பொங்கல்
திருவிழா
முன்னுரை
'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்', என்கிறார் திருவள்ளுவர். தமிழர் தம் வாழ்வும் பண்பாடும் இயற்கையோடு
இணைந்தது. காடு கழனிகளில் விவசாயத்திற்குத் தனக்கு உறுதுணையாய் இருந்த கதிரவனுக்கும்
மாடுகளுக்கும் நன்றி செலுத்தும் விழாவே பொங்கல் விழா. ஒவ்வோர் ஆண்டும் நான்கு நாள்கள்
கொண்டாடப்படும் பொங்கல் விழா பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
போகி விழா
'பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல' என்கிறது நன்னூல். மார்கழி இறுதி நாளில் வீட்டில்
சேர்ந்திருக்கக்கூடிய பழையவற்றை ஒதுக்கி எரிப்பர். வீடுகளுக்கு வெள்ளையடித்துத் தைமகளை
வரவேற்கத் தயாராகும் நாளே போகி விழா.
பொங்கல் விழா
புத்தரிசியில் புதுப்பானையில் சர்க்கரைப் பொங்கலிட்டு, செங்கரும்பு, இஞ்சி, மஞ்சளோடு கதிரவனை அதிகாலையில் வழிபடும் விழா பொங்கல் விழா. சிறியவரும் பெரியவரும்
'பொங்கலோ பொங்கல்' என்று உற்சாகமாகக் குரல் கொடுத்துத் தை மகளை வரவேற்பர். கதிரவனுக்கு
நன்றி பாராட்டும் விழா இதுவாகும்.
மாட்டுப் பொங்கல்
உழுதல், பரம்படித்தல், நீர் இறைத்தல், பொதி சுமக்கும் வண்டிகளை இழுத்தல் போன்ற விவசாயப் பணிகளுக்கு உழவரோடு துணை நிற்பவை மாடுகள். அவற்றிற்கு நன்றி பாராட்ட
எடுக்கும் விழா மாட்டுப் பொங்கல் ஆகும். மாடுகளைக் குளிப்பாட்டி அதன் கொம்புகளுக்கு
வண்ணம் பூசிப் பொட்டிட்டு வணங்குவர். செங்கரும்பும் பொங்கலும் தின்னக் கொடுப்பர். பசுந்தழைகளை
வேண்டுமளவு வழங்குவர்.
காணும் பொங்கல்
'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்'
என்ற நம் பழந்தமிழரின் பண்பாடு போற்றும் விழா இதுவாகும். பெரியோர்களிடம்
சென்று ஆசி வாங்கி வரும் நன்னாள் காணும் பொங்கல் திருநாள்.
முடிவுரை
உழவர்கள் சேற்றில் கால் வைக்காவிட்டால் நாம் சோற்றில்
கை வைக்க முடியாது. வேளாண்மைக் கருவிகள் பல வந்துவிட்டாலும் விளைச்சலுக்கு
உதவும் கதிரவனுக்கும் மாடுகளுக்கும் நன்றி பாராட்டுவது பொங்கல் விழா. தமிழரின் நன்றி
மறவாப் பண்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு. தமிழர் திருநாளாம் பொங்கலைக் கொண்டாடுவோம், நன்றி மறவாத் தமிழராய் நடை போடுவோம்! தமிழ்த்துகள்
- கவிஞர்
கல்லூரணி முத்து முருகன் அலைபேசி -9443323199 தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற
பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்