ஒரு கடற்கரையில் பாண்டியன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் வசதி வாய்ந்தவன், அவனிடம் ஒரு காகம் இருந்தது. தினமும் அவன் அந்த காகத்திற்கு நிறைய உணவு கொடுப்பான். அவன் கொடுத்த உணவை உண்டு அந்த காகம் மிகவும் பருத்தது.
அந்த காகம் மிகவும் அகங்காரம் பிடித்தது. அது எப்பவுமே எல்லோரிடமும் கர்வமாக பேசிக்கொண்டு இருக்கும். ஒரு நாள் அந்த கடற்கரையில் சில அன்னப்பறவைகள் நிற்பதை பார்த்த காகம், அந்த அன்ன பறவைகளிடம் சென்று சொன்னது, "நீங்கள் பார்ப்பதற்கு தான் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், ஆனால் என்னைப்போல் உங்களால் பறக்க முடியாது" என்று கர்வமாக சொன்னது.
அப்போது ஒரு அன்னப்பறவை சொன்னது, "நண்பா! நாங்கள் இங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்க தான் வந்துள்ளோம், உன்னுடன் எந்த வாக்குவாதமும் செய்வதற்கு எங்களுக்கு நேரமில்லை" என்றது. உடனே அந்த காகம், "இல்லை, உங்களுக்கு தைரியம் இருந்தால் என்னுடன் போட்டி போடுங்கள்" என்றது.
அதற்கு ஒரு அன்னப்பறவை சரி என்ன போட்டி என்று கேட்டது. அதற்கு காகம் சொன்னது, "நாம் இருவரும் இந்த கடற்கரையில் இருந்து சில மைல்கள் பறந்து செல்வோம், யார் முதலில் செல்கிறார்களோ அவர்கள் தான் சிறந்தவர்கள்" என்று சொன்னது. உடனே அந்த அன்னப்பறவையும் சரி என்றது. இந்த காகம் தான் பருத்து இருப்பதை மறந்து விட்டு மிகவும் வேகமாக பறந்து சென்றது. அன்னப்பறவையும் அதனால் முடிந்த அளவிற்கு வேகமாக பறந்து சென்று கொண்டு இருந்தது.
சிறிது தூரம் சென்ற பிறகு காகம் மிகவும் சோர்வடைந்தது. அதனால் இப்போது எதுவும் செய்ய முடியவில்லை. கீழே சென்றால் கடலில் மூழ்கி இறந்து விடுவோம் என்று அதற்கு நன்றாகவே தெரியும். காகம் என்ன செய்வதென்று தெரியாமல் மிகவும் களைப்பாக பறந்து கொண்டே இருந்தது.அதை பார்த்த அன்ன பறவை, "நண்பா, நான் உன்னை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். உனக்கு என்ன ஆயிற்று மிகவும் களைப்படைந்து விட்டாயே" என்றது. அதற்கு காகம் சொன்னது, "என்னால் முடியவில்லை. இன்னும் சிறிது தூரம் சென்றால் நான் நிச்சயமாக இந்த கடலில் விழுந்து இறந்து விடுவேன்" என்றது.
உடனே அன்னப்பறவை, "சரி நீ கவலை படாதே. என் முதுகில் ஏறிக்கொள். நான் உன்னை கரையில் கொண்டு சேர்க்கிறேன்" என்றது. உடனே காகமும் அன்னப்பறவை முதுகில் ஏறி கரைக்கு பத்திரமாக சென்றது. கரைக்கு சென்ற காகம் அன்னப்பறவையிடம்
"நண்பா என்னை மன்னித்துவிடு நான் மிகவும் அகங்காரம் பிடித்து உன்னிடம் பேசி விட்டேன், நான் அவ்வாறு உன்னிடம் பேசி இருக்கக் கூடாது. நீ மட்டும் எனக்கு உதவி செய்யவில்லை என்றால் நான் நிச்சயமாக இன்று இறந்து இருப்பேன்" என்று அன்னப்பறவையிடம் மன்னிப்பு கேட்டது.
*நீதி: கர்வம் என்றைக்கும் உதவாது.