பனிவிழும் இரவில்
மாடடைக்குடிலில்
மன்னவர் வந்து பிறந்தாரே!
இனிவரும் நாளில் இன்னல்கள் நீங்கும் இன்பத்தின் கதவுகள் திறந்தாரே!
மரியவள் மடியில் மாணிக்கம்போலே மகிழ்ச்சியின் தேவன் உதித்தாரே!
மன்னர்கள் எல்லாம் மண்டியிட்டு அந்த மழலை இயேசுவைத் துதித்தாரே!
தந்தை வளனின் சிந்தை குளிர சிறந்தவராக வளர்ந்தாரே!
மேய்ப்பனை இழந்த மந்தையாம் மக்களைக் காத்திடும் நல்மொழி மலர்ந்தாரே!
அயலாருக்கும் அன்பினைக் காட்டு
அது தான் அன்பென்று உரைத்தாரே!
இயலாதவருக்கு ஈகைசெய் என்று இறைவனின் விருப்பத்தை நிறைத்தாரே!
பரமபிதாவின் வரம்பெற்ற ஏசு அற்புதங்கள் பல
செய்தாரே!
பாவங்கள் விடுத்துப் பரமனை அடையும் வரமெனும்
வான் மழை பெய்தாரே!
இன்னாசெய்தார்க்கும் இனியன செய்வீர்
சொன்னார் வாழ்ந்தார் இயேசுபிரான்...
கன்னத்தில் அறைந்தவன் மனம் திருத்திடவே
மறு கன்னம் காட்டினார் அன்பின் மகான்...
குழந்தைகள் போலே குணத்தினைப் பெறுங்கள் குழந்தை இயேசு சொல்லுகிறார்
மழையெனப் பொழிந்த மலைப்பொழிவாலே
மனிதர் நம்
இதயத்தை வெல்லுகிறார்
ஆதவன் உதிக்கும் முன் மாதவன் உதித்தார்
ஆனந்தம் கொள்வோம் தோழர்களே!
வானின் வெண்ணிலவும் மின்னும் விண்மீன்களும் வாழ்த்துகள் பாடும்
நாள் இதுவே!
கிறித்துவின் பிறப்பினைக் கிறித்துமஸ் நாளாய்க் கொண்டாடி இன்புறும்
நாள் இதிலே
கிறித்துவத் தோழிகாள்! கிறித்துவத் தோழர்காள்!
வாழ்த்துகள் வாழ்த்துகள்
வாழ்த்துகளே
வாழ்த்துகளுடன்
சேவியர்
தமிழாசிரியர்
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆலங்குடி புதுக்கோட்டை மாவட்டம்