துறவி ஒருவர் தனக்குத் தேவையான பொருள்களைத் தூக்கிக் கொண்டு மலை உச்சியை நோக்கி ஏறிக் கொண்டிருந்தார்.
செங்குத்தான மலை.
எனவே, மேலே ஏறஏற சுமை அதிகமாகி மூச்சு வாங்கத் துவங்கியது அவருக்கு.
சற்று தூரம் இன்னும் முன்னால் போனதும், அங்கே ஒரு மலைவாழ் சிறுமி தனது மூன்று வயதுத் தம்பியைத் தூக்கிக் கொண்டு உற்சாகமாய்ப் பாடல் ஒன்றும் பாடிக் கொண்டு மிகச் சாதாரணமாய் மலை உச்சி நோக்கிப் போவதைப் பார்த்தார்.
துறவிக்கோ வியப்பு.
அவர் சிறுமியைப் பார்த்துக் கேட்டார்.
"என்னம்மா... இவ்வளவு சிறிய பையைத் தூக்கி கொண்டே மலை ஏற என்னால் முடியவில்லையே... உன்னால் எப்படியம்மா இவ்வளவு பெரியவனைத் தூக்கிக் கொண்டு ஏற முடிகிறது...?"
அதற்கு அந்தச் சிறுமி பதில் சொன்னாள்.
"அய்யா... நீங்கள் தூக்கிக் கொண்டிருப்பது ஒரு சுமையை... ஆனால், நான் தூக்கிக் கொண்டிருப்பதோ என் தம்பியை...!"
துறவிக்குப் புரிந்தது...
'அன்பு எதையும் சுமக்கும்'