கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, March 22, 2021

விவேகம் - குட்டிக்கதை vivegam kutty kathai tamil short story

துறவி ஒருவர் பெரிய மடாலயத்தில் சீடர்கள் சிலருக்குக் கல்வி போதித்து வந்தார். 
அவர் எப்போதும் தன்னிடம் சீடனாகச் சேர்பவர்களைப் பரிசோதித்து தான் சேர்ப்பார். 

அது போல் ஒரு நாள் மூன்று பேர் வந்து, அந்த துறவியைச் சந்தித்து அவரது சீடர்களாக ஆசைப்படுகிறோம் என்று கூறினார்கள். 
அந்த துறவியும் அவர்களை மறுநாள் வந்து பார்க்குமாறு கூறினார். அவர்களும் "சரி!" என்று சொல்லி சென்று விட்டனர். 

பின் துறவி தன் சீடன் ஒருவனிடம் "மறுநாள் அவர்கள் வரும் போது என் காதில் ஓணான் புகுந்து இறந்துவிட்டதாகச் சொல்" என்று சொன்னார். 

அந்த மூவரும் மறுநாள் வந்தபோது, துறவியின் சீடனும் அவர்களிடம் துறவி சொன்ன மாதிரியே சொன்னான். 

அதற்கு முதலாமவன், "துறவியின் ஜாதகப்படி சனித்திசை என்பதால் இப்படி நடந்திருக்கலாம்!" என்று வருத்தத்துடன் சொல்லிச் சென்றான். 

இரண்டாமவன், "துறவி போன ஜென்மத்தில் செய்த பாவத்தால், இவ்வாறு ஆகியிருக்கும்!" என்று கவலையுடன் சென்றான். 

ஆனால் மூன்றாமவன், அந்த சீடனின் முகத்தை உற்றுப் பார்த்து, துறவி நிச்சயம் இறக்கவில்லை என்று அடித்துக் கூறினான். 

அதுவரை மடாலயத்திற்குள் இருந்த துறவி வெளியே வந்து "எப்படி சரியாகச் சொன்னாய்?" என்று கேட்டார். 

"குருவே! உங்கள் இறப்பினால் வரக்கூடிடய வருத்தம் உங்கள் சீடனின் முகத்தில் சிறிது கூட தென்படவில்லை. அதிலும் ஒருவரின் காதுக்குள் ஓணான் நுழைவது என்பது சாத்தியமே இல்லை. ஆகவே தான் நான் உறுதியுடன் சொன்னேன்" என்று கூறினான். 

அவனது விவேகத்தைக் கண்டு திகைத்துப் போன துறவி, அன்று முதல் அவனைத் தனது சீடனாக ஏற்றுக்கொண்டார்.

தமிழ்த்துகள்

Blog Archive