கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, March 22, 2021

அன்பு - குட்டிக்கதை anbu kutty kathai tamil short story

ஒரு நாள் குருவும் அவரது சீடனும் குளக்கரையில் அமர்திருந்தார்கள். 
சீடன் பல கேள்விகளைக் குருவிடம் கேட்டுக் கொண்டிருந்தான்; குருவும் நிதானமாக பதிலளித்துக் கொண்டிருந்தார்.

"குருவே! சுயநலமிக்க அன்பிற்கும் சுயநலமில்லாத அன்பிற்கும் வித்தியாசம் என்ன?" எனக்கு கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்களேன் என்றான். 
குரு சீடனுக்குப் பதிலை எப்படி விளக்குவது என்று சுற்றும் முற்றும் பார்த்தார். 
ஒரு இளைஞன் குளக்கரையில் தூண்டிலைப் பிடித்துக் கொண்டு அமர்திருந்தான். 
அவனருகில் கூடையில் அவன் பிடித்துப் போட்ட மீன்கள் துடித்துக் கொண்டிருந்தது.

குரு, அந்த இளைஞனிடம் பேச்சு கொடுத்தார். 
தம்பி! மீன் என்றால் ரொம்ப பிடிக்குமோ? என்றார். 
அவனும் ஆமாம் ஐயா மீன் என்றால் எனக்கு உயிர். 
பிடித்து வைத்த மீன்களையெல்லாம் இன்றிரவு என் மனைவியை சமைக்கச் சொல்லி ஒரு பிடி பிடிக்கப் போகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள், குளத்தில் நிறைய மீன் கிடைக்கிறது என்றான்.

குருவோ, எனக்கு வேண்டாம் தம்பி என்று புன்சிரிப்புடன் கூறி மறுத்து விட்டார். நடப்பதையெல்லாம் சீடன் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். 
அந்த இளைஞனும் சற்று நேரத்தில் மீன் பிடித்து விட்டு கிளம்பிவிட்டான்.

ஒரு வயது முதிர்ந்த பெரியவர் குளக்கரையை நோக்கி வருவதைக் குரு பார்த்து விட்டார். 
அவர் கையில் ஒரு வெள்ளை நிறப் பை இருந்தது. 
குரு அதை உற்றுப் பார்த்தார்; அது பையின் நிறமல்ல, அதிலிருக்கும் பொரியின் நிறம் என்பதைத் தெரிந்து கொண்டார். 
அந்த பெரியவர் குளக்கரையில் வந்து அமர்ந்தார். 
பையிலிருந்த பொரியை எடுத்து தண்ணீரில் தூவினார். நூற்றுக்கணக்கான மீன்கள் பொரி இருக்கும் இடத்தை எறும்புகள் போல மொய்த்தன. 

குரு, அவரிடமும் பேச்சுக் கொடுத்தார். என்ன பெரியவரே! மீன் என்றால் ரொம்ப பிடிக்குமோ? என்று சற்று முன் அந்த இளைஞனிடம் கேட்ட அதே கேள்வியைப் பெரியவரிடம் கேட்டார். 
பெரியவரும், ஆமாம் ஐயா! மீன் என்றால் எனக்கு உயிர்; நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வந்து இங்குள்ள மீன்களுக்கு உணவளிப்பேன் என்றார். அவரிடம் பேசி முடித்து விட்டு சீடனின் பக்கம் திரும்பினார். 

பார்த்தாயா! இருவரும் மீனின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார்கள் என்பது அவர்கள் "மீனென்றால் உயிர்" என்று கூறும் போதே தெரிந்திருக்கும். அந்த இளைஞன், மீன்களை "ருசி" என்னும் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டான். 
அவன் தன்னுடைய சந்தோசத்தில் மட்டுமே கவனம் செலுத்தினான். ஆனால், அந்த பெரியவர் மீன்கள் பசியாறுவதற்கு சுயநலமில்லாமல் உணவளித்தார். 
இருவருக்கும் மீன்கள் பிடித்திருந்தது, ஆனால், இருவரின் நோக்கம் வேறு. மொத்தத்தில், அன்பில் சுயநலம் இருந்தால் அது அன்பே இல்லை; சுயநலமில்லாத அன்பு தான் உண்மையானது, நிரந்தரமானது என்று குரு சீடனுக்குப் புரிய வைத்தார்.

தமிழ்த்துகள்

Blog Archive