்?”
“மாடுகள் சண்டை போடும் போது கொம்புகளை முட்டி மோதிக் கொள்ளும் போது வாலை, இரண்டு கால்களுக்கு நடுவில் வைத்துக் கொள்ளும். ஆனால் உங்கள் ஓவியத்தில், மாடுகள் தங்கள் வாலை உயர்த்திக் கொண்டு, சண்டையிடுகின்றன. மாடுகள் இப்படிச் சண்டை போட்டு இது வரை நான் பார்த்ததே இல்லை"
என்று விளக்கினான் இடையன்.
படிப்பறிவை சில இடங்களில் பட்டறிவு (அனுபவ அறிவு) முந்தி விடுவது இப்படித்தான்.